மலையாள நடிகையை துன்புறுத்திய வழக்கு.. குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை.. மஞ்சு வாரியர் விளாசல்
சென்னை: கடந்த 8 ஆண்டுகளாக கேரள சினிமாவில் பெரும் புகைச்சலை கிளப்பிய சம்பவம் அல்லது வழக்கு என்றால் அது பிரபல நடிகை ரௌடிகளால் கடத்தப்பட்டு, பாலியல் சீண்டலுக்கு ஆளானதுதான். இப்படி இருக்கும்போது முதலில் நடிகையை கடத்திய ரவுடிகளை காவல்துறை கைது செய்தது. அதன் பின்னர் இந்த சதித்திட்டத்தில் நடிகர் திலீப்புக்கு தொடர்பு உள்ளது என்று தகவல்கள் வெளியானது. இது அனைவரையும் திடுக்கிட வைத்தது.
இந்த வழக்கில் திலீப்பிற்கு சம்பந்தம் உள்ளது என்ற தகவல்கள் தீயாக பரவி மொத்த திரையுலகையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அதன் பின்னர் அவரது மனைவி மஞ்சு வாரியர் விவாகரத்து பெற்றார். இவர்களின் விவாகரத்திற்கு இந்த விவகாரம் தான் காரணம் என்று ஒரு பக்கம் புகைச்சலாக இருந்தது. இப்படி இருக்கும்போது இந்த வழக்கில் முக்கியமான சாட்சியங்களில் ஒருவராக மஞ்சு வாரியர் கருதப்பட்டார். அவரிடமும் பல கட்டங்களாக விசாரணை நடைபெற்றது.

இப்படி இருக்கும்போது இந்த வழக்கில் தீர்ப்பு கடந்த 8ஆம் தேதி அளிக்கப்பட்டது. மொத்தம் 8 பேர் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டனர். இதில் முதல் 6 பேருக்கு நீதிமன்றம் தண்டனை வழங்கியது. அப்படி இருக்கும்போது 8வதாக வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபராக நடிகர் திலீப் இருந்தார். வழக்கில் 7 வது மற்றும் 8 வது குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டனர். இது திலீப் ஆதரவாளர்களுக்கு மகிழ்ச்சியை அளித்தது. அதே நேரத்தில் பாதிக்கப்பட்ட நடிகைக்கு ஆதரவாக தீர்ப்பு வரும் என்று எதிர்பார்த்தவர்களுக்கு அதிருப்தியாக இருந்தது.
மஞ்சு வாரியர்: தீர்ப்பு வந்த நாளில் இருந்து, நடிகர் திலீப்பின் முன்னாள் மனைவி நடிகை மஞ்சு வாரியரின் ரியாக்ஷன் என்ன என்பது பலரது கேள்வியாக இருந்தது. இந்நிலையில் மஞ்சு வாரியர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார். அதாவது, நான் மரியாதைக்குரிய நீதிமன்றத்தை மதிக்கிறேன். ஆனால் இந்த விஷயத்தில் முழுமையாக நீதி நிலைநாட்டப் பட்டதாகக் கூற முடியாது. ஏனென்றால் குற்றம் செய்தவர்கள் மட்டுமே இப்போது தண்டிக்கப்பட்டுள்ளனர். இதைத் திட்டமிட்டவர்கள், அவர்கள் சுதந்திரமாக இருக்கிறார்கள். அது யாராக இருந்தாலும் அது அச்சுறுத்தும் உண்மை என்பதை உணர வேண்டும்.

எதிர்பார்ப்பு: வெளியில் சுதந்திரமாக உலா வரும் குற்றவாளிகளும் தண்டிக்கப்பட்டால் தான் நீதி முழுவதுமாக நிலைநாட்டப்பட்டதாக ஆகும். காவல்துறை மற்றும் சட்டத்துறையின் மீது நான் உட்பட சமூகத்தில் அனைவருக்கும் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தும் வகையில் இந்த வழக்கில் உண்மை கண்டறியப்பட வேண்டும். இது அந்த நடிகைக்கு மட்டுமல்ல. இந்த நாட்டில் உள்ள ஒவ்வொரு பெண்ணுக்கும், ஒவ்வொரு மனிதனுக்கும் தேவைப்படும் நீதி. பணியிடத்திலும், தெருக்களிலும், வாழ்க்கையிலும் பயமின்றி தலை நிமிர்ந்து நடக்கக் கூடிய சூழல் அவர்களுக்கு இருக்க வேண்டும். அதற்கு நீதித்துறையும் சட்டத்துறையும் வழிவகை செய்ய வேண்டும்" என்று தெரிவித்துள்ளார். அவரது இந்த பதிவு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. பாதிக்கப்பட்ட நடிகை மேல் முறையீட்டுக்கு சென்றால் நடிகை மஞ்சு வாரியர் மிகவும் முக்கியமான சாட்சியாக இருப்பார் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











