வசூலில் சாதனை படைக்கும் த்ரிஷாவின் பவர்: தள்ளிப்போன ஹன்சிகாவின் பவர்
த்ரிஷா முதல்முறையாக கன்னடத்தில் நடித்த பவர் திரைப்படம் வெளியாகி வசூலில் சாதனை படைத்து வருகிறது என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
அதே சமயம் தெலுங்கில் ஹன்சிகா நடித்துள்ள பவர் படத்தின் ரிலீஸ் தேதி ஒருவாரம் தள்ளிப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழில் அறிமுகமான த்ரிஷா தெலுங்கில் அதிகப் படங்களில் நடித்துள்ளார். இந்தியிலும் ஒரு படத்தில் நடித்துள்ளார். ஆனால் கன்னடம், மலையாளத்தில் இதுவரை நடித்ததில்லை.

கன்னடத்தில் அறிமுகம்
கன்னடத்தில் முதல்முறையாக பவர் என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். புனித் ராஜ்குமார் ஹீரோவாக நடித்த இந்தப் படம் சென்ற வாரம் வெளியானது.

சூப்பர் ஹிட்
226 திரையரங்குகளில் வெளியான இப்படம் முதல் மூன்று தினங்களில் மட்டும் 7 கோடிகளை வசூலித்துள்ளது. கன்னட சினிமா வரலாற்றில் இதுதான் அதிகபட்ச ஓபனிங்காம்.

வசூல் சாதனையாம்
பெங்களூருவில் மட்டும் இத்திரைப்படம் 50 திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. கன்னட சினிமா சரித்திரத்தில் அதிகம் வசூல் செய்த படம் என்ற பெருமை பவருக்கு கிடைக்கும் என்கிறார்கள்.

தெலுங்கு ரீமேக்
சில ஆண்டுகளுக்கு முன்னர் மகேஷ்பாபு நடித்து வெளியான தூகுடு படத்தின் ரீமேக் ஆகும். எனவேதான் பெல்லாரியில் நடைபெற்ற பவர் ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு மகேஷ்பாபு வந்திருந்தார். இப்போது படமும் வசூலில் வெற்றி என்ற செய்திகள் வெளியாகி வருகின்றன.

ரசிகர்களுக்கு நன்றி
இந்த வெற்றியால் மகிழ்ச்சியடைந்துள்ள த்ரிஷா, தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் ரசிகர்களுக்கு நன்றி கூறியுள்ளார். பவர் பட குழுவினருக்கும், கன்னட திரையுலகிற்கும், பத்திரிகையாளர்களுக்கும், ரசிகர்களுக்கும் நன்றி என்று பதிவிட்டுள்ளார் த்ரிஷா.

தள்ளிப்போன தெலுங்கு பவர்
இதனிடையே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 'லிங்கா' படத்தை தயாரிக்கும் ராக்லைன் வெங்கடேஷ் தயாரித்துள்ள தெலுங்கு திரைப்படம் 'பவர்'. இந்த படம் செப்டம்பர் 5ஆம் தேதி (நாளை)ரிலீஸாகும் என அதிகாரபூர்வமாக அறிவித்திருந்த நிலையில் திடீரென படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

சென்சார் லேட்
'பவர்' திரைப்படத்தை வரும் செப்டம்பர் 3ஆம் தேதிதான் சென்சார் அதிகாரிகள் பார்த்துள்ளனர். அதனால் படத்தின் ரிலீஸ் ஒருவாரம் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ள தயாரிப்பு தரப்பு, பவர் கண்டிப்பாக செப்டம்பர் 12ஆம் தேதி ரிலீஸாகும் என கூறியுள்ளது.

ஏ சான்றிதழ்
இதனிடையே தெலுங்கு பவர் படத்திற்கு ஏ சான்றிதழ் கிடைத்துள்ளதாக தயாரிப்பாளர் செய்தி வெளியிட்டுள்ளார்.

ரூ.30 கோடி பட்ஜெட்
ரவிதேஜா, ஹன்சிகா மோத்வானி, ரெஜினா ஆகியோர் நடித்திருக்கும் பவர் திரைப்படத்தை கே.எஸ்.ரவீந்த்ரா இயக்கியுள்ளார். எஸ்.தமன் இசையமைத்திருக்கும் இந்த படத்தின் பட்ஜெட் ரூ.30 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

ரசிகர்கள் ஏமாற்றம்
பவர் திரைப்படத்தின் ரிலீஸ் ஒருவாரம் தள்ளிப்போனதால் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளதாக ரவிதேஜா மற்றும் ஹன்சிகாவின் ரசிகர்கள் தங்கள் ஆதங்கத்தை இன்று சமூக வலைத்தளங்களில் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











