திருமணம் செய்வதாக ஏமாற்றி பாலியல் வன்கொடுமை.. ஒளிப்பதிவாளர் மீது பிரபல நடிகை மீண்டும் புகார்!
ஐதராபாத்: திருமணம் செய்வதாக ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்பட்ட விவகாரத்தில் பிரபல நடிகை மீண்டும் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
நாக் அஸ்வின் இயக்கத்தில் நானி, விஜய் தேவரகொண்டா நடித்த யவடே சுப்ரமணியம் என்ற படத்தின் மூலம் பிரபலமடைந்தவர், நடிகை ஸ்ரீசுதா.
விஜய் தேவரகொண்டா நடித்து தெலுங்கில் சூப்பர் ஹிட்டான 'அர்ஜூன் ரெட்டி' படத்தில், தோழியாக நடித்திருந்தார்.

ஷ்யாம் கே.நாயுடு
மேலும் சில தெலுங்கு படங்களில் நடித்துள்ள இவர், ஷியாம் கே.நாயுடு என்ற பிரபல ஒளிப்பதிவாளரை காதலித்து வந்தார். ஷ்யாம் கே.நாயுடு, மகேஷ்பாபு நடித்த போக்கிரி, பிசினஸ்மேன், ஜூனியர் என்.டி.ஆர் நடித்த டெம்பர், வெங்கடேஷ் நடித்த பாடிகார்ட், ராம்சரணின் சிறுத்தா, அல்லு அர்ஜுன் நடித்த ஜுலாயி உட்பட பல சூப்பர் ஹிட் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர்.

நெருங்கிப் பழகினார்
பிரபல தெலுங்கு ஒளிப்பதிவாளரான சோட்டே கே.நாயுடுவின் சகோதரர் இவர். யாருடா மகேஷ், மாநகரம், மாயவன் படங்களில் ஹீரோவாக நடித்த சந்தீப் கிஷனின் உறவினர். நடிகை ஸ்ரீசுதாவிடம், ஷ்யாம் கே.நாயுடு திருமணம் செய்வதாக வாக்குறுதி கொடுத்திருந்தாராம். இதையடுத்து அவரிடம் நெருங்கிப் பழகி வந்துள்ளார்.

திருமணம் செய்வதாக
இருவரும் ஒன்றாக வசித்துள்ளனர். ஆனால், அவரை திருமணம் செய்ய ஷ்யாம் மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இனால் ஸ்ரீசுதா, ஐதராபாத் எஸ்.ஆர்.நகர் போலீஸ் ஸ்டேஷனில், அவர் மீது புகார் அளித்தார். தன்னைத் திருமணம் செய்வதாக ஏமாற்றி, மோசடி செய்துவிட்டதாக அதில் கூறியிருந்தார்.

மோசடி கையெழுத்து
இதையடுத்து விசாரணை நடத்திய போலீசார், ஷ்யாம் கே நாயுடுவை கைது செய்தனர். பின்னர் இந்த விவகாரத்தில் சமாதானமாகச் சென்றுவிடுவதாக, நீதிமன்றத்தில் கூறியதை அடுத்து, அவருக்கு ஜாமின் வழங்கப்பட்டது. ஆனால், அதற்காக வழங்கப்பட்ட மனுவில், நடிகை ஸ்ரீசுதாவின் கையெழுத்தை மோசடியாகப் போட்டுள்ளதாகக் கூறப்பட்டு சர்ச்சையானது.

மீண்டும் புகார்
இந்நிலையில், நடிகை ஸ்ரீசுதா இப்போது போலீஸ் ஸ்டேஷனில் மீண்டும் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அதில், எனக்கும் ஏதும் ஆனது என்றால், அதற்கு ஒளிப்பதிவாளர் ஷ்யாம் கே. நாயுடு, அவர் நண்பர்கள் மற்றும் உறவினர்கள்தான் காரணம் என்று அந்தப் புகாரில் கூறியுள்ளார்.

தாக்கி மிரட்டினர்
மேலும், கடந்த ஆகஸ்ட் மாதம் ஷ்யாம் கே நாயுடு வீட்டுக்கு அழைத்துச் சென்ற அவர் நண்பர்களும் உறவினர்களும், தன்னை தாக்கியதாகவும் வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்று மிரட்டியதாகவும் வெளியில் சொன்னால் உயிரோடு இருக்க முடியாது என்று கடுமையாக மிரட்டியதாகத் தெரிவித்துள்ளார். போலீசார் இதுபற்றி வழக்குப் பதிவு செய்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











