கணவரின் அஸ்தியை ஏந்தலாமா?இறுதிசடங்கை செய்யலாமா?உங்களுக்கு என்ன பிரச்சனை..மீனா பளிச் பதில்!
சென்னை : நடிகை மீனா தனது கணவரின் இறுதிச்சடங்கில் அஸ்தியை ஏந்தியது பேசுபொருளான நிலையில் தற்போது அதற்கு விளக்கம் அளித்துள்ளார்.
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் நடிகை மீனா. தமிழில் ரஜினி,கமல், அஜித், விஜய், சத்யராஜ், பிரபு என டாப் நடிகர்களுடன் நடித்துள்ளார்.
அதே போல, தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார்.

கணவர் உயிரிழந்தார்
நடிகை மீனாவின் கணவர் வித்யா சாகர் கடுமையான நுரையீரல் பாதிப்பால் ஆக்சிஜன் சிலிண்டருடன் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைதான் ஒரே தீர்வு என்ற நிலையில், உடல் உறுப்புக்காக 3 மாதத்திற்கும் மேலாக மருத்துவமனையில் காத்திருந்தனர். இதையடுத்து, இருதயத்திலும் பாதிப்பு ஏற்பட்டு கடந்த ஜூன் மாதம் உயிரிழந்தார்.

ஆறுதல் கூறிய தோழிகள்
கணவரின் இறுதி சடங்குகளை மீனாவே செய்தது கல் நெஞ்சத்தையும் கரைய வைத்தது. கணவரின் மரணத்திற்கு பிறகு வீட்டிலேயே முடங்கிக் கிடந்த மீனாவை அவரின் தோழிகளான சங்கவி,சங்கீதா,ரம்பா, குஷ்பு, ராதிகா என பலரும் வீடு தேடி சென்று அவரை பார்த்து ஆறுதல் கூறி அவரை வெளியில் அழைத்து வந்தனர். குடும்பம் குட்டி என்று இருந்த ரம்பா, மீனாவுக்காக வெளிநாட்டிலிருந்து வந்து மீனாவுக்கு ஆறுதல் கூறினார். கணவரின் மறைந்த துயரத்திலிருந்த மீனா மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளார்.

அம்மா தான் காரணம்
இந்நிலையில்,நடிகை மீனா அளித்துள்ள பேட்டியில்,மனம் திறந்து பல விஷயங்களை பேசி உள்ளார். அதில், என் கணவரின் மரணத்தில் இருந்து இவ்வளவு சீக்கிரம் வெளியில் வருவேன் என்று நினைக்கவே இல்லை. இதற்கு காரணம் என் நண்பர்கள் தான் அவர்கள் ஆறுதலாக இருந்து சோகத்தை மறக்க செய்தார்கள். மேலும், என் அம்மா மிகவும் தைரியமானவர் அவர்கள் என்னுடன் பக்கபலமாக இருந்து எனக்கு தைரியத்தை கொடுத்து இருக்கிறார்கள்.

உடல் உறுப்பை தானம் செய்துள்ளேன்
என் கணவரின் மரணத்திற்கு முக்கிய காரணமே ஹைதராபாத்தில் அதிக அளவில் இருக்கும் புறாக்களின் எச்சம்தான். எங்கள் வீட்டில் அனைவருமே கொரோனாவால் பாதிக்கப்பட்டோம். ஆனால், என் கணவருக்கு ஏற்கனவே நுரையீரல் பாதிப்பு இருந்ததால் அவர் கடுமையாக பாதிக்கப்பட்டார். நுரையீரல் மாற்று சிகிச்சைக்காக பல நாட்கள் காத்திருந்தோம் ஆனால், நுரையீரல் கிடைக்காததால் அவர் உயிரிழந்தார். இதனால், நான் என் உடல் உறுப்புகளை தானம் செய்துள்ளேன் என்றார்.

அஸ்தியை ஏந்தலாமா?
என் கணவருக்கு நான் இறுதிச்சடங்கு செய்த போது, பலரும் பெண் அஸ்தியை ஏந்தலாமா?இறுதிசடங்கை செய்யலாமா? என பேசினார்கள். நான் இறுதிச்சடங்கு செய்ததில் யாருக்கு என்ன பிரச்சனை, ஒரு மனைவியா கணவருக்கு நான் தான் அதை செய்ய வேண்டும்,கடைசி நேரத்தில் அவர் ஆத்மா சந்தோஷமா இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டுத்தான் இறுதிச்சடங்கு செய்தேன். இதுபற்றி யார் என்ன பேசினாலும் அதை பற்றி எனக்கு கவலைகிடையாது என நெத்தியடியான பதிலை மீனா கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











