தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்..பெற்றோரை இழந்த சிறுமிக்கு வாழ்வளித்த ரோஜா..குவியும் பாராட்டு!
சென்னை : பெற்றோரை இழந்த சிறுமியை நடிகை ரோஜா தத்தெடுத்து வளர்த்து வருகிறார். அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தென்னிந்திய திரை உலகில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக இருந்தவர் ரோஜா. செம்பருத்தி படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமான இவர் முதல் படத்திலேயே தமிழ் ஆடியன்ஸின் மனதில் இடம்பிடித்தார்.
இதையடுத்து, ரஜினி, சத்யராஜ், பிரபு, சிரஞ்சீவி உள்பட தென்னிந்திய ஹீரோக்களுடன் இணைந்து பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார்.

நடிகை ரோஜா
ஆந்திராவை பூர்வீகமாக கொண்ட ரோஜா, 1999-ல் தெலுங்கு தேச கட்சியில் இணைந்தார். அதன் பின்னர் 2009-ல் அக்கட்சியை விட்டு விலகி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த ரோஜா பின்னாளில் எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்டு தற்போது ஆந்திராவின் சுற்றுலா மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சராக உள்ளார்.

சிறுமியை தத்தெடுத்த ரோஜா
2020 ஆம் ஆண்டில், கொரோனாவிற்கு தனது பெற்றோரை பறிகொடுத்த திருப்பதியைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவி புஷ்ப குமாரியை நடிகை ரோஜா தத்தெடுத்து வளர்த்து வருகிறார். தற்போது அந்த சிறுமி புஷ்பகுமாரி பனிரெண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்று நீட் தேர்விலும் வெற்றி பெற்றுள்ளார்.

குவியும் வாழ்த்து
இதையடுத்து, மருத்துவம் படிக்க ஆசைப்பட்ட அந்த சிறுமி திருப்பதியிலுள்ள பத்மாவதி மகளிர் கல்லூரியில் மருத்துவம் படிக்க சேர்ந்துள்ளார்.மாணவியின் மருத்துவக் படிப்புக்கான கல்லூரி கட்டணம் முழுவதையும், நடிகை ரோஜாவே ஏற்றுக்கொண்டுள்ளார். ரோஜாவின் இந்த செயலுக்கு சமூக வலைத்தளத்தில் பலர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இலவச மருத்துவம்
நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று, மருத்துவராக உள்ள சிறுமி புஷ்பகுமாரிக்கு நடிகை ரோஜா, அவரது கணவர் ஆர்.கே.செல்வமணி மற்றும் குழந்தைகள் அன்சுமாலிகா, கிருஷ்ணா லோஹித் ஆகியோர் சால்வை அணிவித்து கௌரவித்தனர். மேலும், சிறுமி புஷ்பகுமாரி, மருத்துவ வசதி கிடைக்காமல் பெற்றோரை நான் இழந்தது போல எதிர்காலத்தில் யாரும் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக மருத்துவம் படிப்பதாக தெரிவித்துள்ளார்.

எனக்கு ஆசையில்லை
நடிகை ரோஜாவின் மகள் அன்ஷூகா மாலிகா சினிமாவில் நடிக்க இருப்பதாகவும் துருவ் விக்ரம் ஜோடியாக அவர் தெலுங்குத் திரைப்படம் ஒன்றில் அறிமுகமாக இருப்பதாகவும் செய்திகள் வெளியானதை ஆர்கே செல்வமணி மறுத்திருந்த நிலையில் நடிகை ரோஜாவும் என்னுடைய மகள் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு இல்லை என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











