Seetha: பீரோவில் வைத்திருந்த நகையை காணவில்லை.. போலீசில் புகார் அளித்த சீதா!
சென்னை: 80 மற்றும் 90கால கட்டத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்தவர் தான் நடிகை சீதா. தற்போது சினிமா மற்றும் சீரியலில் நடித்து வரும் இவர், விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் வீட்டில் வைத்திருந்த நகையை காணவில்லை என புகார் அளித்துள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாண்டியராஜ் இயக்கத்தில் உருவான ஆண்பாவம் திரைப்படத்தில் பாவாடை தாவணியில் அழகாக வந்து தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் தான் நடிகை சீதா. அந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதை அடுத்து, தொடர்ந்து தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், கமல், மோகன், விஜயகாந்த், கார்த்திக் என பலருடன் ஜோடி போட்டு நடித்துக் கொண்டிருக்கும் போது தான் பார்த்திபன் இயக்கிய புதியபாதை என்ற படத்தில் நடித்தார்

நடிகை சீதா: இந்த படத்தில் நடித்துக்கொண்டு இருந்த போது, இவங்களுக்கு இடையில் காதல் உருவானதை அடுத்து பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இவங்களுக்கு அபிநயா, கீர்த்தனா என்ற இரண்டு மகள்கள் பிறந்த நிலையில் ராக்கி என்ற ஒரு மகனை தத்து எடுத்து வளர்த்து வந்தனர். இந்த நேரத்தில் பார்த்திபனுக்கும் சீதாவிற்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
இரண்டாம் திருமணம்: திருமணத்திற்கு பின் சினிமாவில் தலை காட்டாமல் இருந்த நடிகை சீதா விவாகரத்திற்கு பிறகு, மீண்டும் சினிமாவில் நடிக்க வந்தார். அப்போது அவருக்கு சினிமா வாய்ப்பு கிடைக்காததால், சீரியலில் நடித்து வந்தார். அப்போது, தன்னுடன் இணைந்து நடித்த சீரியல் நடிகர் சதீஷ் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால், இதுகுறித்து தெலுங்கு ஊடகம் ஒன்றில் பேசிய சதீஷ், சீதாவும் நானும் நல்ல நண்பர்கள் என்று கூறியிருந்தார்.
நகை திருட்டு: இணையத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் சீதா, தன்னுடைய தோட்டத்தில் வளர்ந்த காய்கறிகள் குறித்தும், சமையல் செய்வது குறித்தும் அவ்வப்போது வீடியோ வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் நடிகை சீதா தற்போது விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் வீட்டில் நகை காணாமல் போய் உள்ளதாக புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் தன்னுடைய வீட்டில் வைக்கப்பட்டிருந்த அனைத்து நகைகளும் இருக்கும் போது, 2 1/2 சவரன் ஜிமிக்கியை மட்டும் காணவில்லை என்றும் புகாரில் கூறியுள்ளார். இதையடுத்து சீதா அளித்துள்ள புகாரின் அடிப்படையில், வீட்டில் வேலை செய்பவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











