பைசூல் மீது மீண்டும் செக்ஸ் மோசடி புகார் கொடுத்தார் நடிகை ராதா
சென்னை: தயாரிப்பாளர் பைசூல் மீது மீண்டும் செக்ஸ் மோசடி புகார் கொடுத்துள்ளார் சுந்தரா டிராவல்ஸ் ராதா.
சுந்தரா டிராவல்ஸ் படத்தில் அறிமுகமான நடிகை ராதா திருவல்லிக்கேணியை சேர்ந்த தொழில் அதிபர் பைசூல் மீது கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பான புகார் மனு ஒன்றை அளித்தார்.
அதில் பைசூல் தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி செக்ஸ் உறவில் ஈடுபட்டதாகவும், ரூ. 50 லட்சம் மோசடி செய்து விட்டதாகவும், குற்றம் சாட்டி இருந்தார்.

வாக்குமூலம்
இது தொடர்பாக வடபழனி போலீசார் விசாரணை நடத்தினர். ராதாவை நேரில் அழைத்து சுமார் 1 மணி நேரம் விசாரணை நடத்திய போலீசார் அவரது வாக்கு மூலத்தையும் பதிவு செய்தனர். அப்போது பைசூலுக்கு எதிராக மோசடி ஆவணங்களையும் ராதா போலீசிடம் கொடுத்தார்.

முன்ஜாமீன் மனு தள்ளுபடி
இதையடுத்து பைசூல் மீது மோசடி, மிரட்டல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதற்கிடையே பைசூல் முன்ஜாமீன் கேட்டு 2 முறை தாக்கல் செய்த மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன. இதையடுத்து பைசூல் கைதாவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் போலீசார் பிடியில் சிக்காமல் பைசூல் தொடர்ந்து தலைமறைவாகவே உள்ளார்.

தென்சென்னை கமிஷனரிடம்
இந்நிலையில் நேற்று இரவு தென் சென்னை இணை கமிஷனர் திருஞானத்தை அவரது அலுவலகத்தில் நடிகை ராதா சந்தித்து பேசினார். அப்போது போலீசாருக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை அவர் கூறினார்.

இன்ஸ்பெக்டர் சாதகம்
ராதா கூறுகையில், "பைசூலின் முன்ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையிலும் அவரை கைது செய்வதற்கு போலீசார் தயக்கம் காட்டி வருகிறார்கள். வடபழனி மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேசா, பைசூலுக்கு சாதகமாகவே தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். இதனால் எனக்கு நியாயம் கிடைக்குமா என்று தெரியவில்லை.
எனவே இது தொடர்பாக தென் சென்னை இணை கமிஷனரை சந்தித்து முறையிட்டுள்ளேன். எனது வழக்கை வேறு ஒரு அதிகாரி விசாரிக்க வேண்டும். அப்போது தான் பைசூல் மீது உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று நம்புகிறேன்," என்றார்.

மீண்டும் கமிஷனர் அலுவலகத்தில்...
இந்த நிலையில் நடிகை ராதா இன்று பகல் 12.50 மணிக்கு போலீஸ் கமிஷனர் அலுவலகம் வந்தார். தொழில் அதிபர் பைசூல் மீது செக்ஸ் - மோசடி தொடர்பாக மீண்டும் புகார் ஒன்றை கொடுத்தார். பைசலுக்கு எதிரான புதிய ஆதாரங்களையும் அப்போது அவர் கொடுத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











