கொரோனா நிவாரண நிதி…. ஈஸ்வரன் பட நடிகை ரூ1 லட்சம் வழங்கினார்!
சென்னை : ஈஸ்வரன் பட நடிகை நிதி அகர்வால், கொரோனா நிவாரண நிதிக்காக, முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ1 லட்சம் நன்கொடை அளித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா தொற்று தினமும் ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. உயிரிழப்பும் அதிகரித்து கொண்டே செல்கிறது.
கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு நிதி திரட்டி வருகிறது. இதற்கு அரசியல், சினிமா, விளையாட்டு பிரபலங்கள் தொழிலதிபர்கள் அரசுக்கு நிதி உதவி அளித்து வருகின்றனர்.

நிதி உதவி
தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. கொரோனா தொற்று பரவல் தடுப்பு மற்றும் சிகிச்சைக்கு அதிக நிதி தேவைப்படுவதால் நன்கொடை வழங்குமாறு தமிழக முதல் அமைச்சர் முக ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார். இதையடுத்து திரைப்பிரபலங்கள் பலரும் முதல்வரை நேரில் சந்தித்தும், ஆன்லைன் மூலமாகவும் நிதியுதவி அளித்து வருகின்றனர்.

ரூ 1கோடி உதவி
முன்னதாக நடிகர் சிவகுமார் குடும்பத்தினர் ரூ1 கோடி, நடிகர் ரஜினிகாந்த் ரூ50 லட்சம், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர் அஜித், உதயநிதி ஸ்டாலின், சிவகார்த்திகேயன் ஆகியோர் தலா 25 லட்சம் ரூபாய், இயக்குனர்கள் ஷங்கர், வெற்றிமாறன், மோகன் ராஜா, நடிகர் ஜெயம்ரவி, ஆகியோர் தலா ரூ.10 லட்சம் வழங்கினர்.

நிதி வழங்கினார்
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இன்று, கொரோனா நிவாரண நிதிக்காக, முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ .1 லட்சம் வழங்கினார். மேலும், படப்பிடிப்புகள் அனைத்து ரத்து செய்யப்பட்டுள்ளதால், FEFSI தொழிற்சங்கத்திற்கு ரூ .1 லட்சம் நன்கொடை அளித்துள்ளார்.

ரூ 1 லட்சம் உதவி
இதேபோல, நடிகை நிதி அகர்வால், கொரோனா நிவாரண நிதிக்காக, முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ .1 லட்சம் நன்கொடை அளித்துள்ளார். தொற்று காலங்களில் முதல்வரை சந்திப்பதை தவிர்த்து, நிதி அகர்வால் ஆன்லைன் பரிவர்த்தனை செய்ததாக கூறப்படுகிறது. அவர்,சிம்புக்கு ஜோடியாக ஈஸ்வரன் படத்திலும், ஜெயம் ரவிக்கு ஜோடியாக பூமி படத்தில் நடித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











