தனுஷின் கேப்டர் மில்லர் படத்தில் இணைந்த பிரபல நடிகை.. படக்குழு வெளியிட்ட அறிவிப்பு!
சென்னை : தனுஷின் கேப்டர் மில்லர் படத்தில் கதாநாயகியாக பிரியங்கா அருள்மோகன் நடிக்க உள்ள நிலையில் மேலும் ஒரு நடிகை படத்தில் இணைந்துள்ளார்.
தனுஷ் தற்போது வாத்தி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் தெலுங்கில் சார் என்ற பெயரில் உருவாக்கப்பட்டு வருகிறது. தனுஷ் வாத்தியாராக நடிக்கும் இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடித்துள்ளார்.
வாத்தி திரைப்படம் வருகிற டிசம்பர் 2ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

கேப்டன் மில்லர்
தனுஷ் நடித்துள்ள நானே வருவேன் திரைப்படம் இந்த மாதம் ரிலீசாகும் என கூறப்பட்டாலும், இன்னும் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படாமல் உள்ள நிலையில் இந்தப் படத்தை தொடர்ந்து கேப்டன் மில்லர் படத்தின் படப்பிடிப்பை தொடங்கவுள்ளார் தனுஷ். 1930-40 களில் நடந்த சம்பவங்களை அடிப்படையாக வைத்து கேப்டன் மில்லர் படம் உருவாக்கப்பட உள்ளது.

அருண் மாதேஸ்வரன்
தனுஷின் பிறந்த நாளையொட்டி வெளியான இந்தப் படத்தின் மோஷன் போஸ்டர் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. சாணிக் காயிதம், ராக்கி ஆகியப் படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இப்படத்தை இயக்குகிறார். ஜி.வி.பிரகாஷ் குமார் கேப்டன் மில்லர் படத்திற்கு இசையமைக்கிறார். கேப்டன் மில்லர் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் சார்பாக டி.ஜி. தியாகராஜன் தயாரிக்கிறார்.

பிரியங்கா அருள் மோகன்
இந்த படத்தில் நடிக்கும் நடிகர்கள் பற்றிய அறிவிப்பு ஒவ்வொன்றாக வெளியாகி வருகிறது. இருதினங்களுக்கு முன் மாநகரம் பட புகழ் சந்தீப் கிஷன் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, தனுஷுக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்க உள்ளதாக அறிவித்திருந்தது. தமிழில் டாக்டர் படத்தில் அறிமுகமாகி எதற்கும் துணிந்தவன், டான் ஆகிய படங்களில் நடித்தார் பிரியங்கா. தனுஷூடன் முதன்முறையாக இணைந்துள்ளார்.

நிவேதிதா சதீஷ்
இந்நிலையில், சத்யஜோதி பிலிம்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், சில்லு கருப்பட்டி படத்தில் கதாநாயகியாக நடித்த நிவேதிதா சதீஷ் முக்கியமான ரோலில் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் முதல் வாரத்திலோ அல்லது இரண்டாம் வாரத்திலோ தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படம் குறித்து அடுத்தடுத்து வெளியாகி வரும் தகவலால் ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.


Click it and Unblock the Notifications











