Silk Smitha: எல்லாம் ஒரு அளவுக்குத்தான்.. மலையாளப்பட இயக்குநரிடம் கோபப்பட்ட சில்க் ஸ்மிதா!
கொச்சி: திரைத்துறையில் தொடக்க காலத்தில் மேக்கப் ஆர்டிஸ்டாக தான் தனது சினிமா வாழ்க்கையை தொடங்கினார் சில்க் ஸ்மிதா. இவரது இயற்பெயர் விஜயலட்சுமி. ஆந்திர மாநிலத்தில் இவர் பிறந்திருந்தாலும் இவரது சொந்த ஊர் தமிழ்நாட்டில் கரூர் என்று கூறப்படுகிறது. சில்க் ஸ்மிதா குறித்து தமிழ் சினிமா வட்டாரத்தில் மட்டும் இல்லாமல் தென்னிந்திய சினிமா வட்டாரத்தில் பல கதைகள் இன்றும் உலா வருகிறது. குறிப்பாக அவரது மரணம் தொடர்பாக உலா வரும் செய்திகளுக்கு இன்றளவும் விடையில்லை.
அதேபோல் சினிமாவில் நடிக்க வரவில்லை என்றால் என்ன ஆகியிருப்பீர்கள் என்ற கேள்விக்கு, " நான் சினிமாவில் நடிக்க வரவில்லை என்றால், நிச்சயம் துப்பாக்கி ஏந்திக்கொண்டு நக்ஸ்லைட்டுகளுடன் இணைந்து போராடச் சென்றிருப்பேன் எனக்கூறினார். சில்க் ஸ்மிதா தமிழ் சினிமாவில் இருந்த காலகட்டத்தில் அவரைப் போன்ற அரசியல் பார்வை கொண்ட நடிகைகள் அரிதினும் அரிது எனக் கூறலாம். அதேபோல் தனது வாழ்நாளில் நான் இதுவரை கண்ணியமான ஆண்மகனைக்கூடச் சந்தித்தில்லை என மிகவும் தைரியமாகச் சொன்னார் என்ற தகவலும் இன்றைக்கும் சமூக வலைதளங்களில் உலா வருகின்றது.

இந்நிலையில் மலையாள இயக்குநர் லால் ஜோஸ் நடிகை சில்க் ஸ்மிதா குறித்து மிகவும் சுவாரஸ்யமான பல தகவல்களைப் பகிர்ந்துகொண்டுள்ளார். அதில், " என் கேரியரில் நான் பார்த்த மிக தொழில்முறை நடிகை யார் என்று கேட்டால் அது சில்க் ஸ்மிதாதான். காலை 9 மணிக்கு ஷூட் என்று சொன்னால், மேக்கப், காஸ்ட்யூமுடன் செட்டில் இருப்பார். படப்பிடிப்புக்கு ஒருநாளும் தாமதமாக வந்ததில்லை. சில்க் ஸ்மிதா மிகவும் புத்திசாலி பெண். அவருக்கு எப்போதுமே அசோசியேட் டைரக்டர் தான் டயலாக் சொல்லிக்கொடுத்து அந்த காட்சியை எப்போது படமாக்க வேண்டும் என்பதை முடிவு செய்வார் என்பதை சில்க் ஸ்மிதா தெரிந்து வைத்திருந்ததால், படப்பிடப்புத் தளத்திற்கு வந்ததும், அசோசியேட் டைரக்டர் யார் என்றுதான் கேட்பார்.

கருப்பு: சில்க் ஸ்மிதா முன் சென்று நின்றேன். அவர் பெயர் என்ன என்று கேட்டார். அவருக்கு நான் யாரென்றே தெரியாதவன் என்பதெல்லாம் ஒரு பிரச்னையே இல்லை. நான் போய் நின்றதும் என்னிடம், 'இப்போது நீங்கள் என்னைப் பார்க்கின்றீர்கள் அல்லவா இது என் இயற்கையான நிறம் இல்லை. நான் மிகவும் கருப்பான நிறம். இது எல்லாம் தூள் மற்றும் பேட்கள். இந்த நிறத்தை அடைய மூன்று மணி நேரம் ஆகும். அதனால் ஷூட்டிங் எப்போது என்று சொல்ல வேண்டும். அதற்கு மூன்று மணி நேரத்திற்கு முன் மேக்கப் தொடங்க வேண்டும். அப்போதுதான் நான் படப்பிடிப்புத் தளத்தில் தயாராக இருக்கமுடியும் எனக் கூறினார்.
பான்கேக்: சில்க் ஸ்மிதா, எப்பொழுதும் தளர்வான சட்டையும், ஜாக்கெட்டும் அணிந்திருப்பார். அவரது இடுப்பு எப்போதும் தெரிந்தபடியே இருக்கும். இதுதான் அவருடைய காஸ்டூம். இடுப்பில் நன்றாக பவுடர் போடவேண்டும். இதுமட்டும் இல்லாமல், பான்கேக் பயன்படுத்த வேண்டும். மேலும், பயன்படுத்தப்படும் பான்கேக் வெப்பத்தில் அமர்ந்தால் உருகிவிடும். வியர்க்க கூடாது என்பதால் அதனையும் சரியாக பராமரிக்க வேண்டும். அப்போதெல்லாம் ஏசி. கேரவன் என எதுவும் இல்லாத காலம்.

கடுப்பு: ஓரிரு நாட்களில் நாங்கள் நண்பர்களாகிவிட்டோம். செட்டுக்கு வந்ததும் லால் என்றுதான் கூப்பிடுவாங்க. சில்க் என்னிடம் இயல்பாக பேசுகின்றார் என்பதாலே பலரும் என்னை கடுப்புடன் பார்த்தனர். செட்டுக்கு வந்ததும் அவர் என்னைத்தான் கூப்பிடுவார். நான் போய் டையலாக் சொல்லிக் கொடுப்பேன். அவர் முகத்தில் ஃபேன் வைத்தபடி அமர்ந்திருப்பார். மற்ற அனைவரும் வந்து சில்க்கிற்கு வணக்கம் சொல்லிவிட்டுப் போவார்கள்.
கோபம்: இப்படியான நடிகை ஒருநாள் என்னிடம் கோபத்தை வெளிப்படுத்தினார். அந்த அனுபவமும் எனக்கு இருக்கு. சில்க் ஸ்மிதாவின் அனைத்து ஷெடூல்களையும் துல்லியமாக திட்டமிட்டேன். ஆனால் ஒரு நாள் படப்பிடிப்பு நேர மாற்றம் குறித்து ஸ்மிதாவிடம் தெரிவிக்க முடியவில்லை. இதனால் சில்க் ஸ்மிதா கோபத்தை வெளிக்காட்டினார்" என லால் ஜோஸ் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











