Saroja Devi: ’மக்களுக்காகவே நான்’ கண்களை தானம் செய்த சரோஜா தேவி.. 2 குழந்தைகளுக்கு இன்று பொருத்தம்!
பெங்களூரு: தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி திரையுலகில் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து, 'கன்னடத்து பைங்கிளி', 'அபிநய சரஸ்வதி' என ரசிகர்களால் கொண்டாடப்பட்ட பழம்பெரும் நடிகை சரோஜா தேவி. இவர் வயது மூப்பு மற்றும் திடீர் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று அதாவது ஜூலை 14 அன்று பெங்களூருவில் காலமானார். அவருக்கு வயது 87. அவரது மறைவு திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், அவரது கடைசி ஆசையாக இருந்த கண் தானம் இன்று முழுவதுமாக நிறைவேற்றப்படவுள்ளது.
சரோஜா தேவி தனது உயிரிழப்புக்கு பிறகு தனது கண்கள் தானம் செய்யப்பட வேண்டும் என விருப்பம் தெரிவித்திருந்தார். அதன்படி, அவரது மறைவைத் தொடர்ந்து, பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையான நாராயணா நேத்ராலயா மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவக் குழுவினர் அவரது கண்களை தானமாக பெற்றனர். 87 வயதை கடந்திருந்தாலும், சரோஜா தேவியின் கண்கள் ஆரோக்கியமாக இருந்ததாகவும், அவை இரண்டு குழந்தைகளுக்கு பொருத்தப்பட உள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்தது. மேலும் இரண்டு கண்களும் பார்வை மாற்றுத் திறனாளியாக உள்ள இரண்டு குழந்தைகளுக்கு இன்று பொருத்தப்படவுள்ளது.

திரைப் பயணம்: தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப் படங்களில் நடித்த சரோஜா தேவி, 50 ஆண்டுகளுக்கும் மேல் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். அவரது நடிப்புத் திறமைக்காக பத்மஸ்ரீ, பத்மபூஷண், கலைமாமணி உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர்.
கண் தானம்: சரோஜா தேவியின் கண் தானம் குறித்து தெரிந்து கொண்ட பின்னர் இணையதள வாசிகள் அவரை புகழ்ந்து பதிவிட்டு வருகிறார்கள். "மண்ணுக்கும் தீயிக்கும் கண்களை இரையாக்குவதை விட, அடுத்தவர் வாழ்விற்கு புதிய பாதையாக இருக்க வேண்டும் என்று அவர் விரும்பியதால் இந்த முடிவை அவர் எடுத்துள்ளார்," என பதிவிட்டு வருகின்றனர். அதேபோல், மக்களால் நான் மக்களுக்காகவே நான் என்ற வாசகம் கூட சரோஜா தேவிக்கு அப்படியே பொருந்தும் எனவும் பதிவிட்டு வருகிறார்கள். இந்த செயல், கண் தானத்தின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. ஏற்கனவே கன்னட திரையுலகில் மறைந்த நடிகர்கள் ராஜ்குமார் மற்றும் அவரது மகன் புனித் ராஜ்குமார் ஆகியோரின் கண்கள் தானம் செய்யப்பட்டதைப் போலவே, சரோஜா தேவியின் இந்த முடிவும் பலருக்கும் கண் தானத்தின் மீது விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

இறுதிச் சடங்கு: அவரது இறுதிச் சடங்கு முழு அரசு மரியாதையுடன் சென்னபட்னாவில் உள்ள தஷ்வாரா கிராமத்தில், அவரது தாயார் ருத்ரம்மாவின் கல்லறைக்கு அருகில் நடைபெற உள்ளது. சரோஜா தேவியின் மறைவுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்களும், கமல்ஹாசன், ரஜினிகாந்த் போன்ற பல திரைப்பிரபலங்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர். பல தமிழ் பிரபலங்கள் சரோஜா தேவியின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த பெங்களூரு நோக்கி சென்று கொண்டு உள்ளனர்.


Click it and Unblock the Notifications











