Leo Update - லியோ படம் பற்றி ஏதாவது சொல்லுங்களேன்?.. த்ரிஷா அளித்த செம பதில்
சென்னை: Leo Update (லியோ அப்டேட்) லியோ படம் குறித்து த்ரிஷா பேசியிருக்கும் விஷயம் இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்திருக்கிறார் விஜய். அவரது நடிப்பில் கடைசியாக வெளியான பீஸ்ட், வாரிசு ஆகிய இரண்டு படங்களுமே விமர்சன ரீதியாக சொல்லிக்கொள்ளும்படி இல்லை. அதிலும் துணிவு படத்துக்கு போட்டியாக களமிறங்கி வாரிசு சூடு வாங்கிக்கொண்டது விஜய் ரசிகர்களால் ஜீரணிக்கவே முடியவில்லை. எனவே லியோ படத்தை ரொம்பவே எதிர்பார்த்திருக்கின்றனர்.

லியோ ரிலீஸ்: படமானது அக்டோபர் 19ஆம் தேதி ரிலீஸாகிறது. ஷூட்டிங் சமீபத்தில்தான் முடிவடைந்ததாக லோகேஷ் கனகராஜ் அறிவித்தார். படத்தில் சஞ்சய் தத் மெயின் வில்லனாக நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சஞ்சய் தத், அர்ஜுன், விஜய் ஆகியோர் ஒரே கேங்ஸ்டர் குடும்பத்தினர் என்றும் அவர்களுக்குள் நடக்கும் பிரச்னைகளும் பிறகு நடக்கும் சம்பவங்களும்தான் கதை என்றும் கூறப்படுகிறது.
அப்டேட்டுகள்: லியோ படம் ரிலீஸாக இன்னும் ஒரு மாதம் மட்டுமே இருக்கிறது. இதன் காரணமாக இத்தனை நாட்களாக பொத்தி பொத்தி வைக்கப்பட்டிருந்த அப்டேட்டுகள் அடுத்தடுத்து வரவிருக்கின்றன. அதனை சைமா விருது விழாவில் லோகேஷ் கனகராஜும் உறுதிப்படுத்தியிருந்தார். அதன்படி படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா செப்டம்பர் 30ஆம் தேதி நடக்கும் என்றும்; இரண்டாவது சிங்கிள் இன்னும் சில நாட்களில் வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய போஸ்டர்கள்: லியோ படத்தின் அப்டேட் சரவெடியாக போஸ்டர்கள் வெளியாக ஆரம்பித்திருக்கின்றன. அதன்படி நேற்று லியோ படத்தின் தெலுங்கு போஸ்டர் வெளியானது. அதில் அமைதியாக இருந்து போரை தவிர்க்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இன்று மாலை லியோ படத்தின் புதிய போஸ்டர் வெளியாகவிருக்கிறது. இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்திருக்கின்றனர்.
த்ரிஷா பதில்: இந்நிலையில் சைமா விருதுகள் வழங்கும் விழாவில் கலந்துகொண்ட த்ரிஷாவிடம் லியோ அப்டேட் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு முதலில் த்ரிஷா, 'லோகேஷ் இங்குதானே இருக்கிறார். அவரிடம் கேட்கலாமே' என சொல்ல அதற்கு தொகுப்பாளர்களோ அவரிடம் கேட்டால் எதையும் சொல்ல மாட்டேன்கிறார் எனவே நீங்கள் சொல்லுங்கள் என்றனர். அதற்கு ரிப்ளை செய்த த்ரிஷா, 'லியோ படம் குறித்து ஒன்று மட்டும் என்னால் நிச்சயம் சொல்ல முடியும். படத்தின் ப்ரோமோஷன் பயங்கரமாக இருக்கும். காத்திருங்கள் என்றார். இதனால் ரசிகர்களுக்கு லியோ படத்தின் ப்ரோமோஷன் மீது உச்சக்கட்ட எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.


Click it and Unblock the Notifications











