மானே தேனே என்றால் உருகிவிட வேண்டாம்.. பெண்களுக்கு நடிகை ரோகிணி அட்வைஸ்!
சென்னை : நடிகை ரோகிணி நாயகியாக தன்னுடைய திரைப்பயணத்தை துவங்கி பல ஆண்டுகளாக தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார்.
பாகுபலியில் பிரபாசின் அம்மாவாக நடித்திருந்த ரோகிணியின் நடிப்பு சிறப்பான கவனத்தை பெற்றது. தன்னுடைய மகனின் நலத்திற்காக இவர் செய்யும் வேண்டுதல் சிறப்பாக அமைந்தது.
சினிமாவில் மட்டுமில்லாமல் பொதுவெளியிலும் தன்னை சிறப்பாக வெளிப்படுத்தி வருகிறார் ரோகிணி. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாநில துணைத் தலைவராகவும் செயல்பட்டு வருகிறார்.

நடிகை ரோகிணி
நடிகை ரோகிணி தமிழில் நாயகியாக தன்னுடைய திரைப்பயணத்தை துவக்கி, தென்னிந்திய மொழிகளில் சிறப்பான பல படங்களில் நடித்துள்ளார். தொடர்ந்து தற்போது கேரக்டர் ரோல்களில் நடித்துவரும் ரோகிணி, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாநில துணைத் தலைவராகவும் செயல்பட்டு வருகிறார். பாகுபலி படத்தில் பிரபாசின் அம்மாவாக நடித்து அனைவரையும் கவர்ந்திருந்தார் ரோகிணி.

பெண்கள் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் ராஜபாளையத்தில் சர்வதேச பெண்கள் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்ட நடிகை ரோகிணி சமூகத்தில் பெண்கள் நிலை, அவர்கள் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் உள்ளிட்டவை குறித்து பல்வேறு விஷயங்களை பகிர்ந்துக் கொண்டார். ஆண்களுக்கு வழங்கப்படும் கல்விக்கட்டணம் நல்ல முதலீடு என்று நினைக்கும் பெற்றோர், பெண்களுக்கு வழங்கப்படும் கல்விக்கட்டணம் என்பது தேவையற்ற முதலீடு என்று கருதுவதை சுட்டிக்காட்டினார்.

பெண்களுக்கு மறுக்கப்படும் கல்வி
இதனால் தாங்கள் விரும்பும் கல்வியை தேர்ந்தெடுக்கும் உரிமைகூட பெண்களுக்கு மறுக்கப்படுவதாகவும் ரோகிணி தெரிவித்தார். பெண்கள் கைகளில் கேமிரா சென்றால் திரைப்படங்களும் குறும்படங்களும் சிறப்பான கதைகளை சொல்லும் என்றும் பெண்களுக்கு சினிமாவை கற்றுக் கொடுக்க வேண்டும் என்றும் அவர் மேலும் கூறினார். மகளிர் தினத்திற்கு பெண்களுக்கு ஆடைகளை வாங்கிக் கொடுத்தால் மட்டும் போதாது. வீட்டு வேலைகளை ஆண்கள் பகிர்ந்துக் கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

பெண்கள் உருகிவிட வேண்டாம்
பெண்கள் மென்மையானவர்கள் என்றும் ஆண்கள் வலிமையானவர்கள் என்றும் பிரித்துவைத்து அரசியல் செய்யப்படுவதை சுட்டிக் காட்டிய ரோகிணி, இதில் அடக்குமுறை உள்ளதாகவும் இதற்கு பெண்கள் ஆளாகிவிட வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார். மானே தேனே என்றால் பெண்கள் உருகிவிட வேண்டாம் என்றும் சிங்கப் பெண்ணே என்று சொல்வதில் என்ன பிரச்சினை என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

சிறப்பான பெண்களுக்கு விருதுகள்
பெண்களின் நிலையில் மாற்றங்களை கொண்டுவர இது போன்ற நிகழ்ச்சிகள், பேச்சுக்கள் தேவை என்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் திரைப்படங்கள் தேவை என்றும் ரோகிணி குறிப்பிட்டுள்ளார். மகளிர் தினம் குறித்து பேசினால் மட்டுமே சமூகத்தில் மாற்றங்களை கொண்டுவர முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார். முன்னதாக அரசியல், கல்வி, மருத்துவம், சேவை, பொதுவுடமை, போராட்டம் என பல்வேறு துறைகளில் முன்னேறி வரும் பெண்களுக்கு ரோகிணி விருதுகள் வழங்கி பாராட்டினார்.


Click it and Unblock the Notifications











