அனைத்தும் சிறப்பாக இருந்தது.. ஃபர்ஸி வெப் சீரிஸை ஏகத்துக்கும் புகழ்ந்த சமந்தா
சென்னை: நடிகை சமந்தா சமீபத்தில் வெளியான ஃபர்ஸி வெப் சீரிஸை ஏகத்துக்கும் புகழ்ந்திருக்கிறார். நடிகர்கள் தேர்வு சிறப்பாக இருந்தது என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.
ஃபேமிலி மேன் என்ற வெப் சீரிஸ் கடந்த 2019ஆம் ஆண்டு அமேசான் ப்ரைமில் வெளியானது. ராஜ் மற்றும் டிகே அந்த வெப்சீரிஸை உருவாக்கியிருந்தனர். மனோஜ் பாஜ்பாய், ப்ரியாமணி உள்ளிட்டோர் நடித்திருந்த அந்த வெப் சிரிஸ் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த வெப் சீரிஸ் மூலம் ராஜ் மற்றும் டிகேவும் பிரபலமடைந்தனர்.

முதல் வெற்றிக்கு பிறகு அடுத்த வெற்றி
ஃபேமிலி மேன் வெப் சீரிஸின் முதல் பாகம் பெற்ற வெற்றியை அடுத்து அதன் இரண்டாம் பாகமும் உருவாக்கப்பட்டது. இதில் சமந்தாவும் நடித்திருந்தார். இந்த பாகமும் வெற்றி பெற்றாலும் விடுதலைப்புலிகள் குறித்தும், தமிழ் ஈழ போராட்டம் குறித்தும் தவறாக சித்தரித்துவிட்டனர் என்ற விமர்சனத்தையும் பலர் முன்வைத்தனர்.

ராஜ், டிகே இயக்கத்தில் வெளியான ஃபர்ஸி
இந்நிலையில் இவர்களின் லேட்டஸ்ட் படைப்பாக ஃபர்ஸி கடந்த 9ஆம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியானது. கள்ளநோட்டு விவகாரத்தை அடிப்படையாக வைத்து உருவாகியிருந்த இந்த வெப் சீரிஸில் ஷாகித் கபூர், விஜய் சேதுபதி, கே.கே.மேனன், ரெஜினா, ராஷி கண்ணா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். கடந்த 9ஆம் தேதி வெளியான இந்த வெப் சீரிஸ் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

ஹிந்தியில் மாஸ் காட்டிய விஜய் சேதுபதி
அதேபோல் நடிகர் விஜய் சேதுபதியின் நடிப்பு பெரிதாக பேசப்பட்டது. குறிப்பாக ஹிந்தியில் அவரே டப்பிங் கொடுத்தது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அதேசமயம் தமிழில் அவர் டப்பிங் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு பதிலாக மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட் சரவணகுமார் குரல் கொடுத்திருந்தார். மேலும் ஷாகித் கபூருக்கு தமிழில் நடிகர் ஜீவா கொடுத்திருந்த டப்பிங்கும் பலரது கவனத்தை ஈர்த்தது.

ஃபர்ஸியை புகழ்ந்து தள்ளிய சமந்தா
இந்நிலையில் நடிகை சமந்தா ஃபர்ஸி வெப்சீரிஸை புகழ்ந்திருக்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், "ஃபர்ஸி வெப் சீரிஸ் சிறந்த பொழுதுபோக்காக இருந்தது. ஒவ்வொருவரது நடிப்பையும் மிகவும் விரும்பினேன். நடிகர்களின் தேர்வு மிக சிறப்பாக இருந்தது. எழுத்து, இசை, உரையாடல்கள் என ராஜ் மற்றும் டிகேவிடம் எதிர்பார்த்த அனைத்துமே இருக்கின்றன" என குறிப்பிட்டார்.


Click it and Unblock the Notifications











