Shakeela: அவமானப்படுத்தப்பட்ட ஷகிலா.. திருமண மேடையில் மணப்பெண் செய்த அந்த சம்பவம்.. பாவம்ப்பா!
சென்னை: நடிகை ஷகிலா தமிழ் சினிமா மட்டும் இல்லாமல் தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமானவர். இவர் நடித்த பெரும்பான்மையான கதாபாத்திரங்கள் படங்களில் கிளாமர் கதாபாத்திரங்கள் என்பதால் அவருக்கு பெண் ரசிகைகள் மிகவும் குறைவு. அவரது அக்கா மகன் திருமணத்தில் திருமண மேடையில் ஷகிலா அவமானப்படுத்தப்பட்ட சம்பவத்தை பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
ஷகிலா, தனது குடும்ப கஷ்டத்தால் சினிமாவுக்குள் வந்தவர். சினிமாவில் தனது பள்ளிப் பருவத்திலேயே இவர் வந்துவிட்டதால் இவருக்கோ அல்லது இவர் உடன் இருந்தவர்களுக்கோ சினிமா குறித்து பெரிய அளவில் போதிய அறிவு இல்லை என அவரே பல பேட்டிகளில் கூறியுள்ளார். இப்படி இருக்கும்போது, அவருக்கு தனது கதாபாத்திரத் தேர்வு குறித்தோ, கேமரா ஆங்கிள் குறித்தோ எதுவும் தெரியாததால், கிளாமர் நடிகையாக மாற்றப்பட்டார் என்றுதான் கூறவேண்டும்.

ஷகிலா: கிளாமர் நடிகை என ஏற்கனவே திரையுலகம் முத்திரை குத்தி விட்டதால், இவரால் மற்ற கதாபாத்திரங்களில் நடிக்க முடியவில்லை. அப்படியே அவரை கிளாமர் கதாபாத்திரம் இல்லாத வேறு கதாபாத்திரத்தில் நடிக்க அழைத்தாலும், ஏதேனும் ஒரு சில காட்சிகளோ, வசனங்களோ, கிளாமர் காட்சிகளாவோ அல்லது அடல்ட் வசனங்கள் கொண்டதாகவோ, இரட்டை அர்த்த வசனங்கள் கொண்டதாகவோ எடுத்துவிடுகிறார்கள். இதனாலே அவருக்கு பெண் ரசிகைகள் பெருமளவில் இல்லை. அவருக்கு பெண் ரசிகர்கள் வட்டம் பெருகிய காலகட்டம் என்றால் அது, ஷகிலா சின்னத்திரையில் கால் பதித்த பின்னர்தான்.

அவமானம்: சின்னத்திரையில் கால் பதித்த பின்னர், ஷகிலா தனது கடந்த கால அனுபவங்கள் குறித்து பகிர்ந்து கொண்ட பின்னர்தான் இவருக்கான ரசிகர்கள் பட்டியலில் பெண்களும் அதிகமானர்கள். இப்படியான நிலையில் இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனது அக்கா மகன் திருமணத்தில் தான் அவமானப்படுத்தப்பட்டது குறித்து தெரிவித்தார். அதாவது, " எனது அக்கா மகனின் திருமணத்திற்கு நான் சென்றிருந்தேன். மணப்பெண் நான் மேடைக்கு வந்தால் இருக்க மாட்டேன் என கூறியுள்ளார். இது எனக்குத் தெரியாது. நான் மேடைக்குப் போனபோது மணப்பெண் மேடையில் இருந்து கீழே இறங்கிவிட்டார். நான் மணப்பெண் பாத்ரூம் சென்றுள்ளார் என நினைத்துக் கொண்டேன். சரி கொஞ்ச நேரம் கீழே இருக்கலாம் என மேடையில் இருந்து கீழே சென்று அமர்ந்திருந்தேன். அதன் பின்னர் மணப்பெண் வந்தார்.

உதாசீனம்: இவ்வளவு நடக்கும்போது எனது மனதில் மட்டும் ஏதோ ஒன்று, தவறாக உள்ளது என ஓடிக்கொண்டு உள்ளது. நான் மணமேடைக்கு சென்றேன். எனது அக்கா மகன் எனது முகத்தைக் கூட சரியாக பார்க்காமல், நான் கொடுத்த கிஃப்ட்டை இடது கையில் வாங்கி, அப்படியே பின்னாடி கொடுத்துவிட்டார். நான் தான் அவனை உயர்கல்வி படிக்க வைத்தேன். எனது அக்கா மகனுக்கு காதல் திருமணம்தான். ஆனால் அவனது காதல் மனைவியிடம் என்னை அறிமுகம் கூட செய்து வைக்கவில்லை. எனக்கு அழுகை வந்துவிட்டது. நான் மணமேடையிலேயே அழுதுவிட்டேன். அழுது கொண்டே அங்கிருந்து வெளியேறினேன்" எனக் கூறியுள்ளார். ஷகிலா தனது சொந்த அக்கா மகன் திருமணத்தில் தான் உதாசீனப் படுத்தப்பட்டது குறித்து பகிர்ந்து கொண்டது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.



Click it and Unblock the Notifications











