அருண் பாண்டியனை கட்டிப்பிடித்து அழுத ரம்யா பாண்டியன்.. காரணம் என்ன.. தாய்மாமன் சொன்ன தகவல்!
சென்னை: நடிகை ரம்யா பாண்டியன் கடந்த சில தினங்களுக்கு முன்பு வட இந்தியாவை சேர்ந்த லோவல் தவானை திருமணம் செய்து கொண்டுள்ளார். முன்னதாக பெங்களூருவிற்கு யோகா பயிற்சிக்காக சென்றபோது இவர்களின் காதல் மலர்ந்ததாக அவர் பேட்டியொன்றில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இவர்களது திருமணம் கங்கைக் கரையில் ரிஷிகேஷில் பிரம்மாண்டமாக நடந்து முடிந்துள்ளது.
இதுகுறித்து தற்போது ரம்யா பாண்டியனின் தாய் மாமா கணேசன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். மெஹந்தி, சங்கீத், ஹல்தி, திருமணம் என நான்கு நிகழ்வுகளையும் மிகவும் பிரம்மாண்டமாக ரம்யா பாண்டியன் திட்டமிட்டிருந்ததாகவும் இந்த திருமணத்திற்காக சென்றவர்கள் அனைவரையும் சிறப்பாக கவனித்ததாகவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

நடிகை ரம்யா பாண்டியன்: நடிகை ரம்யா பாண்டியனின் திருமணம் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெங்களூருவை சேர்ந்த யோகா மாஸ்டர் லோவல் தவானுடன் மிகவும் பிரம்மாண்டமாக நடந்து முடிந்துள்ளது. ரிஷிகேஷின் கங்கை கரையில் பிரபல ரிசார்ட்டில் இவர்களது திருமணம் மிகவும் நெருங்கிய சொந்தங்கள், நண்பர்கள் சூழ நடந்து முடிந்துள்ளது. அதிகாலை பனி சூழ நடந்த இவர்களது திருமணம், மாயலோகத்தில் நடந்ததை போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியதாக பார்த்தவர்கள் அனைவரும் பாராட்டு தெரிவித்தனர். இந்நிலையில் மணமக்கள் உள்ளிட்ட அனைவரும் சென்னை திரும்பியுள்ளனர்.
தாய்மாமா கணேசன் உற்சாகம்: ரம்யா பாண்டியனின் தாய்மாமா கணேசனும் திரைத்துறையை சார்ந்தவர் தான். சினிமாவில் பிஆராக உள்ள இவர் தன்னுடைய அக்கா மகளின் திருமணம் குறித்து தற்போது youtube-ல் பகிர்ந்துள்ளார். சிறுவயதில் இருந்தே படிப்பில் மிகவும் சிறப்பாக செயல்பட்ட ரம்யா பாண்டியன் ஒவ்வொரு விஷயத்தையும் மிகவும் கவனமுடன் பர்ஃபெக்டாக செய்பவர் என்றும் பள்ளிப்படிப்பில் மாவட்ட அளவில் முதல் மதிப்பெண் பெற்ற நிலையில் தொடர்ந்து கல்லூரி படிப்பை நிறைவு செய்து வேலையில் இருந்த நிலையில் சினிமா துறையில் தன்னை இணைத்துக் கொண்டார் என்றும் கணேசன் தெரிவித்துள்ளார்.

ரம்யா பாண்டியன் -லோவல் தவான் காதல்: சிறு வயதிலிருந்தே சினிமாவில் இணையும் ஆசை கொண்ட ரம்யா பாண்டியன், தன்னுடைய நண்பர்களின் குறும்படங்கள் மூலமாக திரைத்துறையில் தன்னை இணைத்துக் கொண்டதாகவும் தொடர்ந்து டம்மி டப்பாசு படத்தின்மூலம் சினிமாவில் என்ட்ரி கொடுத்ததாகவும் கணேசன் பகிர்ந்துக் கொண்டுள்ளார். விஜய் டிவியின் பிக்பாஸ், குக் வித் கோமாளி நிகழ்ச்சிகள் மூலமாகவும் தன்னை சிறப்பாக வெளிப்படுத்தியதை சுட்டிக்காட்டியுள்ளார். ஒரு கட்டத்தில் பெங்களூரில் நடைபெற்ற யோகா பயிற்சிக்காக சென்ற ரம்யா பாண்டியன் அங்கு மாஸ்டராக இருந்த லோவல் தவானை சந்தித்து காதல் வயப்பட்டுள்ளார்.
