பிரேமலு வெற்றி.. மமிதா பைஜுவுக்கு தமிழில் குவியும் வாய்ப்புகள்.. தட்டித்தூக்கிய ஸ்போர்ட்ஸ் ஹீரோ!
சென்னை : மலையாளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் பிரேமலு படத்தின் நாயகி மமிதா பைஜுவை நடிகர் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
மலையாள இயக்குநர் க்ரீஷ் டிஏ இயக்கத்தில் வெளியான திரைப்படம் பிரேமலு. நடிகர் ஃபகத் ஃபாசில் தயாரிப்பில் உருவான இந்த திரைப்படத்தில் நஸ்லன், மமிதா பைஜு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். கல்லூர் காலத்தில் வரும் காதலையும், அதனை சுற்றி நடக்கும் சம்பவங்களையும் வைத்து உருவான இந்த திரைப்படம் பிப்.8ஆம் தேதி ரிலீஸாகியது.

சமகால காதலை இவ்வளவு சுவாரஸ்யமாக எந்த படமும் வெளிக்காட்டவில்லை என்று விமர்சகர்களால் பாராட்டப்பட்டது. மலையாளம் மட்டுமல்லாமல் தென் மாநிலங்களில் பிரேமலு திரைப்படம் வசூலில் சக்கப்போடு போட்டது. இதனை பார்த்த இயக்குநர் ராஜமெளலியின் மகன் கார்த்திக்கேயா, பிரேமலு படத்தின் தெலுங்கு டப்பிங் உரிமையை வாங்கி வெளியிட்டார்.
இதனால் வசூல் ரூ.100 கோடியை எட்டியது. தெலுங்கு மட்டுமல்லாமல், மார்ச் 15ல் தமிழில் டப்பிங் செய்யப்பட்டு ரிலீஸாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மஞ்சுமல் பாய்ஸ் படத்தை தொடர்ந்து பிரேமலு படத்தையும் தமிழ் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். சென்னையிலும் உள்ள பிரபல திரையரங்குகளில் பிரேமலு திரைப்படம் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் இந்த படத்தின் நாயகி மமிதா பைஜுவுக்கு பல்வேறு மொழிகளிலும் இருந்தும் வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. மலையாள நாயகிகள் வழக்கமாகவே தமிழ், தெலுங்கு மொழிகளில் எளிதாக வாய்ப்பை பெறுவார்கள். அந்த வகையில் மலையாள சினிமாவின் அடுத்த பெரிய வரவாக மமிதா பைஜு இருப்பார் என்று பார்க்கப்படுகிறது.
இவர் ஏற்கனவே ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் வெளியாகவுள்ள ரிபெல் திரைப்படத்தில் நடித்துள்ளார். தற்போது நடிகர் விஷ்ணு விஷாலுடன் ஜோடியாக மமிதா பைஜு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இயக்குநர் ராம்குமார் இயக்கத்தில் முண்டாசுப்பட்டி, ராட்சசன் படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக விஷ்ணு விஷாலுடன் இணைந்துள்ளார்.
காதல் மற்றும் ஃபேண்டஸி ஜானரில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானலில் நடைபெற்று வந்தது. இதன் புகைப்படங்களை நடிகர் விஷ்ணு விஷாலே அவரது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் பிரேமலு படத்தின் நாயகியான மமிதா பைஜுவை விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக்கியுள்ளது படக்குழு.
ஏற்கனவே விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான கட்டா குஸ்தி திரைப்படத்தில் மலையாள நடிகையான ஐஸ்வர்யா லட்சுமி நடித்திருந்தார். அந்த படம் பெரிய ஹிட்டடித்த நிலையில், மீண்டும் மலையாள நாயகியுடன் விஷ்ணு விஷால் ஜோடி சேர்ந்துள்ளார். மீண்டும் ரொமான்ஸ் ஜானரில் மமிதா பைஜு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











