இனி மலிவானவர் இல்லை.. வருமான வரித்துறை ரெய்டு குறித்து நக்கலடித்த நடிகை டாப்ஸி!
மும்பை: தனது வீட்டில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனை குறித்து நடிகை டாப்ஸி நக்கலடித்து டிவிட்டியுள்ளார்.
பிரபல பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப், நடிகை டாப்ஸி பன்னு, ரிலையன்ஸ் குழுமத் தலைமை செயல் அதிகாரி சுபாசிஷ் உள்ளிட்டோரின் வீடு, அலுவலகங்கள் உட்பட பல்வேறு இடங்களில் வருமான வரித் துறையினா் கடந்த புதன்கிழமை சோதனை நடத்தினா்.
கடந்த மூன்று நாட்களாக நடத்தப்பட்ட இந்த சோதனையில் ரூ. 650 கோடிக்கும் மேல் நிதி முறைகேடு நடைபெற்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

விசாரணை
மேலும் இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றும் ரூ.20 கோடி அளவுக்கு செலவு செய்ததற்கான போலியான கணக்கு காட்டப்பட்டிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்றும் வருமான வரித்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

நக்கலடிக்கும் டாப்ஸி
ஆனால் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக கருத்துக்களை பதிவிட்டதாலேயே அனுராக் காஷ்யப் மற்றும் டாப்ஸியின் வீடுகளில் ரெய்டு நடத்தப்பட்டதாக ஒரு பக்கம் விமர்சனமும் எழுந்துள்ளது. இந்நிலையில் தனது வீடு மற்றும் அலுவலகங்களில் நடத்தப்பட்ட ரெய்டு குறித்து நடிகை டாப்ஸி நக்கலடித்து டிவிட்டியுள்ளார்.

டாப்ஸி டிவிட்
இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், டாப்ஸியின் இடத்தில் நடந்த சோதனையில் ரூ. 5 கோடி மதிப்பிலான பண ரசீது ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது. தற்போது இதுகுறித்து டாப்ஸி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.

சாவியை தேடினார்கள்
அதாவது, "3 நாட்கள், 3 விஷயங்களைத் தேடி தீவிரமான சோதனை நடந்தது. பாரிஸ் நகரில் எனக்குச் சொந்தமாக ஒரு பங்களா இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அதன் சாவியைத் தேடினார்கள். ஏனென்றால் கோடை நாட்கள் வரப்போகிறது என கேலியாக பதிவிட்டுள்ளார்.

நான் மறுத்துவிட்டேன்
மற்றொரு டிவிட்டில் என் பெயரில் இருப்பதாகச் சொல்லப்படும் 5 கோடி ரூபாய் மதிப்பிலான ரசீது. அதை எடுத்து ஃப்ரேம் பண்ணி வைக்க எதிர்காலத்தில் எனக்கு கொடுக்கபோகிறார்கள். ஏனென்றால் அந்தப் பணம் வேண்டாம் என்று நான் ஏற்கெனவே மறுத்துவிட்டேன் என்று கூறியுள்ளார் டாப்ஸி.

இனி மலிவானவர் இல்லை
தனது மற்றொரு பதிவில் நமது மத்திய நிதியமைச்சர் சொன்னதுபோல, 2013ஆம் ஆண்டு நடந்த வருமான வரித்துறை சோதனையைப் பற்றிய என் நினைவுகளை தேடினார்கள். பி.கு: இனி நான் மலிவானவர் இல்லை" என நக்கலடித்துள்ளார் டாப்ஸி.


Click it and Unblock the Notifications











