Meera Chopra - எனக்கு பிரியங்கா சோப்ரா ரெக்கமெண்ட்லாம் தேவையில்லை.. எஸ்.ஜே.சூர்யா பட நாயகி பளீச்
மும்பை: தனக்கு ப்ரியங்கா சோப்ரா ரெக்கமெண்ட்டோ இல்லை பரினிதி சோப்ரா ரெக்கமெண்ட்டோ தேவையில்லை என்றும் நடிகை மீரா சோப்ரா தெரிவித்திருக்கிறார். அவர் எஸ்.ஜே.சூர்யாவுடன் அன்பே ஆருயிரே, இசை ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். தமிழில் அவர் நிலா என்ற பெயரோடு அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாலிவுட் நடிகைகள் ப்ரியங்கா சோப்ரா மற்றும் பரினிதி சோப்ரா ஆகியோரின் உறவினர் மீரா சோப்ரா. இவர் தமிழில் நிலா என்ற பெயரில் திரையுலகில் அறிமுகமானார். எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் கடந்த 2005ஆம் ஆண்டு வெளியாகி விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்ற அன்பே ஆருயிரே படம்தான் நிலாவுக்கு முதல் என்பது குறிப்பிடத்தக்கது.

வாய்ப்புகள்: முதல் படத்தின் டீசண்ட்டான வரவேற்புக்குப் பிறகு நிலாவுக்கு தமிழில் வாய்ப்புகள் சில அமைந்தன. அப்படி அவர் ஜாம்பவான், லீ, மருதமலை, காளை, ஜகன்மோகினி உள்ளிட்ட படங்களில் நடித்தார். இவற்றில் மருதமலை படம் மட்டுமே ஓரளவு ஓடியது. அதுவும் வடிவேலுவின் காமெடியால் மருதமலை படம் என்றாலே அனைவரது நினைவுக்கும் வருவது வடிவேலுதான்.
கடைசி படம்: தமிழில் நடித்துக்கொண்டிருந்தபோது தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளிலும் ஒரு சில படங்களில் நடித்தார் நிலா. அதனையடுத்து பெரிதாக எந்த வாய்ப்பும் இல்லை. சூழல் இப்படி இருக்க எஸ்.ஜே.சூர்யா கடைசியாக இயக்கிய படமான இசை படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். அதனையடுத்து தமிழில் கில்லாடி படத்தில் நடித்தார். பிறகு தமிழில் நடிக்கவில்லை.
தற்போதைய படங்கள்: அவர் தற்போது சேபட் என்ற படத்தில் நடித்திருக்கிறார். இப்படமானது ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கிறது. இவை தவிரவும் வேறு சில படங்களிலும் நடித்துவருகிறார். இதனால் மீண்டும் பிஸியாக வலம் வர ஆரம்பித்திருக்கிறார். இந்தச் சூழலில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், "ஹிந்தி சினிமாவில் 9 வருடங்களாக இருக்கிறேன். இதுவரை நான்கே நான்கு ஹிந்தி படங்களில்தான் நடித்திருக்கிறேன்.
ஆர்வம்: அதேசமயம் இன்னும் பல படங்களில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன். சமீபத்தில் சேபட் படத்தில் நடித்தேன். அதுபோன்ற கதாபாத்திரங்களில்தான் நடிக்கதான் எனக்கு விருப்பம் இருக்கிறது. குறிப்பாக சேபட் போன்ற கதைகள் கிடைத்தால் நன்றாக இருக்கும். ஏனெனில் நல்ல கதைக்கள்ம் அதில் அமைந்திருக்கிறது.
ரெக்கமெண்ட் தேவையில்லை: முக்கியமாக எனது சகோதரிகளான் ப்ரியங்கா சோப்ரா மற்றும் பரினிதி சோப்ரா முன்னணி நடிகைகளாக இருக்கிறார்கள். ஆனால் தொழில்ரீதியாக அவர்களை பயன்படுத்தக்கூடாது. அவர்களின் சிபாரிசு தேவையில்லை என்பது கவனமாகவும் கண்டிப்பாகவும் இருக்கிறேன். இது நானே எடுத்த முடிவு. முக்கியமா பிரியங்கா சோப்ராவோ, பரினிதி சோப்ராவோவும் மீரா சோப்ரா எங்களுடைய சகோதரி. அதனால் அவருக்கு வாய்ப்பு கொடுங்கள் என்று எங்கும் பேசியதில்லை. அப்படி அவர்கள் பேசுவதையும் நான் விரும்பவும் இல்லை" என்றார்.


Click it and Unblock the Notifications











