காருக்குள் சடலமாக கிடந்த நடிகை பிரத்யுஷா.. 24 ஆண்டுக்கு பின் வந்த தீர்ப்பு.. காதலனுக்கு தண்டனை!
சென்னை: நடிகை பிரத்யுஷாவின் மரணத்தை அவ்வளவு எளிதில் யாரும் மறந்து இருக்க மாட்டார்கள். காருக்குள் காதலருடன் சடலமாக மீட்கப்பட்ட வீடியோ வெளியான போது ஒட்டுமொத்த மக்களும் பதறிப்போனார்கள். 20 வயதில் வாழ்க்கையை முடித்துக்கொண்ட நடிகை பிரத்யுஷாவின் மரணம் நிகழ்ந்து 24 ஆண்டுகள் ஆனபோதும், அதன் வலி மனதை விட்டு விலகவில்லை. பல ஆண்டுகளாக நடந்த இந்த வழக்கில் நேற்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தெலுங்கானாவில் பிறந்த பிரத்யுஷா தனது 18 வயதில் மோகன்பாபுவுடன் 'ராயுடு' என்கிற படத்தில் நடித்தார். அதன் பின் 'ஸ்ரீ ராமாலையா', சமுத்திரம், என அடுத்தடுத்த படத்தில் நடித்து வந்த இவர், தமிழில் நடிகர் முரளியுடன் 'மனுநீதி' என்கிற படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். அதன் பின், சூப்பர் குடும்பம், விஜயகாந்த் உடன் தவசி, ராமராஜுடன் பொன்னான நேரம், கடல் பூக்கள் என பல திரைப்படங்களில் நடித்து வந்தார்.

நடிகை பிரத்யுஷா: அடுத்தடுத்து படங்களில் பிசியாக நடித்து வந்த நடிகை பிரத்யுஷா, சித்தார்த் ரெட்டி என்பவரை காதலித்து வந்தார். இதற்கு சித்தார்த்தின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால், 2002 ஆம் ஆண்டு இருவரும் காருக்குள் இருந்தபடியே விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றனர். இதில், சித்தார்த் உயிர் தப்பித்துக்கொள்ள பிரத்யுஷா மட்டும் உயிரிழந்தார். இதில், தற்கொலைக்கு தூண்டியதாக சித்தார்த் ரெட்டிக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
திட்டமிட்ட கொலை: இதை எதிர்த்து சித்தார்த் ரெட்டி தரப்பினர் ஆந்திர உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இதில், 2011 ஆம் ஆண்டு ஆந்திர நீதிமன்றம் அவரது தண்டனையை இரண்டு ஆண்டாக குறைத்து, ஐம்பதாயிரம் ரூபாய் அபராதம் விரித்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து பிரத்யுஷாவின் தாயார் 2012 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அதில், தனது மகளை தற்கொலை செய்து கொள்ள தூண்டியது சித்தார்த் ரெட்டி தான் என்றும், இது திட்டமிட்ட கொலை என வாதிட்டப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்ததை அடுத்து, வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் நீதிபதி ஒத்திவைத்தார்.
உச்சநீதிமன்றம் தீர்ப்பு: இதையடுத்து, 24 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று இந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், சித்தார்த் ரெட்டி குற்றவாளி என தீர்ப்பளித்துள்ள நீதிமன்றம், நான்கு வாரங்களுக்குள் அவர் சரணடைய வேண்டுமென உத்தரவிட்டுள்ளது. மேலும், அவரின் இரண்டு ஆண்டுகள் தண்டனை ரத்து செய்யப்பட்டு ஐந்து ஆண்டு சிறை தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது. நடிகை பிரத்யுஷா, விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்ள தூண்டுதலாக இருந்தது சித்தார்த் ரெட்டி தான் என அந்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications