பிரபல நடிகை மியா ஜார்ஜின் தந்தை காலமானார்.. திரைத்துறையினர் ரசிகர்கள் இரங்கல்!
திருவனந்தபுரம்: பிரபல நடிகை மியா ஜார்ஜின் தந்தை உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 75.
மியா ஜார்ஜ், பிரபல மாடலாக கேரியரை தொடங்கினார். ஏராளமான விளம்பர படங்களில் நடித்துள்ளார் மியா ஜார்ஜ்.
பின்னர் தொலைக்காட்சி சீரியல்களில் சப்போர்ட்டிங் ரோல்களில் நடிக்க தொடங்கினார். 2010ஆம் ஆண்டு வெளியான ஒரு ஸ்மால் ஃபேமிலி படத்தின் மூலம் மலையாள சினிமாவுக்கு அறிமுகமானார் மியா ஜார்ஜ்.

கேரளா மிஸ் ஃபிட்னஸ்
பின்னர் டாக்டர், ஏ அடுத்த காலத்து உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார் மியா ஜார்ஜ். 2012ஆம் ஆண்டு நடைபெற்ற கேரளா மிஸ் ஃபிட்னஸ் அழகிப் போட்டியில் பட்டம் வென்றார் மியா. அதே ஆண்டு வெளியான சேட்டாயிஸ் படத்தில் லீடிங் ரோலில் நடித்தார்.

தமிழில் பல படங்கள்
மேலும் மெமொரிஸ், விஷுதன், மிஸ்டர் பிராடு, சலாம் காஷ்மீர், ஹாய் ஐஅம் டோனி உள்ளிட்ட படங்களிலும் நடித்தார். தமிழில் அமர காவியம், இன்று நேற்று நாளை, வெற்றிவேல், ஒரு நாள் கூத்து, ரம், எமன் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார் மியா ஜார்ஜ்.

கடந்த ஆண்டு திருமணம்
மேலும் சில தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது தமிழில் விக்ரமின் கோப்ரா, மற்றும் இன்று நேற்று நாளை 2 ஆகிய படங்களில் நடித்து வருகிறார். நடிகை மியா ஜார்ஜ் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அஷ்வின் பிலிப் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

மியா ஜார்ஜின் தந்தை மரணம்
இந்த தம்பதிக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு லுக்கா ஜோசப் பிலிப் என பெயர் வைத்துள்ளதாக சமூக வலைதளம் மூலம் அறிவித்தார் நடிகை மியா ஜார்ஜ். இந்நிலையில் மியா ஜார்ஜின் தந்தை நேற்று திடீரென காலமானார்.

இன்று உடல் அடக்கம்
ஜோசப்பின் மறைவுக்கு திரைத்துறையினரும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது உடல் கோட்டயத்தில் உள்ள தேவாலயத்தில் இன்று கிறிஸ்தவ முறைப்படி அடக்கம் செய்யப்படவுள்ளது. ஜோசப்பிற்கு மினி என்ற மனைவியும் மியா, ஜின் என்ற இரண்டு மகள்களும் உள்ளனர். அவர் தனது மருமகன்கள் லினோ ஜார்ஜ் மற்றும் அஷ்வின் பிலிப் உட்பட குடும்பத்தினருடன் வசித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











