அக்னி நட்சத்திரத்தில் ஐக்கியமான ஸ்ரீ பல்லவி
சென்னை: நடிகர் விதார்த் மற்றும் உதயா இணைந்து நடிக்கும் அக்னி நட்சத்திரம் திரைப்படத்தில் நடிக்க புதிதாக நடிகை ஸ்ரீபல்லவி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே நடிகர் சாருஹாசன் நடித்த தாதா 87 என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். அக்னி நட்சத்திரம் திரைப்படத்தில் ஏற்கனவே ஸ்மிருதி வெங்கட் நடித்து வரும் நிலையில் தற்போது ஸ்ரீபல்லவியும் இணைந்துள்ளார்.
1988ஆம் ஆண்டில் மணிரத்னத்தின் இயக்கத்தில் இளையதிலகம் பிரபு, நவரச நாயகன் கார்த்திக் நடிப்பில் உருவான திரைப்படம் அக்னி நட்சத்திரம். இருவரும் எதிரெதிர் துருவங்களாக நடித்த அத்திரைப்படம் வெற்றி விழா கண்டது. அத்திரைப்படத்தில் இடம் பெற்ற ஜனகராஜின் காமெடியும் அப்படத்தின் வெற்றிக்கு துணை நின்றது என்று சொல்லலாம்.

தற்போது அதே பாணியில், அதை கதையமைப்பில், அதை தலைப்பில் மீண்டும் ஒரு படத்தை தயாரிக்கிறார்கள். சுருக்கமாக சொன்னால், பழைய கள்ளை பழைய மொந்தையை நன்றாக கழுவி மீண்டும் ஊற்றி கொடுக்க முயற்சிக்கின்றனர் என்று சொல்லலாம்.
புதிய அக்னி நட்சத்திரம் படத்தில், நடிகர் விதார்த் மற்றும் உதயா இருவரும் நடிக்கின்றனர். நடிகர் உதயா கடைசியாக 2018ஆம் ஆண்டு உத்தரவு மகாராஜா என்ற திரைப்படத்தை தயாரித்து நடித்திருந்தார்.
அக்னி நட்சத்திரம் திரைப்படத்தை ஜெய்சன் ஸ்டுடியோஸ் மற்றும் கரிஸ்மாடிக் கிரியேஷன்ஸ் தயாரித்துள்ளனர். இந்த திரைப்படத்தை அறிமுக இயக்குனர் ஷரன் இயக்கியுள்ளார். சமீபத்தில் வெளியாகிய தடம் திரைப்படத்தில் நடித்த ஸ்மிருதி வெங்கட் இந்த திரைப்படத்தில் ஒரு முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இந்நிலையில் நடிகை ஸ்ரீ பல்லவியை அக்னி நட்சத்திரம் படக்குழுவினர் இரண்டாவது கதாநாயகியாக தேர்வு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த அதிகாரபூர்வ தகவலை படக்குழுவினர் வெளியிடக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர் ஏற்கனவே நடிகர் சாருஹாசன் நடித்த தாதா 87 என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.
நடிகர் விதார்த் இயக்குனர் ராதா மோகன் இயக்கிய காற்றின் மோழி திரைப்படத்திற்கு பிறகு, இயக்குனர் ராஜன் மாதவ்வின் சித்திரம் பேசுதடி 2 திரைப்படத்தில் நடித்தார். காற்றின் மொழி திரைப்படம் இந்தியில் ஹிட்டான தும்ஹரி சுலுவின் நேரடி தமிழ் ரீமேக் ஆகும்.


Click it and Unblock the Notifications











