Nayanthara - தியேட்டரை நயன்தாரா வாங்கவில்லை.. திரையரங்க நிர்வாகம் விளக்கம்
சென்னை: Nayanthara (நயன்தாரா) அகஸ்தியா திரையரங்கை நடிகை நயன்தாரா வாங்கவில்லை என தியேட்டர் நிர்வாகம் விளக்கமளித்திருக்கிறது.
கேரளாவில் ஒரு டிவி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக்கொண்டிருந்தவர் நயன்தாரா. அதனையடுத்து தமிழில் ஐயா படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். முதல் படம் ஹிட்டாகி அவரது நடிப்புக்கும் ரசிகர்களிடையே வரவேற்பு கிடைத்தது. அதனையடுத்து ரஜினிகாந்த்துடன் சந்திரமுகி படத்தில் நடித்து முன்னணி நடிகை வரிசையில் இணைந்தார். திறமையும், கவர்ச்சியும் ஒருசேர அவரிடம் இருந்ததால் அவருக்கு ஏகப்பட்ட பட வாய்ப்புகள் கிடைத்தன.

சிம்புவுடன் காதல்: இப்படிப்பட்ட சூழலில் சிம்புவுடன் வல்லவன் படத்தில் இணைந்து நடித்தபோது இரண்டு பேருக்கும் காதல் மலர்ந்தது. இதன் காரணமாக அந்தப் படத்தில் சிம்புவுடன் அளவுக்கு மீறிய நெருக்கம் காட்டினார் நயன். இருவரும் திருமணம் செய்துகொள்ளப்போவது உறுதி என்று நினைத்த சூழலில் சில காரணங்களால் பிரேக் அப் ஆகிவிட்டது. அந்த சமயத்தில் வெளியான புகைப்படங்கள் சில பெரும் சர்ச்சையை கிளப்பின.
பிரபுதேவாவுடன் காதல்: சிம்புவுடனான காதல் முறிவுக்கு பிறகு வில்லு படத்தில் நடித்தபோது அந்தப் படத்தின் இயக்குநர் பிரபுதேவாவுடன் காதலில் விழுந்தார். அவருக்காக கிறிஸ்துவ மதத்திலிருந்து ஹிந்து மதத்திற்கு மாறி பிரபுதேவாவின் பெயரை கையில் பச்சையும் குத்திக்கொண்டார். அதுமட்டுமின்றி சினிமாவிலிருந்து ஒதுங்கவும் முடிவு செய்தார். ஆனால் அந்தக் காதலும் பிரேக் அப்பில் முடிய மீண்டும் சினிமாவுக்குள் நுழைந்தார் நயன்.
இரண்டாவது இன்னிங்ஸில் காதல்: தனது இரண்டாவது இன்னிங்ஸை மிகவும் கவனத்தோடு தொடங்கினார் நயன். அந்தவகையில் அவர் நடித்த படங்கள் ஹிட்டாக லேடி சூப்பர் ஸ்டாராக மாறினார். இதற்கிடையே நானும் ரௌடிதான் படத்தில் நடித்தபோது விக்னேஷ் சிவனை காதலித்தார். இருவரது காதலும் பல வருடங்கள் கழித்து கடந்த வருடம் திருமணத்தில் முடிந்தது. இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர்.
இப்போதைய படங்கள்: நயன்தாராவுக்கு இப்போது தமிழில் தனது 75ஆவது படத்திலும், ஹிந்தியில் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் ஜவான் படத்திலும் நடித்துவருகிறார். இந்தச் சூழலில் அவரும், விக்னேஷ் சிவனும் இணைந்து வடசென்னையில் இருக்கும் அகஸ்தியா திரையரங்கை வாங்கியிருக்கிறார்கள் என்றும். அங்கு தியேட்டை இடித்துவிட்டு மல்டி பிளக்ஸ் ஒன்றை கட்டவிருக்கிறார்கள் என்றும் சமீபத்தில் தகவல் வெளியானது.

தியேட்டர் நிர்வாகம் மறுப்பு: இந்நிலையில் திரையரங்க நிர்வாகம் அளித்திருக்கும் விளக்கத்தில், "அகஸ்தியா திரையரங்க நிர்வாகம், அகஸ்தியா திரையரங்கம் அறக்கட்டளைக்கு சொந்தமான இடத்தில் இயங்கி வருவதால் அதனை யாருக்கும் விற்க முடியாது என்றும், நயன்தாரா இந்த இடத்தை வாங்கிவிட்டார் என்று வெளியாகும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவை" என தெரிவித்திருக்கிறது.
மார்க்கெட் குறைந்துவிட்டதா?: முன்னதாக திருமணமாகி குழந்தை பெற்றுக்கொண்டதை அடுத்து தனது குழந்தைகளை வளர்ப்பதில் நயன் கவனம் செலுத்திவருகிறார். எனவே திரைப்படங்களில் கவனம் செலுத்த முடியாததால் அவரது மார்க்கெட் சரிந்துவிட்டது என்றும் அதன் காரணமாகத்தான் திரையரங்கை வாங்கி பிஸ்னெஸில் கவனத்தை திருப்பியிருக்கிறார் என்றும் தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











