Swetha Menon: 31 ஆண்டு கால வரலாற்றை மாற்றிய ஸ்வேதா மேனன்.. குவியும் வாழ்த்து!
கேரளா: மலையாளத் திரையுலகின் பிரபல நடிகையான ஸ்வேதா மேனன், மலையாளத் திரைப்பட நடிகர் சங்கமான 'அம்மா' அமைப்பின் முதல் பெண் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு ஹேமா கமிட்டி அறிக்கை வெளியாகி கேரள சினிமாவில் பெரும் புயலை கிளம்பியதால் நடிகர் மோகன்லால் பதவியில் இருந்து விலகினார். இதைத்தொடர்ந்து நடந்த தேர்தலில், தேவன் என்பவரை எதிர்த்து ஸ்வேதா மேனன் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.
தமிழ் சினிமாவில் தென்னிந்திய நடிகர் சங்கம் போன்று, மலையாளத்திலும் அம்மா (AMMA) என்ற பெயரில் நடிகர் சங்கம் இயங்கி வருகிறது. அண்மையில் அம்மா சங்கத்தில் இருக்கும் நடிகர்கள், பொறுப்பாளர்கள் மீது பாலியல் புகார் எழுந்ததை அடுத்து அம்மா நிர்வாக குழு ராஜினாமா செய்தது. இதைத்தொடர்ந்து, தலைவர், இரண்டு துணைத் தலைவர்கள், பொதுச் செயலாளர், இணைச் செயலாளர், பொருளாளர் மற்றும் 11 நிர்வாக உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதில் ஸ்வேதா மேனன் வெற்றி வெற்று சங்கத்திற்கு முதல் பெண் தலைவராகி உள்ளார். துணைத் தலைவராக லட்சுமி பிரியா, இணைச் செயலாளராக குக்கு பரமேஸ்வரன், பொதுச் செயலாளராக அன்சிபா ஹசன் ஆகியோரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். பொருளாளர் பதவியை உன்னி சிவபால் வென்றார்.

வரலாற்றை மாற்றிய ஸ்வேதா மேனன்: வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெற்ற இந்தத் தேர்தலில் 506 உறுப்பினர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். ஆனால், 298 பேர் மட்டுமே இதில் வாக்களித்தனர். மம்மூட்டி, ஃபஹத் ஃபாசில், நிவின் பாலி, பிருத்விராஜ் சுகுமாரன், இந்திரஜித் சுகுமாரன், ஆசிஃப் அலி உள்ளிட்ட பல முன்னனி நடிகர்கள் இந்தத் தேர்தலில் வாக்களிக்கவில்லை. முந்தைய தேர்தலில் 70% வாக்குப்பதிவான நிலையில், நேற்று நடந்த தேர்தலில் வெறும் 58% வாக்குகள் மட்டுமே பதிவானது. மாலை 4 மணி அளவில் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. 31 ஆண்டு கால மலையாள நடிகர் சங்க வரலாற்றில் முதன்முறையாக பெண் ஒருவர் தலைவியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











