குடும்பத்தில் 10 பேருக்கு ஏற்கனவே கொரோனா.. பிரபல நடிகைக்கும் பரவியதால் பரபரப்பு.. தீவிர சிகிச்சை!
சென்னை: குடும்பத்தில் ஏற்கனவே 10 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டிருந்த நிலையில் பிரபல நடிகைக்கும் இப்போது பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கொரோனா தொற்று இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. இதைக் கட்டுப்படுத்த மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
இருந்தும் இதனால் பாதிக்கப்படுவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்தபடி இருக்கிறது.

உலகம் முழுவதும்
இந்த உயிர்கொல்லி வைரஸ், ஏராளமானோரின் உயிரை பலிவாங்கியுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் 20 லட்சத்து 27 ஆயிரத்து 75 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒரே நாளில் 62 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை 13 லட்சத்து 78 ஆயிரத்து 106 பேர் குணமடைந்துள்ளனர். 41,585 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஐஸ்வர்யா ராய்
இந்த வைரஸ் தொற்று மகாராஷ்ட்ராவில் வேகமாக பரவி வருகிறது. அது பிரபலங்களையும் விட்டு வைக்கவில்லை. பிரபல பாலிவுட் நடிகர்கள் அமிதாப் பச்சன், அவர் மகன் அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், அவர் மகள் ஆராத்யா ஆகியோருக்கும் கொரோனா தொற்று பரவியது. இதனால் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இயக்குனர் ராஜமவுலி
அமிதாப்பச்சன், ஐஸ்வர்யா ராய், ஆரத்யா ஆகியோர் குணமடைந்து வீட்டுக்கு திரும்பி விட்டனர். அபிஷேக் பச்சன் தொடர் சிகிச்சையில் இருக்கிறார். நடிகர் விஷாலும் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டார். இயக்குனர்கள் எஸ்.எஸ்.ராஜமவுலி, தேஜா ஆகியோரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் பிரபல நடிகையும் எம்.பியுமான நவ்னீத் ராணாவுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாமனாருக்கு கொரோனா
இவர் மகாராஷ்ட்ரா மாநிலம் அமராவதி தொகுதியில் இருந்து நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். இவர் கணவர் ரவி ராணா, எம்.எல்.ஏ.வாக இருக்கிறார். தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதை தனது பேஸ்புக் பக்கத்தில் உறுதிப்படுத்தி உள்ளார் நவ்னீத் கவுர். கடந்த சில நாட்களுக்கு முன் நவ்னீத்தின் மாமனாருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.

மீண்டும் சோதனை
இதையடுத்து, குடும்பத்தினர் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது நவ்னீத் ராணாவின் மகன், மகள், சகோதரி, மாமியார் உள்பட குடும்பத்தினர் 10 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. ஆனால் நவ்னீத் ராணாவுக்கு தொற்று கண்டறியப்படவில்லை. இந்நிலையில் மீண்டும் நடந்த சோதனையில் நவ்னீத் ராணாவுக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

அம்பாசமுத்திரம் அம்பானி
இதையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இவர், நவ்னீத் கவுர் என்ற பெயரில் தமிழ், தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். தமிழில் விஜயகாந்த் நடித்த அரசாங்கம், கருணாஸ் நடித்த அம்பாசமுத்திரம் அம்பானி உள்பட சில படங்களில் நடித்துள்ளார். தெலுங்கில் கோபிசந்தின் ரணம், ஜூனியர் என்.டி.ஆரின் எமதொங்கா உட்பட பல படங்களில் நடித்துள்ளார். இந்தியிலும் நடித்திருக்கிறார்.


Click it and Unblock the Notifications











