இந்தியன் 2 படத்தில் இருந்து காஜல் அகர்வால் நீக்கம்? கமலுக்கு ஜோடியாகும் பிரபல நடிகை!
சென்னை: இந்தியன் 2 படத்தில் நடிகர் கமல் ஹாசனுக்கு ஜோடியாக நடிக்க வைக்க பிரபல நடிகையிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் படம் இந்தியன் 2. 1996ஆம் ஆண்டு வெளியான இந்தியன் படத்தின் இரண்டாம் பாகமாக இந்தப் படம் உருவாகி வருகிறது.
இந்தப் படத்தை லைகா புரடெக்ஷன் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையை அடுத்த ஈவிபி பிலிம் சிட்டியில் நடைபெற்று வந்தது.

படப்பிடிப்பு நிறுத்தம்
அப்போது எதிர்பாராத விதமாக க்ரேன் சரிந்து விழுந்து விபத்துக்கு உள்ளானது. இதில் உதவி இயக்குநர் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அதன் பிறகு லாக்டவுன் அமல் படுத்தப்பட்டதால் படப்பிடிப்பு தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டது.

லைகா எதிர்ப்பு
இதனால் இயக்குநர் ஷங்கர் தனது அடுத்த படங்களில் கமிட்டானார். தெலுங்கில் ராம் சரணை வைத்தும், இந்தியில் அந்நியன் படத்தை ரீமேக் செய்யும் பணியிலும் இறங்கினார் இயக்குநர் ஷங்கர். ஆனால் தங்களின் படத்தை கிடப்பில் போட்டு விட்டு இயக்குநர் ஷங்கர் புதிய பட பணிகளை தொடங்க எதிர்ப்பு தெரிவித்த லைகா நிறுவனம் இதுதொடர்பாக வழக்கு தொடர்ந்தது.

விவேக் மரணம்
இந்த வழக்கில் இருதரப்பும் பேசி பிரச்சனையை தீர்த்துக்கொள்ளுமாறு நீதிமன்றம் கூறியதை தொடர்ந்து பல கட்ட பேச்சு வார்த்தைகளுக்கு பிறகு சமரசம் ஏற்பட்டு மீண்டும் படப்பிடிப்பு தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் அதற்குள் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்த நடிகர் விவேக் திடீர் மாரடைப்பால் மரணமடைந்தார்.

காஜல் அகர்வால் கர்ப்பம்
அவரை வைத்து எடுக்கப்பட்ட காட்சிகளை மீண்டும் ரீ ஷூட் செய்ய வேண்டும் என்றார் இயக்குநர் ஷங்கர். இதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்தியன் 2 படத்தில் கதாநாயகியாக நடிக்கும் காஜல் அகர்வாலுக்கு திருமணம் முடிந்து தற்போது கர்ப்பமாக இருப்பதாக கூறப்படுகிறது.

கமலுக்கு ஜோடியாக
இதனால் காஜல் அகர்வால் இந்தியன் 2 படத்தில் இருந்து வெளியேறிவிட்டதாக கூறப்படுகிறது. எனவே அவருக்கு பதில் வேறு நடிகையை நடிக்க வைக்க படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். இதனை தொடர்ந்து படத்தில் கமலுக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது.

இந்தியன் 2வில் தமன்னா
இந்நிலையில் தற்போது காஜல் அகர்வாலுக்கு பதில் இந்தியன் 2 படத்தில் கமல்ஹாசன் ஜோடியாக நடிக்க தமன்னாவிடம் படக்குழு பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. நடிகை தமன்னாவும் ஸ்ருதிஹாசனும் நெருங்கிய தோழிகளாக உள்ளனர். இதனால் இந்தியன் 2 படத்தில் நடிக்க நடிகை தமன்னா ஓகே சொல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











