நடிகை ரோஜாவின் கார் மீது சரமாரி தாக்கு.. உதவியாளருக்கு காயம்..நடந்தது என்ன?
ஆந்திரா : நடிகையும் அமைச்சருமான ரோஜாவின் காரை மறித்து சரமாரி தாக்குதல் நடத்தியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் ரோஜா. இவர் ரஜினி, சிரஞ்சீவி உள்பட தென்னிந்திய ஹீரோக்களுடன் இணைந்து பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார்.
ஆந்திராவை பூர்வீகமாக கொண்ட ரோஜா, 1999-ல் தெலுங்கு தேச கட்சியில் இணைந்தார். அதன் பின்னர் 2009-ல் அக்கட்சியை விட்டு விலகி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த ரோஜா பின்னாளில் எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்டு தற்போது ஆந்திராவின் சுற்றுலா மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சராக உள்ளார்.

சரமாரி தாக்குதல்
ஆந்திர மாநிலத்திற்கு மூன்று தலைநகரங்கள் வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, விசாகப்பட்டினம் பகுதியில் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் பிரபல நடிகையும், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமைச்சருமான ரோஜா பங்கேற்றார். இப்போராட்டத்தில் பங்கேற்றுவிட்டு திரும்பிய ரோஜா உள்ளிட்ட ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் நிர்வாகிகள் விமான நிலையம் சென்று கொண்டிருந்தனர்.

உதவியாளருக்கு தலையில் காயம்
அப்போது நடிகர் பவன் கல்யாண் கட்சியைச் சேர்ந்த ஜன சேனா கட்சி நிர்வாகிகள் ரோஜாவின் காரை மறித்து சரமாரி தாக்குதல் நடத்தினர். பின்னர், ஒய்.எஸ்.ஆர் கட்சியை சேர்ந்தவர்கள் மீது, ஜன சேனா கட்சி நிர்வாகிகள் கொலைவெறி தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இத்தாக்குதலில் ரோஜாவின் உதவியாளருக்கு தலையில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

25 பேர் கைது
அங்கு பாதுகாப்பு பகுதியில் இருந்த பலரும் படுகாயமடைந்தனர். அமைச்சர் ரோஜா மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய ஜன சேனா கட்சியைச் சேர்ந்த 25 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் அவர்கள் மீது, காவலர்களை வேலை செய்யாமல் தடுத்தது, அமைச்சர் ரோஜா மீது தாக்குதல் நடத்தியதற்காக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஓட்டல் முற்றுகை
இதனையடுத்து பவன்கல்யாண் தங்கியிருந்த ஓட்டலை ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் முற்றுகையிட்டு ஆர்பாட்டம் செய்தனர். இதையடுத்து, ஆர்ப்பாட்டக்காரர்களை போலீசார் அங்கிருந்து வெளியேற்றினர். இருப்பினும் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவுவதால், அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











