ரகுவரன் இந்நேரம் இருந்திருந்தால்... நினைவுநாளில் உருகிய நடிகை ரோகிணி: ரசிகர்கள் கண்ணீர்!
சென்னை: தமிழ்த் திரையுலகில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வந்தவர் ரகுவரன்.
ஹீரோ, கெஸ்ட் ரோல், வில்லன் என வெரைட்டியாக மிரட்டிய ரகுவரன், 2008ம் ஆண்டு இதேநாளில் (மார்ச் 19) உயிரிழந்தார்.
ரகுவரனின் நினைவு நாளை முன்னிட்டு அவரது மனைவியும் நடிகையுமான ரோகிணி மிக உருக்கமாக ட்வீட் செய்துள்ளார்.
ரோகிணியின் இந்தி ட்விட்டர் பதிவு ரகுவரன் ரசிகர்களை கண்ணீர் கசிய வைத்துள்ளது.

மகா நடிகன் ரகுவரன்
1982ம் ஆண்டு வெளியான ஏழாவது மனிதன் திரைப்படம் மூலம் நடிகராக அறிமுகமானவர் ரகுவரன். பூவிழி வாசலிலே, அஞ்சலி, காதலன், லவ் டுடே, நேருக்கு நேர், ஆஹா, முகவரி, அமர்க்களம் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக பாட்ஷா படத்தில் மார்க் ஆண்டனி என்ற கேங்ஸ்டர் கேரக்டரில் ரஜினிக்கு வில்லனாக நடித்து மிரட்டியிருந்தார். அதேபோல், ஷங்கர் இயக்கிய முதல்வன் படத்தில் முதலமைச்சராக நடித்து மாஸ் காட்டியிருப்பார்.

ரோகிணியின் உருக்கமான ட்வீட்
ஹீரோ, வில்லன், லீடிங் கேரக்டர் என வெரைட்டியான பாத்திரங்களில் நடித்து வந்த ரகுவரன், 2008ம் ஆண்டு உயிரிழந்தார். அளவுக்கு அதிகமாக மது அருந்தியதால் உடல்நலம் பாதிக்கப்பட்டு தனது 49வது வயதிலேயே உயிரிழந்தது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், ரகுவரனின் நினைவுநாளை முன்னிட்டு அவரது மனைவியும் நடிகையுமான ரோகிணி ட்வீட் செய்துள்ளார்.

ரகு இந்நேரம் இருந்திருந்தால்
அந்த டிவிட்டர் பதிவில், "2008 மார்ச் 19ம் தேதி சாதாரண ஒரு நாளாக தான் விடிந்தது. ஆனால், அன்று ரகுவரன் உயிரிழந்தது என்னையும் ரிஷியையும் மொத்தமாக மாற்றிப் போட்டது. ரகு இப்போது இருந்திருந்தால் சினிமாவின் இந்தக் கட்டத்தை மிகவும் நேசித்திருப்பார். ஒரு நடிகராகவும் அவர் மகிழ்ச்சியாக இருந்திருப்பார்" என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

ரசிகர்கள் கண்ணீர்
நடிகை ரோகிணியின் இந்த டிவிட்டர் பதிவு ரகுவரனின் ரசிகர்களை ரொம்பவே எமோஷனலாக்கியுள்ளது. ரகுவரன் - ரோகிணி இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். 1996ல் திருமணம் செய்துகொண்ட ரகுவரனும் ரோகிணியும் 2004ம் ஆண்டு பிரிந்தனர். இவர்களுக்கு ரிஷிவரன் என்ற மகனும் உள்ளார். ரோகிணியை பிரிந்த பிறகே ரகுவரன் அதிகளவில் போதை பழக்கத்திற்கு அடிமையானதாக சொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

என்றென்றும் நினைவில்
நடிகராக மட்டும் இல்லாமல் சிறந்த பியானோ இசைக் கலைஞராகவும் பாடகராகவும் வலம் வந்தவர் ரகுவரன். லண்டன் ட்ரினிட்டி கல்லூரியில். முறையாக இசைப் பயின்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவரே 6 பாடல்கள் கொண்ட மியூசிக் ஆல்பத்தை உருவாக்கி, அதனை நடிகர் ரஜினி வெளியிட ரோகிணியும் ரகுவரனின் மகன் ரிஷியும் பெற்றுக்கொண்டனர் என்பது பலரும் அறியாத தகவல். தனது உடல்மொழியாலே வில்லனாக மிரட்டிய ரகுவரனுக்கு மாற்றாக இதுவரை யாரும் இல்லை என்பதே அவரது தனித்துவமான நடிப்புக்கு சான்று.


Click it and Unblock the Notifications











