Rohini: இன்னும் கொஞ்ச காலம் அவரோட சேர்ந்து இருந்திருக்கலாமோ.. ரகுவரன் குறித்து ரோகிணி உருக்கம்!
சென்னை: தமிழில் ஹீரோவாகவே என்ட்ரி கொடுத்தார் நடிகர் ரகுவரன். தன்னுடைய தனிப்பட்ட குரல் மற்றும் ஸ்டைலால் இவருக்கு அடுத்தடுத்து வில்லன் வேடங்கள் வந்தன. தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் ரகுவரன்.
ரகுவரன் நடிகை ரோகிணியை காதலித்து திருமணம் செய்த நிலையில் இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். சில கருத்து வேறுபாடுகள் காரணமாக இவர்கள் இருவரும் பிரிந்த நிலையில், ரோகிணி நடிப்பு, டப்பிங் என தன்னுடைய வேலைகளில் பிசியாகிவிட்டார். இந்நிலையில் தற்போது தன்னுடைய பேட்டியில் ரகுவரன் குறித்து மனம்திறந்து பேசியுள்ளார் ரோகிணி.

நடிகர் ரகுவரன்: நடிகர் ரகுவரன், தமிழில் ஹீரோவாக என்ட்ரி கொடுத்தவர். தன்னுடைய ஆரம்ப படத்தில் காக்கை சிறகினிலே நந்தலாலா என்ற பாரதியாரின் பாடலுக்கு ஹீரோயினுடன் இவர் நடைபயின்றுக் கொண்டு காதல் செய்ததை யாரும் மறந்திருக்க முடியாது. சில படங்களில் ஹீரோவாக நடித்துள்ள இவரின் தனிப்பட்ட குரல் மற்றும் பாடி லேங்குவேஜ் இவரை வில்லனாக ரசிகர்களிடையே அறிமுகம் செய்தது. தொடர்ந்து ரஜினிகாந்த் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் வில்லனாக மோதினார். ஹீரோவுக்கு இணையாக தன்னுடைய கேரக்டர்களை பலப்படுத்துவதில் சிறப்பாக இருந்தார் ரகுவரன்.
ரஜினி -ரகுவரன் நட்பு: இவருக்கும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கும் இடையில் மிகச்சிறப்பான நட்பு இருந்தது. தொடர்ந்து படப்பிடிப்பின் இடைவேளைகளில்கூட இவர்கள் இருவரும் படங்கள் குறித்தும் நடிப்பு குறித்தும் பல விஷயங்களை பேசுவார்கள் என்று ரகுவரனின் தம்பி தன்னுடைய பேட்டியொன்றில் முன்னதாக பேசியிருந்தார். ரகுவரன் உயிரிழந்தபோதுகூட, ரஜினிகாந்த், மருத்துவமனையில் நீண்ட நேரம் காத்திருந்ததாகவும் அவர் கூறியுள்ளார். இறுதி காலகட்டங்களில் ரகுவரன் அதிகமான படங்களை ஏற்றுக் கொள்ளாத நிலையில், தனுஷ் கேட்டுக் கொண்டதற்கு இணங்க யாரடி நீ மோகினி படத்தில் அவரது அப்பாவாக நடித்திருந்தார் ரகுவரன்.
சகோதரர் பேட்டி: இந்தப் படத்தில் அவரது இறப்பு திடீரென நிகழ்வதாக அமைந்திருக்கும். அதேபோல ரகுவரனின் சொந்த வாழ்க்கையிலும் அவரது இறப்பு திடீரெனவே நடந்துவிட்டது. நடிகை ரோகிணியை காதல் திருமணம் செய்துக் கொண்ட ரகுவரனுக்கு மகன் ஒருவர் உள்ளார். ரகுவரன் மற்றும் ரோகிணி இருவரும் அவர்களுக்குள் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்த நிலையில், ரகுவரன் தனிமைப்பட்டார். இதையே அவர் கடைசி காலத்திலும் விரும்பியதாக அவரது தம்பி தனது பேட்டியில் கூறியுள்ளார். அவர் எதற்காக குடிக்கத் துவங்கினார் என்பது குறித்து தெரியாது என்று கூறியுள்ள அவர், அந்த நேரத்தில் அவரது சொந்த வாழ்க்கையில் அதிகமான பிரச்சினைகள் இருந்ததையும் சுட்டிக் காட்டியுள்ளார்.
ரோகிணி உருக்கம்: ரகுவரன் -ரோகிணி இடையில் பிரிவு ஏற்பட்ட போதிலும் விவாகரத்திற்கு பிறகும் தங்களுக்குள் ஒரு நட்பு இருந்ததாக நடிகை ரோகிணி தனது பேட்டியொன்றில் கூறியுள்ளார். இருந்தாலும் இன்னும் சிறிது காலங்கள் அவருடன் இருந்திருக்கலாமோ என்ற எண்ணம் இப்போதுவரை தன்னுடைய மனதில் நெருடிக் கொண்டிருப்பதாக ரோகிணி அந்த பேட்டியில் தனது உருக்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். முன்னதாக இது ஒரு மனிதனின் கதை என்ற தொலைக்காட்சி தொடரில் குடிப்பழக்கத்திற்கு ஆளானதால் ஒரு மனிதனின் வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகளை மையமாக கொண்டு நடித்திருந்தார் ரகுவரன். அது அவரது நிஜ வாழ்க்கையிலும் நடந்ததுதான் மிகப்பெரிய சோகம்.


Click it and Unblock the Notifications











