அரசு அதிகாரியுடன் நடிகை ராகிணி, 'லிவிங் டுகெதர்' வாழ்க்கை.. போதை மாத்திரை விசாரணையில் பரபரப்பு!
பெங்களூரு: போதைப் பொருள் விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள அரசு அதிகாரியுடன் நடிகை ராகிணி திவிவேதி, ஒன்றாக வாழ்ந்து வந்துள்ள தகவல் தெரியவந்துள்ளது.
பெங்களூருவில் தடை செய்யப்பட்ட எம்.டி.எம்.ஏ., எல்.எஸ்.டி. போதை மாத்திரைகளை விற்பனை செய்த 3 பேரை போலீசார் கடந்த சில நாட்களுக்கு முன் கைது செய்தனர்.
அவர்கள், தமிழகத்தைச் சேர்ந்த கன்னட டிவி நடிகை அனிகா, கேரளாவைச் சேர்ந்த ரவீந்திரன், அனூப் ஆகியோர் என்பது தெரியவந்தது.

போதை மாத்திரை
அவர்களிடம் இருந்து ஏராளமானப் போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. கைதான டிவி நடிகை அனிகாவிடம் நடத்திய விசாரணையில், அவருக்கு கன்னட சினிமா நடிகர், நடிகைகளுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது. கன்னட திரையுலகினர் நடத்தும் பார்ட்டிகளின் போது போதை மாத்திரைகளை விற்று வந்ததும் தெரிய வந்தது. இது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்திரஜித் லங்கேஷ்
இந்நிலையில், கன்னட சினிமாவில் நடக்கும் பார்ட்டிகளின் போது போதைப் பொருட்கள் பயன்பாடு இருப்பதாக கன்னட பட இயக்குனர் இந்திரஜித் லங்கேஷ் பரபரப்பு புகார் கூறியிருந்தார். இது குறித்து போலீசார் உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும், தேவைப்பட்டால் தனக்கு தெரிந்த தகவலை சொல்ல தயாராக இருக்கிறேன் என்றும் இந்திரஜித் லங்கேஷ் கூறி இருந்தார்.

ராகிணி திவிவேதி
பின்னர் அவர், 15 நடிகர், நடிகைகளின் பெயர் பட்டியலை போலீசாரிடம் ஒப்படைத்தார். இந்நிலையில் இந்த விவகாரத்தில் ரவிசங்கர் என்ற அரசு ஊழியர் கைது செய்யப்பட்டார். இவரிடம் நடத்திய விசாரணையில், அவர் நடிகை ராகிணி திவிவேதியுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து ராகிணி கைது செய்யப்பட்டார்.

கார்களுக்கு ஃபேன்சி நம்பர்
அவர் போதைப்பொருள் விவகாரத்தில் போலீசாரிடம் நடிகை ராகிணி எப்படி சிக்கினார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. ரவி சங்கர், ஜெயநகரில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் அதிகாரி என்பதால், சினிமா பிரபலங்களின் கார்களுக்கு ஃபேன்சி நம்பர் வாங்கி கொடுப்பதன் மூலமாக அவர்களுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதுபோல தான் நடிகை ராகிணி திவிவேதியுடனும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

திருமணம் செய்யாமல்
பின்னர் இருவரும் திருமணம் செய்யாமல் ஒரே வீட்டில் சேர்ந்து வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது. அதே நேரத்தில் ரவி சங்கருக்கு போதைப்பொருள் விற்பனை செய்யும் கும்பலுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கன்னட திரையுலகில் நடக்கும் பார்ட்டிகளில் அவர் போதைப்பொருட்களை விநியோகித்து வந்துள்ளார். இந்த பார்ட்டிகளில் ரவி சங்கர் மற்றும் ராகிணி திவிவேதி உள்பட கன்னட திரையுலகினர் கலந்து கொண்டு வந்துள்ளனர்.

ஜாமின் கிடைக்குமா?
நடிகை ராகிணி திவிவேதிக்கு போதைப்பொருட்கள் விற்பனை செய்யும் கும்பலுடன் தொடர்பு இருந்ததா என்பது பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே அவர் தனக்கு ஜாமின் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது. அவர் இந்த வழக்கில் 2-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளதால், அவருக்கு ஜாமின் கிடைக்குமா? என்று சந்தேகம் எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications











