Vijay 69: வெற்றிக் கூட்டணி! தளபதி 69இல் விஜய்யுடன் ஜோடிசேரும் ரம்பா? ரம்பா வெளியிட்ட புகைப்படங்கள்!
சென்னை: தமிழ் சினிமாவில் இன்றைக்கு அதிக சம்பளம் வாங்கும் நடிகர் என்றால் அது நடிகர் விஜய். ஒரு படத்திற்கு ரூபாய் 200 கோடி வரை சம்பளம் வாங்குகின்றார் எனக் கூறப்படுகின்றது. இதுவரை தமிழ் சினிமாவில் எந்த நடிகரும் இந்த சம்பளத்தைத் தொடவில்லை. இது மட்டும் இல்லாமல் வரும் 2026ஆம் ஆண்டு சட்டமன்ற பொதுத் தேர்தலில் தேர்தலைச் சந்திக்க தமிழக வெற்றிக் கழகத்தினை உருவாக்கி அதனை நடத்தியும் வருகின்றார்.
இப்படியான நிலையில், நடிகர் விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் தி கோட். இந்த படத்திற்கான படப்பிடிப்பு பெரும்பகுதி முடிந்துவிட்டது. இந்நிலையில் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு மட்டும் நடைபெற்று வருகின்றது. படத்தில் இருந்து ஏற்கனவே இரண்டு பாடல்கள் ரிலீஸ் ஆனது. இதில் முதல் பாடல் விஜய் குரலில் ரிலீஸ் ஆனது. இந்த பாடல் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. அதேபோல் அவரது 50வது பிறந்த நாளுக்கு ரிலீஸான மெலடி பாடல் உலக அளவில் ட்ரெண்டிங்கில் முதல் இடத்தினைப் பெற்றது.

தி கோட் அதாவது தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். இந்த படத்தில் சினேகா இவருக்கு ஜோடியாக நடிக்கின்றார். மேலும், படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, மைக் மோகன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஏ.ஐ. தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி விஜயகாந்த் நடித்திருப்பதைப் போல் காட்சி அமைக்கப்பட்டுள்ளது. படத்தில் விஜய் இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

அரசியல்: இந்நிலையில் விஜய் தனது அரசியல் கட்சி தொடங்கியதாக அறிவிப்பு வெளியிட்டபோதே, தற்போது ஒப்புக்கொண்டுள்ள படங்களில் மட்டும் நடித்துவிட்டு, முழுக்க முழுக்க அரசியலில் கவனம் செலுத்தப்போவதாக தெரிவித்துள்ளார். இதனால் விஜய் தற்போது நடித்துவரும் தி கோட் படம் அவரது 68வது படம் ஆகும். அதேபோல் 69வது படத்தில் நடிக்கவும் அவர் ஏற்கனவே ஒப்பந்தம் செய்துவிட்டார் என கூறப்படுகின்றது. அதன் அடிப்படையில், தனது 69வது படத்தில் நடித்து முடித்துவிட்டு ஒட்டுமொத்தமாக சினிமாவில் இருந்து விலகவுள்ளார்.
ஹெச்.வினோத்: இந்நிலையில், கடந்த சில வாரங்களாக 69 வது படத்தினை இயக்குநர் ஹெச். வினோத் இயக்கவுள்ளார் என்ற தகவல் வெளியானது. இதுமட்டும் இல்லாமல் இந்த படத்தின் கதை ஏற்கனவே முடிவு செய்யபட்டு விட்டதாகவும், படத்தில் விஜய் ஒரு போராட்டக்குழுவின் தலைவராக நடிக்கவுள்ளார் எனவும் கூறப்பட்டது.

ரம்பா குடும்பம்: இப்படியான பேச்சுகள் அடிபட்டுக்கொண்டு இருக்கும்போது, நடிகை ரம்பா மற்றும் அவரது குடும்பத்தினர் விஜய்யுடன் சந்திப்பு நடத்தியுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்களை ரம்பா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் ரம்பாவின் மகன் ஷிவினை விஜய் தூக்கி தனது இடுப்பில் வைத்துக் கொண்டு இருக்கின்றார். மேலும் அவரது இரண்டு பெண் குழந்தைகளுடனும் ரம்பாவின் கணவருடனும் உரையாடுகின்றார்.

தளபதி 69: இந்நிலையில் இந்த புகைப்படங்களை வைத்து தமிழ் சினிமா வட்டாரத்தில் பேச்சு ஒன்று பரவலாக உலா வருகின்றது. அதில், நடிகை ரம்பாதான் விஜய்யின் 69வது படத்தில் அவருக்கான ஜோடி என கூறப்படுகின்றது. மேலும் அந்த படம் முழுக்க முழுக்க அரசியல் படம் என்பதால் அதில் டான்ஸ், மற்றும் அதிகப்படியான ரொமான்ஸ் காட்சிகளுக்கு இடம் இருக்காது என கூறப்படுகின்றது.
ரம்பா ஜோடி: மேலும் படத்தில் விஜய் 50 வயதை எட்டியவருக்கான கதாபாத்திரத்திலேயே நடிக்கின்றார் எனவும் கூறப்படுகின்றது. இதனால் அந்த கதாபாத்திரத்திற்கு ஜோடியாக அவருடன் ஏற்கனவே நடித்த கதாநாயகிகளில் ரம்பாவை விஜய் டிக் செய்துள்ளார் என கூறப்படுகின்றது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவுப்பு தி கோட் படம் ரிலீஸ் ஆன பின்னர் வெளிவரும் என கூறப்படுகின்றது. ஏற்கனவே விஜய் மற்றும் ரம்பா இருவரும் மின்சாரா கண்ணா, என்றென்றும் காதல், நினைத்தேன் வந்தாய் ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











