ரூபாய் 3500 கோடி ஊழல்.. ரம்பாவின் சகோதரர் தொடர்ந்த வழக்கில் சிக்குகிறாரா தமன்னா? 300 கிலோ தங்கமா?
ஹைதராபாத்: தமிழ்நாட்டில் டாஸ்மாக்கில் ரூபாய் 1000 கோடிகள் ஊழல் நடைபெற்றதாக கூறி, அமலாக்கத்துறை அடுத்தடுத்து நடவடிக்கை எடுத்து வருகிறது. ஏற்கனவே முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு, விசாரணை வளையத்திலேயே சுமார் ஒரு ஆண்டுக்கு மேலாக சிறையில் இருந்தார். அதேபோல், சில மாதங்களுக்கு முன்னர், தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வீடு மற்றும் அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனைகள் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அமலாக்கத்துறை விசாரித்து வரும் ஊழல் வழக்கில் அவருக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் நீதிமன்றம் ஆகாஷ் பாஸ்கரனின் வீடு மற்றும் இல்லத்தை விடுவிக்குமாறு உத்தரவிட்டது.
இப்படி இருக்கும்போது தற்போது ஆந்திராவில் அதேபோல் மதுபான விற்பனையில் ஊழல் நடைபெற்றதாக விசாரணை நடைபெற்று வருகிறது. அங்கு ரூபாய் 3500 கோடிகள் ஊழல் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த ஊழல், கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரை முன்னாள் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் ஆட்சியின் போதுதான் நடைபெற்றது எனக் கூறப்படுகிறது.

இந்த வழக்கு தொடர்பாக வழக்கு தொடுத்துள்ளவர், நடிகை ரம்பாவின் சகோதரர் வெங்கடேஸ்வர ஸ்ரீனிவாசராவ் தான். இவரோடு, ஐ.ஏ.எஸ் அதிகாரி முகேஷ் குமார் உள்ளிட்ட பலரும் இந்த குழுவில் உள்ளார்கள் எனவும் கூறப்படுகிறது. இந்த வழக்கு விசாரணை மிகவும் மும்மரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய விஷயம் என்னவென்றால், நடிகை தமன்னா இந்த வழக்கின் விசாரணை வளையத்தில் இருக்கிறார் எனக் கூறப்படுகிறது.
சந்தேகம்: அதாவது, இந்த வழக்கில் மிகவும் முக்கியமாக சம்மந்தப்பட்டவர்கள் என்று கூறப்படுவது, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ, பாஸ்கர் ரெட்டி மற்றும் அவரது உதவியாளர் வெங்கடேஷ் நாயுடு ஆகியோர் தான். ஆனாலும் இந்த வழக்கில், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் என மொத்தம் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமன்னா: இதில் முன்னாள் எம்.எல்.ஏ, பாஸ்கர் ரெட்டி மற்றும் நடிகை தமன்னா பிரைவேட் ஜெட்டில் ஒன்றாக பயணம் செய்துள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. மேலும், தமன்னாவின் ஒயிட் அன்ட் கோல்ட் நிறுவனம் 300 கிலோ தங்கம் வாங்கியுள்ளது. இந்த தங்கம் வாங்கியதில் இந்த பணம் பயன்படுத்தப்பட்டிருக்குமா எனவும் விசாரணை நடைபெற்று வருகிறது. இதனால் விசாரணைக்கு ஆஜராகும்படி தமன்னாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இது தொடர்பாக அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
கவனம்: ஆனால் முன்னாள் எம்.எல்.ஏ, பாஸ்கர் ரெட்டி உடன் அவர் தனி விமானத்தில் ஏன் பயணித்தார் என்ற கேள்வி பலரையும் ஆட்கொண்டுள்ளது. இது மட்டும் இல்லாமல், இந்த வழக்கை தொடர்ந்தவர்களில் ஒருவர் நடிகை ரம்பாவின் சகோதரர் என்பதால் இந்த வழக்கு எவ்வாறு நகர்கிறது என்பது குறித்து தெலுங்கு திரையுலகம் மட்டும் இல்லாமல் தமிழ் திரையுலகமும் நன்கு உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள். தமன்னா தற்போது தமிழ், தெலுங்கு, இந்தி என பான் இந்தியா படங்கள் மற்றும் வெப் சீரீஸ்களில் நடித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











