ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து ஓட்டம்பிடித்த மீரா மிதுன்... டென்ஷனான இயக்குநர்.. புகார்
சென்னை: படப்பிடிப்பு தளத்தில் இருந்து சொல்லிக்கொள்ளாமல் சென்ற நடிகை மீரா மிதுன் மீது நடிகர் சங்கத்தில் புகார் அளிக்கப்போவதாக இயக்குநர் செல்வ அன்பரசன் தெரிவித்துள்ளார்.
பல்வேறு சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் நடிகை மீரா மிதுன். சமூக வலைதளம் முதல் பிக்பாஸ் வரை அவர் பிரச்சனை செய்யாத இடமே இல்லை எனலாம். நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா, நடிகர் சூர்யாவின் மனைவி நடிகை ஜோதிகா ஆகியோர் குறித்து ஆபாசமாக பேசினார்.
இதனால் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். தொடர்ந்து பட்டியல் இன மக்கள் குறித்தும் இழிவான கருத்துக்களை பேசி வீடியோ வெளியிட்டார். இதுதொடர்பாக அவர் மீது பல்வேறு புகார்கள் அளிக்கப்பட்டன.

பேய காணோம்
அதன் அடிப்படையில் கைது செய்யப்பட்ட மீரா மிதுன் சில மாத சிறைவாசத்துக்குப் பிறகு ஜாமீனில் வெளிவந்தார். இந்நிலையில்
குளோபல் எண்டர்டெயின்மெண்ட்' பட நிறுவனம் சார்பில், 'பேய காணோம்' என்ற பேய் படம் தயாராகி வந்தது. அந்த படத்தில் மீரா மிதுன் பேயாக நடித்து வந்தார்.

மாயமான மீரா மிதுன்
இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி, செல்வ அன்பரசன் டைரக்டு செய்கிறார். தேனி பாரத், சுருளிவேல் ஆகிய இருவரும் தயாரிக்கிறார்கள். படப்பிடிப்பு கொடைக்கானலில் நடைபெற்றது. இந்தநிலையில், பேயாக நடித்துவந்த மீராமிதுன் திடீரென்று மாயமாகி விட்டதாக கூறப்படுகிறது.

80% முடிந்துவிட்டது
இதுகுறித்து படத்தின் இயக்குநர் செல்வ அன்பரசன் கூறியதாவது, இது ஒரு நகைச்சுவையான பேய் படம். 80 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்தது. 20 சதவீத படப்பிடிப்பு நடத்த வேண்டியிருந்தது. இதற்காக கொடைக்கானலில் இறுதிக்கட்ட படப்பிடிப்பை நடத்தி வந்தோம். படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்றுக் கொண்டிருந்தது.

மீரா மிதுன் மாயமாகிவிட்டார்
படப்பிடிப்பு முடிய 2 நாட்களே இருந்த நிலையில், திடீரென்று மீரா மிதுன் மாயமாகி விட்டார். அவருடைய உதவியாளர்கள் 6 பேரையும் காணவில்லை. அவர்களின் உடைமைகளை எல்லாம் எடுத்துக்கொண்டு ஓடிவிட்டார்கள். பேயை தேடப்போன நாங்கள் கதாநாயகியை தேட வேண்டியதாகி விட்டது.

புகார் அளிக்க போகிறோம்
இத்தனை பேர் உழைப்பை மதிக்காமல், மீரா மிதுன் மாயமாகி விட்டார். இதுபற்றி நடிகர் சங்கத்தில் புகார் செய்ய இருக்கிறோம்.'' இவ்வாறு டைரக்டர் செல்வ அன்பரசன் கூறினார். நடிகை மீரா மிதுன் தமிழில் சூர்யா நடிப்பில் வெளியான தானா சேர்ந்த கூட்டம் படத்தில் சிறு கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