காதலை ஏற்ற பெற்றோர்: இந்த யோகா பயிற்சிக்காக ஒரு மாத காலங்கள் ரிஷிகேஷ் உள்ளிட்ட பல இடங்களில் இவர்கள் சென்ற நிலையில் அந்த தருணம் இவர்களுக்குள் காதல் மலர்ந்ததாகவும் கணேசன் மேலும் குறிப்பிட்டுள்ளார். இதை அவர்கள் இருவரும் குடும்பத்தினரிடம் கூறியபோது அவர்களை மற்றும் அவர்களது காதலை குடும்பத்தினர் ஏற்றுக் கொண்டதாகவும் அதன் விளைவாக திருமணம் அவர்களது விருப்பப்படியே நடந்துள்ளதாகவும் கணேசன் கூறியுள்ளார். இந்த திருமணத்திற்காக அடிக்கடி ரிஷிகேஷுக்கு குறிப்பிட்ட இடத்திற்கு ரம்யா பாண்டியன் தானே நேரிடையாக சென்று ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்ததாகவும் கூறியுள்ளார்.
பிரம்மாண்ட திருமணம்: முன்னதாக யோகா பயிற்சிகளுக்காக அந்த இடத்திற்கு சென்றபோது அங்கு தான் தங்களுக்கு திருமணம் நடக்க வேண்டும் என்று அவர்கள் முடிவெடுத்ததையும் கணேசன் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் குறைவான குடும்ப உறுப்பினர்களுடன் நடந்து முடிந்துள்ள இந்து திருமணத்தில் வந்தவர்களை அனைவரையும் கவரும்வகையில் சவுத் இந்தியன் மற்றும் நார்த் இந்தியன் உணவுகள் கிடைக்கும் வகையில் வழிவகை செய்யப்பட்டிருந்ததாகவும் கணேசன் பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும் மெஹந்தி, ஹல்தி, சங்கீத் மற்றும் திருமணம் என 4 வெவ்வேறு நிகழ்வுகள் நடத்தப்பட்ட நிலையில் அவற்றின் ஏற்பாடுகளை பார்த்து தான் மலைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
கண்ணீர்விட்ட ரம்யா பாண்டியன்: இந்த நிகழ்ச்சிகளில் குறிப்பாக சங்கீத் நிகழ்ச்சியில் அருண்பாண்டியன் மற்றும் அவரது மகள் கீர்த்தி பாண்டியன், மருமகன் அசோக் செல்வன் என அனைவரும் சிறப்பாக நடனமிட்டதையும் தெரிவித்த கணேசன், திருமணத்தை தொடர்ந்து தன்னுடைய சித்தப்பா அருண் பாண்டியனை கட்டிப்பிடித்து ரம்யா பாண்டியன் கதறி அழுததாகவும் அதற்கு காரணம் அந்த நேரத்தில் அவர் தன்னுடைய அப்பாவை நினைத்துக் கொண்டதாக இருக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் சிறுவயதிலேயே ரம்யா பாண்டியனின் அப்பா இறந்த நிலையில் அவர்களது குடும்பத்தை அருண்பாண்டியன் சிறப்பாக வழி நடத்தியதாகவும் கணேசன் சுட்டிக்காட்டியுள்ளார். இதுவும் ரம்யா பாண்டியனின் அழுகைக்கு காரணமாக அமைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











