8 மாசத்துல கொல்லப்போறாங்க.. இந்த தீர்ப்பு கொடுத்ததுக்கு வெட்கப்படுங்க.. சதா கண்ணீர் வீடியோ!
டெல்லி: நடிகை சதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அழுது கொண்டே வெளியிட்டுள்ள வீடியோ பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக பலரும் பதறியடித்துக் கொண்டு, பலரும் அந்த வீடியோவைப் பார்த்து அவருக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். டெல்லியில் 6 வயது குழந்தை தெரு நாய் கடித்த பின்னர் மரணித்தது. ஆனால் குழந்தையின் மரணத்திற்கு ரேபிஸ் நோய் காரணமில்லை என்று மருத்துவ சான்றிதழ்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் தலைநகர் டெல்லியில் உள்ள 10 லட்சம் தெரு நாய்களை பிடித்து கருத்தடை ஊசி போட்டு, அவற்றை காப்பகங்களில் அடைக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து சதா அழுது கொண்டே வீடியோ வெளியிட்டுள்ளார்.
இந்த நாடு எதை நோக்கிப் போய்க்கொண்டு உள்ளது என கேப்ஷனிட்ட வீடியோவில், சதா அழுது கொண்டே பேசியிருப்பதாவது, " 6 வயது குழந்தை இறந்ததற்கு காரணம் ரேபீஸ் இல்லை என்பது நிரூபணம் ஆன பிறகும் கூட, நீதிமன்றம் இதுபோன்ற உத்தரவைப் பிறப்பித்துள்ளது. 10 லட்சம் நாய்களுக்கு அரசால் அடைக்கலம் கொடுக்க முடியாது. எனவே, இதற்கென அமைக்கப்பட்டுள்ள தனிப்படை குழுவினர் அத்தனை நாய்களையும் கொல்லப் போகிறார்கள்.

தெரு நாய்களுக்கு உரிய காலத்தில் கருத்தடை ஊசி போட்டு அவற்றின் எண்ணிக்கையை கட்டுப் படுத்தாதது, மாநில அரசின், நகராட்சியின் தோல்விதான். அப்படி இருக்கும்போது இந்த நாய்களை தண்டிப்பது எப்படி சரியானதாக இருக்கும். இதற்கென பட்ஜெட்டில் கணிசமான அளவு நிதி ஒதுக்கி முறையாக நடைமுறை படுத்தி இருந்தால் இன்றைக்கு இவ்வளவு நாய்கள் கொல்லப்படுகிற நிலைக்கு வராது.
யாரால் இந்த நிலை: இந்த நாய்களைக் காப்பாற்ற விலங்கு நல ஆர்வலர்கள், தன்னார்வலர்கள் என பலரும் தங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறார்கள். நான் உட்பட பலரும் சொந்தப் பணத்தை செலவு செய்து நாய்களைக் காப்பற்ற முயற்சி செய்து வருகிறோம். ஆனால், அது போதுமானதாக இல்லை. வீட்டில் அழகான நாய்க்குட்டி வேண்டும் என விலைக்கு எங்கிருந்தோ நாய்களை வாங்கி வளர்க்கும் உங்களால் தான் இன்றைக்கு பல நாய்கள் தெருக்களில் உள்ளன. பரிதாபமாக உயிரையும் விடப் போகின்றன. நீங்கள் எல்லாம் விலங்குகள் மீதோ, நாய்கள் மீதோ பிரியமானவர்கள் என்று சொல்லக் கூட தகுதியற்றவர்கள்.
நாடு வெட்கப்பட வேண்டும்: நீதிமன்றத்தால் இப்படி ஒரு உத்தரவு வெளியான பின்னர் இந்த உத்தரவை எப்படி தடுக்க முடியும். இதற்காக எங்கு போராட்டம் செய்வது என்றே தெரியவில்லை. நாய்களை முறையாக பராமரிக்க தவறிய இந்த நாடு வெட்கப்பட வேண்டும். இப்படி ஒரு உத்தரவை பிறப்பித்த நீதிமன்றம் வெட்கப்பட வேண்டும். இந்த உத்தரவைப் பிறப்பிக்கும் முன்னர், நீதிமன்றம், விலங்கு நல ஆர்வ அமைப்பினருடன் கலந்தாலோசித்து இருக்க வேண்டும்" என்று அழுது கொண்டே அந்த வீடியோவில் பேசுகிறார். சதா அழுது கொண்டு வெளியிட்டுள்ள இந்த வீடியோ இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வேகமாக பரவி வருகிறது. இந்த வீடியோவுக்கு பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். பலர் சதாவை சமாதானம் செய்து வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











