Suhasini: பெண் என்பதால் கட்டுப்பாடு கிடையாது.. சுஹாசினிக்கு கமல் சொன்ன அட்வைஸ்!
சென்னை: நடிகை சுஹாசினி மணிரத்னம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிப் படங்களிில் அதிகமான படங்களில் நடித்தவர்.
தமிழில் சிறப்பான பல படங்களில் நடித்துள்ள சுஹாசினி சிந்து பைரவி படத்திற்காக தேசிய விருதை பெற்றுள்ளார்.
கடந்த 1988ம் ஆண்டில் இயக்குநர் மணிரத்னத்தை திருமணம் செய்துக் கொண்டு செட்டில் ஆனார் சுஹாசினி.

சுஹாசினி சினிமாவில் இணைய காரணமான கமல்ஹாசன்: தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிப் படங்களில் நடித்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர் சுஹாசினி. தமிழில் நெஞ்சத்தை கிள்ளாதே என்ற தனது அறிமுக படத்திலேயே இவர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரின் கவனத்தையும் கவர்ந்திருந்தார். தொலைக்காட்சி தொகுப்பாளராகவும் செயல்பட்ட சுஹாசினி, இந்திரா என்ற படத்தையும் இயக்கியுள்ளார். தயாரிப்பாளராகவும் வசனகர்த்தாவாகவும் இவர் செயல்பட்டுள்ளார்.
கடந்த 1988ம் ஆண்டில் இயக்குநர் மணிரத்னத்தை திருமணம் செய்துக் கொண்டு செட்டில் ஆன சுஹாசினிக்கு நந்தன் என்ற மகன் உண்டு. மனதில் உறுதி வேண்டும், சிந்து பைரவி, தர்மத்தின் தலைவன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து கவனம் பெற்ற சுஹாசினி, சிந்து பைரவி படத்தில் நடித்ததற்காக கடந்த 1986ம் ஆண்டில் தேசிய விருதை பெற்றுள்ளார். இந்தப் படம் சுஹாசினிக்கு கேரியர் பெஸ்ட்டாக அமைந்தது.
சமூக வலைதளங்களில் மற்றும் பொதுவெளிகளில் மிகவும் பிசியாக காணப்படுகிறார் சுஹாசினி மணிரத்னம். சில தினங்களுக்கு முன்பு தன்னுடைய திருமண புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்திருந்தார். இந்நிலையில் அவர் தனது பேட்டியொன்றில் தான் சினிமாவிற்கு வந்தது குறித்து பல்வேறு விஷயங்களை பகிர்ந்துக் கொண்டார். தான் சினிமாவிற்கு வருவதற்கு பிரபல நடிகரும் தன்னுடைய சித்தப்பாவுமான நடிகர் கமல்ஹாசன்தான் காரணம் என்று சுஹாசினி தெரிவித்துள்ளார்.
பெண் என்பதினால் உனக்கு எந்தவிதமான கட்டுப்பாடுகளும் கிடையாது என்று எப்போதும் கூறுவார் என்றும் நீ வானத்தை எட்ட வேண்டும என்று தன்னை ஊக்குவிப்பார் என்றும் சுஹாசினி கமல் குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். மேலும் சினிமாவை கேரியராக தேர்வு செய்ய தனக்கு ஊக்கம் அளித்ததும் கமல்தான் என்றும் குறிப்பிட்டுள்ளார். தான் சினிமா இன்ஸ்டிடியூட்டில் இணைந்து படிப்பதற்கும் கமல் காரணமாக அமைந்ததாகவும் சுஹாசினி தெரிவித்துள்ளார்.
தன்னுடைய ஃபீஸை கட்டியதுடன் நிறுத்திக் கொள்ளாமல் தினந்தோறும் மதியம் தான் ஐஸ்கிரீம் சாப்பிடவும் கமல்தான் பணம் தந்தார் என்றும் சுஹாசினி நகைச்சுவையுடன் பகிர்ந்துள்ளார். அந்த காலத்தில் மற்ற பெற்றோரை போலவே டாக்டர், இன்ஜினியர் போன்ற துறைகளை தான் தேர்வு செய்வதையே தன்னுடைய பெற்றோர் விரும்பியதாகவும் ஆனால் அவர்களை கன்வின்ஸ் செய்து தான் சினிமாவில் காலூன்ற காரணமாக அமைந்ததும் கமல்தான் என்றும் மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார் சுஹாசினி.
சுஹாசினியின் கணவர் மணிரத்னம் மற்றும் கமல்ஹாசனின் உறவு மிகவும் சிறப்பானது. இவர்கள் இருவரும் இணைந்து கொடுத்த நாயகன் படம் மிகப்பெரிய எல்லையை தொட்டது. தற்போது இவர்களின் கூட்டணியில் KH234 படம் உருவாகவுள்ளது. இதன் அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ள நிலையில், இந்தப் படம் தற்போதே மிகுந்த எதிர்பார்ப்பிற்கு உள்ளாகியுள்ளது. முன்னதாக மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தின் இரு பாகங்களும் ரசிகர்களை சிறப்பாக கவர்ந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











