தேர்தலில் தோற்ற கையோடு ரஜினிகாந்தை சந்தித்த ராதிகா சரத்குமார்; மனமுடைந்தாரா? உண்மையான காரணம் என்ன?
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது வேட்டையன் படத்தில் மும்முரமாக நடித்துக் கொண்டிருக்கிறார். லோகேஷ் கனகராஜின் கூலி படத்திலும் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படத்துக்கான படப்பிடிப்பு இன்னும் நான்கு தினங்களில் அதாவது ஜூன் 10ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதனிடையே இன்று அதாவது ஜூன் மாதம் ஆறாம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் நடிகர் சரத்குமார் அவரது மனைவி ராதிகா சரத்குமார் மகள் வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட குடும்பத்தினர் சந்தித்துள்ளனர். இந்த சந்திப்பின்போது சூப்பர் ஸ்டார் ரஜினியின் குடும்பத்தாரும் உடன் இருந்தனர்.
வரலஷ்மி திருமணம்: இந்த சந்திப்பின் போது எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வரலட்சுமி சரத்குமார் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த சந்திப்புக்கான காரணத்தை வரலட்சுமி சரத்குமார் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். மேலும், ரஜினிக்கும், அவரது மனைவி லதாவுக்கும் மகள் ஐஸ்வர்யாவுக்கும் நன்றி தெரிவித்துள்ளார். ஏற்கனவே வரலட்சுமி சரத்குமாருக்கு அவரது காதலருடன் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை குடும்பத்தினருடன் சந்தித்து, அவரது திருமணத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

விருது நகரில் தோற்ற ராதிகா: அதே போல் நடந்து முடிந்த 18 வது மக்களவைத் தேர்தலில் விருதுநகர் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளராக போட்டியிட்ட நடிகை ராதிகா சரத்குமார் ஒரு லட்சத்து 66 ஆயிரத்து 251 வாக்குகள் பெற்று காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் மாணிக்கம் தக்கூரிடம் தோல்வியை சந்தித்தார். மாணிக்கம் தாகூர் மொத்தம் மூன்று லட்சத்து 85 ஆயிரத்து 256 வாக்குகள் பெற்றார். அவருக்கு அடுத்த இடத்தில் இருந்த மறைந்த நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் மூன்று லட்சத்து 80 ஆயிரத்து 877 வாக்குகள் பெற்றிருந்தார். தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு இரண்டு நாட்களில் ராதிகா சரத்குமார் தனது கணவர் சரத்குமார் மற்றும் மகள் வரலட்சுமி சரத்குமாருடன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சந்தித்துள்ளதும் கவனம் பெற்றுள்ளது.

மக்களவைப் பொதுத் தேர்தலில் தோல்வியைச் சந்தித்த பின்னர், "அனைத்து போர்களும் வெற்றிக்காக நடத்தப்பட்டவை அல்ல. அவற்றில் சில போர்கள் போரிட்டவர்களின் பெயர்களை சொல்ல வேண்டும் என்பதற்காக நடத்தப்படுகின்றன. இந்த வரியை நான் படித்துள்ளேன்'' என்று ராதிகா சரத்குமார் பதிவிட்டிருந்தார்.

வேட்டையன் மற்றும் கூலி: சூப்பர் ஸ்டார் நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள திரைப்படம் வேட்டையன். இந்த படத்தை ஜெய் பீம் படத்தின் மூலம் தமிழ்நாடு அரசையே திரும்பிப் பார்க்க வைத்த ஞானவேல் இயக்குகின்றார். இந்த படத்தினை லைகா புரெடக்ஷன்ஸ் தயாரிக்கின்றது. இந்த படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், பகத் ஃபாசில், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.இந்த திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் 10ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கின்றார்.

இதையடுத்து வரும் 10ஆம் தேதி முதல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றது. இந்த படத்திற்கும் அனிருத் இசையமைக்கின்றார்.


Click it and Unblock the Notifications











