மோகன்லால் ஒரு கோழை! இனி வரும் காலத்திலாவது நல்ல தலைவரை தேர்வு செய்யவேண்டும் - பார்வதி ஆவேசம்!
கொச்சி: தென்னிந்திய சினிமா மட்டும் இல்லாமல், ஒட்டுமொத்த இந்திய சினிமாவும் தற்போது மிகவும் பரபரப்பாகவும் பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ள பிரச்னை என்றால் அது மலையாள சினிமா உலகில் நடைபெற்ற நடிகைகளுக்கு எதிரான பாலியல் தொல்லை பிரச்னைதான். ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா கமிட்டி அளித்த விரிவான விசாரணை அறிக்கையின் காரணமாக இந்தப் பிரச்னை பூதாகரமாக வெடித்தது. மேலும் ஒட்டுமொத்த மலையாள நடிகர் சங்கமும் கலைக்கப்பட்டுள்ளது. மலையாள நடிகர் சங்கத்தின் (AMMA) தலைவராக இருந்த நடிகர் மோகன் லால் அவராகவே முன் வந்து தனது பதவியை ராஜினாமா செய்தார்.
ஹேமா கமிட்டி அளித்த விசாரணை அறிக்கை அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது என்றால், மோகன் லால் தனது பதவியை ராஜினாமா செய்ததும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மோகன் லால் ராஜினாமா செய்ததால், மோகன் லாலும் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார் எனவும், அதனால்தான் அவர் தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டார் எனவும் பலரும் பலவிதமாக பேசினர்.

மலையாள சினிமா உலகில் தங்களுக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தையும், சினிமா மூலம் பொதுத் தளத்தில் தனி மரியாதையையும் உண்டாக்கிக் கொண்டவர்கள் பலர் உள்ளனர். அவர்களில் நடிகை பார்வதி திருவோத்து மிகவும் முக்கியமானவர். சிறந்த கதைத்தேர்வுகளில் நடித்து அதற்காக தன்னை முழுவதுமாக தயார்படுத்திக் கொண்டு பாராட்டுகளைப் பெறுபவர்.
பார்வதி: தமிழில் இவர் பூ, மரியான், தங்கலான் உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழ்நாட்டு ரசிகர்கள் மனதிலும் இடம் பிடித்துள்ளார். ஹேமா கமிட்டி அளித்த அறிக்கை, அதன் பின்னர் மலையாள நடிகர் சங்கம் கூண்டோடு கலைக்கப்பட்டது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப் பட்டது. இந்த கேள்விக்கு மிகவும் காட்டமான முறையில் பதில் அளித்துள்ளார் பார்வதி. இவரது பதில் மலையாள சினிமாவை மட்டும் இல்லாமல், ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமாவையே குலுக்கியுள்ளது.
கோழைகள்: அதாவது பார்வதி அளித்த பதிலில், “ முதலில் மலையாள நடிகர் சங்கம் கலைக்கப்பட்ட செய்தியைக் கேட்டபோது, இதுவரை சங்கத்தின் தலைவராக இருந்தவர்கள் தொடங்கி பொறுப்புகளில் இருந்தவர்கள் வரை எவ்வளவு கோழைகள் என்று தான் நினைத்தேன். மலையாள நடிகர் சங்கத்தின் பொறுப்பாளர்கள் என்ற ஒரு பொறுப்பான நிலையில், இருந்தவர்கள் ராஜினாமா மற்றும் ஒட்டுமொத்தமாக நடிகர் சங்கத்தை கலைப்பது என்ற முடிவை எடுத்து எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. ஹேமா கமிட்டி முன் வைத்துள்ள குற்றச் சாட்டுகளுக்கு பதில் சொல்ல முடியாமல் தான் மலையாள நடிகர் சங்க பொறுப்பாளர்கள் இப்படியான ஒரு முடிவை எடுத்துள்ளார்கள்.
பாலியல் குற்றச்சாட்டுகள்: பொறுப்பில் இருந்தவர்கள் நடிகைகளுக்கு ஏற்பட்ட பாலியல் பிரச்சனைக்கு எதிராகக் குரல் கொடுக்கவில்லை என்றாலும் கூட பரவாயில்லை. குறைந்தபட்சம், அரசாங்கத்துடன் இணைந்து, ஹேமா கமிட்டி முன்வைத்துள்ள பிரச்சினைகளைத் தீர்க்க, மலையாள நடிகர் சங்க பொறுப்பாளர்கள் ஒரு சிறிய நகர்வையாவது முன்னெடுத்திருக்கவேண்டும். இப்போது கூண்டோடு கலைக்கப்பட்ட இந்த நடிகர் சங்க பொறுப்பாளர்கள்தான் நடிகைகள் தங்களுக்கு நடந்த பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து முன் வைத்த பாலியல் குற்றச்சாட்டுகளை வெளியே சொல்வதற்கு முன்னர் வரை, நடிகைகளுக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டுகள் எதுவும் மலையாளா சினிமா உலகில் நடக்கவில்லை என்று கூறிவிட்டு அமைதியாக இருந்தனர்.
நல்ல தலைவர்: மலையாள நடிகர் சங்கத்தில் (AMMA) உள்ளவர்கள் எப்படி வேலை செய்வார்கள் என்பது எனக்கு நன்றாகவே தெரியும். அங்கு நமது தேவைகளைப் பற்றிப் பேச நடிகைகளான என்னைப் போன்றவர்களுக்கு உரிமை இல்லை. எனவே, இந்த நிலை மாறவேண்டும் என்றால், சிறந்த தலைமை வரவேண்டும். வரும் காலத்திலாவது நல்ல தலைவரை அனைவரும் தேர்வு செய்ய வேண்டும்” என ஆவேசமாக பேசினார்.


Click it and Unblock the Notifications











