Saroja Devi: சரோஜா தேவி அம்மாவை வழியனுப்புகிறேன்.. கன்னம் கிள்ளும் விரலுக்கு சொந்தக்காரி.. கரைந்த கமல்ஹாசன்!
பெங்களூரு: மூத்த நடிகை சரோஜா தேவி. அவர் இன்று அதாவது ஜூலை 14ஆம் தேதி உடல்நலக்குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 87. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என சரோஜா தேவி இந்திய திரை உலகில் கொடிகட்டிப் பறந்த நடிகை. அவரது மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
பழம்பெரும் நடிகை சரோஜா தேவி மறைந்தது ஒட்டுமொத்த இந்திய திரை உலகத்தினருக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கர்நாடகாவை பூர்வீகமாக கொண்டவர் என்றாலும், அவர் ஒட்டுமொத்த இந்திய சினிமாவுக்குமானவராகவே கருதப்படுகிறார். கன்னடத்துப் பைங்கிளி, அபிநய சரஸ்வதி, சலப சுந்தரி, அபிநய காஞ்சனா மாலா, அபிநய பாரதி என புனைப்பெயர்கள் இவருக்கு உண்டு. இவரது மறைவுக்கு திரைப் பிரபலங்கள் தொடங்கி, அரசியல் கட்சித் தலைவர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
பத்மஸ்ரீ கமல்ஹாசன் தனது சமூக வலைதளப் பக்கத்தில், " என்னைப் பார்க்கும் இடமெல்லாம் - என் எந்த வயதிலும் - கன்னம் கிள்ளும் விரலோடு, 'செல்ல மகனே' என்னும் குரலோடு இன்னொரு தாயாக இருந்தவர் சரோஜா தேவி அம்மா. மொழி, பிரதேச எல்லை இல்லாது வாழ்ந்த கலைஞர். மறைந்துவிட்டார். என் இரண்டாம் படமான 'பார்த்தால் பசி தீரும்' படப்பிடிப்புத் தருணங்கள் தொடங்கி எத்தனை எத்தனையோ அழியா நினைவுகள் நெஞ்சில் அலையடிக்கின்றன. கண்கள் ததும்புகின்றன. என்றைக்கும் என்னை முதன்மையானவனாகவே பார்க்க விரும்பிய தாயுள்ளம். வணங்கி வழியனுப்புகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்த்: அதேபோல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது எக்ஸ் பக்கத்தில், " பல கோடி ரசிகர்களின் மனம் கவர்ந்த மாபெரும் நடிகை சரோஜாதேவி இப்போது நம்முடன் இல்லை. அவருடைய ஆத்மா சாந்தியடையட்டும்" என பதிவிட்டுள்ளார். அதேபோல் நடிகரும் இயக்குநரும் கதாசாரியருமான ரமேஷ் கண்ணா நமது பிலிமி பீட் சேனலில் சரோஜா தேவி குறித்து தனது எண்ண ஓட்டங்களை பகிர்ந்து கொண்டார். குறிப்பாக, ஆதவன் படத்தில் இருவரும் இணைந்து நடித்தது தொடர்பாக பகிர்ந்து கொண்டார்.
ஆதவன்: ஆதவன் படத்தின் கதையை எழுதி முடித்ததும் இயக்குநர் கே.எஸ். ரவிக்குமாரிடம் படத்தில் சரோஜா தேவி அம்மாவை நடிக்க வைக்கலாம் என நான் தான் கூறினேன். அதன் பின்னர் தான் அவரை படத்தில் புக் செய்தார்கள். ஆதவன் படத்தில் இருந்த நகைச்சுவை கதாபாத்திரத்தில் முதலில் நான் தான் நடிக்க இருந்தேன். ஆனால் வடிவேலு, உதயநிதியிடம் பேசி, நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஆனால் சரோஜா தேவி அம்மாவுடன் நடிக்க வேண்டும் என்ற ஒற்றைக் காரணத்திற்காக, அந்த படத்தில் இளையமான் என்ற கதாபாத்திரத்தை உருவாக்கினோம். என்னிடம் அன்பாக பழகுவார். படப்பிடிப்புத் தளத்திற்கு வந்தால், கேரவனுக்கு சென்று அமரமாட்டார்.
ஆசீர்வாதம்: அவர் எப்போது சேர் போட்டு படப்பிடிப்புத் தளத்திலேயே அமர்ந்திருப்பார். எனது இரண்டாவது மகன் திருமணத்திற்கு அழைக்க சென்றேன். வருகிறேன் என்று கூறினார், ஆனால் வருவாரா மாட்டாரா என்ற சந்தேகம் எனக்கு இருந்து கொண்டே இருந்தது. ஆனால் திருமண தினத்தில் வந்த அவர் அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்து விட்டார். எல்லோரையும் ஆசீர்வாதம் செய்து, எங்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்" என பகிர்ந்து கொண்டார்.


Click it and Unblock the Notifications











