ஆபாச இணையதளங்களில் பாலியல் வன்கொடுமை காட்சி.. தற்கொலைக்கு முயன்ற பிரபல நடிகை.. ரசிகர்கள் அதிர்ச்சி
சென்னை: சினிமாவில் நடித்த பாலியல் வன்கொடுமை காட்சி, ஆபாச இணையதளங்களில் வெளியானதால் நடிகை தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
மலையாளத்தில், சில படங்களில் நடித்துள்ளார் சோனா ஆபிரகாம். கொச்சியை சேர்ந்தவர் இவர்.
சில வருடங்களுக்கு முன், இவர் நடித்த பாலியல் வன்கொடுமை காட்சி, ஆபாச இணையதளங்களில் வெளியாகி இருக்கிறது.

காதல் சந்தியா
இதனால் மனம் உடைந்த நடிகை சோனா ஆபிரகாம், தற்கொலைக்கு முயன்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றி, அவர் தனது பேஸ்புக்கில் கூறியிருப்பதாவது: என் 14 வயதில் ஃபார் சேல் என்ற மலையாள படத்தில் நடித்தேன். அதில் காதல் சந்தியா, ஐஸ்வர்யா உள்பட பலர் நடித்திருந்தனர்.

வேதனை தற்கொலை
அதன் கதைப் படி, படத்தில் எனது அக்காவாக சந்தியா நடித்திருந்தார். தங்கை பாலியல் வன்கொடுமை செய்யப்படுவதை பார்க்கும் அவர், வேதனையில் தற்கொலை செய்துகொள்வது போல காட்சி அமைக்கப்பட்டு இருக்கும். இந்தப் படம் மூலம் இயக்குநர், இந்த சமூகத்துக்கு என்ன கருத்தைச் சொல்ல வந்தார் என்பது எனக்குத் தெரியவில்லை.

எதிரான கருத்துகள்
அந்த படத்தில், பெண்களுக்கு எதிரான கருத்துக்களே அதிகம் இடம்பெற்றிருந்தன. அறியாத வயதில், நான் அந்தப் படத்தில் புரிதல் இல்லாமல் நடித்தேன். அந்தப் பாலியல் வன்கொடுமை காட்சியை, 150- க்கும் மேற்பட்டோரின் முன்னிலையில் படமாக்க முயன்றனர். ஆனால், நடிக்க முடியாது என்று மறுத்தேன்.

ஆபாச தளங்கள்
இதனால், கொச்சியில் இருக்கும் இயக்குநர் சதீஷ் அனந்தபுரி அலுவலகத்தில் அந்தக் காட்சி படமாக்கப்பட்டது. படப்பிடிப்பு முடிந்த பின், நான் படிக்க பள்ளிக்குச் சென்றுவிட்டேன். இந்த நிலையில், நான் பிளஸ் 2 படித்தபோது அந்தப் பாலியல் வன்கொடுமைக் காட்சிகள் பல ஆபாச இணைய தளங்களில் வெளியானது, தெரியவந்தது.

கடுமையாகத் திட்டினர்
இது எனக்கும், என் குடும்பத்துக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உறவினர்கள், நண்பர்கள் என்னை சந்தேகத்துடன் பார்க்கத் தொடங்கினார்கள். பலர் எனக்கு ஃபோன் செய்து கடுமையாகத் திட்டினர். இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளானேன். இதுகுறித்து கேரள முதல்வர், டிஜிபி, சைபர் கிரைம் போலீசார் உட்பட பலரிடம் புகார் கூறியும் எந்தவித பலனும் இல்லை.

நிஜ வாழ்க்கை
இதனால் மனம் உடைந்த நான், தற்கொலை செய்துகொள்ள முயன்றேன். அந்தப் படத்தின் கதைப்படி, காதல் சந்தியாதான் தற்கொலை செய்து கொள்வார். ஆனால் நிஜ வாழ்க்கையில் நான்தான் தற்கொலை முடிவுக்கு சென்றேன். இவ்வாறு சோனா ஆபிரகாம் கூறியுள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.


Click it and Unblock the Notifications











