Urmila Matondkar Divorce: 10 வயது குறைவான மாப்பிள்ளை.. இந்தியன் பட நடிகை ஊர்மிளா திடீர் விவாகரத்து!
மும்பை: ரங்கீலா, இந்தியன் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான நடிகை ஊர்மிளா தன்னை விட 10 வயது குறைவான இஸ்லாமியரை கடந்த 2016ம் ஆண்டு திருமணம் செய்திருந்தார். சுமார் 8 ஆண்டு காலம் எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் சென்றுக் கொண்டிருந்த ஊர்மிளா மற்றும் மோஷின் அக்தர் மிர் திருமண வாழ்க்கையில் திடீரென தற்போது விரிசல் விழுந்துள்ளது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்த ஆண்டு ஹாலிவுட் முதல் கோலிவுட் வரை ஏகப்பட்ட பிரபலங்களின் விவாகரத்து செய்திகள் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாக்கி வருகின்றன. ஹாலிவுட்டில் பேட் மேன் நடிகரான பென் அஃப்லெக்கை அவரது மனைவியும் நடிகையுமான ஜெனிஃபர் லோபஸ் விவாகரத்து செய்து பிரிந்தார்.

கோலிவுட்டில் ஜி.வி. பிரகாஷ் - சைந்தவி பிரிவு மற்றும் சமீபத்தில், ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தியின் பிரிவு என தொடர்ந்து காதலித்து திருமணம் செய்துக் கொள்ளும் தம்பதிகள் மத்தியிலேயே காதல் இல்லாமல் போக என்ன தான் காரணம் என்கிற கேள்வியைத்தான் அதிகம் எழுப்பி வருகின்றன.
இந்தியன் ஊர்மிளாவை மறக்க முடியுமா?: 1977ம் ஆண்டு பிஆர் சோப்ரா தயாரிப்பில் வெளியான கர்ம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பாலிவுட்டில் அறிமுகமானவர் தான் ஊர்மிளா. மலையாளத்தில் வெளியான சாணக்கியன் படத்தில் லீடு ரோலில் ஹீரோயினாக அறிமுகமானார். 1996ம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், மனிஷா கொய்ராலா நடித்த இந்தியன் படத்தில் சப்னா கதாபாத்திரத்தில் “அக்கடான்னு நாங்க உடை போட்டா.. துக்கடான்னு நீங்க தடை போட்டா” பாடலுக்கு அசத்தல் ஆட்டம் போட்டிருப்பாரே அந்த ஊர்மிளாவை ரசிகர்கள் அவ்வளவு எளிதில் மறந்து விட மாட்டார்கள். ரங்கீலா திரைப்படம் பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் இவருக்கு மிகப்பெரிய புகழை பெற்றுத் தந்தது.
இஸ்லாமியருடன் திருமணம்: சினிமாவில் பீக்கில் இருந்து வந்த நிலையில், திருமணமே செய்துக் கொள்ளாமல் தவிர்த்து வந்த ஊர்மிளா கடந்த 2016ம் ஆண்டு பிப்ரவரி 4ம் தேதி இளம் பாலிவுட் நடிகரான மோஷின் அக்தர் மிர் என்பவரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். இந்து பெண்ணான ஊர்மிளா இஸ்லாமியரை திருமணம் செய்துக் கொண்டது அப்போது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
10 வயது குறைவு: அதை விட ஊர்மிளாவுக்கும் அவரது கணவர் மோஷினுக்கும் இடையே 10 வயது வித்தியாசம் என்பது தான் அதை விட ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஆனால், பல தடைகளையும் விமர்சனங்களையும் கடந்து காதல் பறவைகளாக ஊர்மிளா மற்றும் மோஷின் காதலித்து திருமணம் செய்துக் கொண்ட நிலையில், 8 ஆண்டுகள் சந்தோஷமான வாழ்க்கையை வாழ்ந்து வந்தனர்.
விவாகரத்து அறிவிப்பு: இந்நிலையில், நடிகை ஊர்மிளா தனது கணவரை பிரியப் போவதாக அறிவித்து நீதிமன்றத்தில் விவாகரத்து கோரியிருப்பதாக வெளியான தகவல்கள் தற்போது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஊர்மிளாவுக்கு தற்போது 50 வயதாகிறது. அமிர்தசரசில் உள்ள பொற்கோவிலில் முதலில் இருவரும் சென்று மாலை மாற்றிக் கொண்டும் அதன் பின்னர் தர்காவில் திருமணம் செய்துக் கொண்டும் வாழ்ந்து வந்த நிலையில், திடீரென விவாகரத்து அறிவிப்பு வெளியாகி இருப்பதற்கு பின்னணியில் என்ன காரணம் என்கிற கேள்விகள் எழுந்துள்ளன. ஊர்மிளாவுக்கு குழந்தைகள் ஏதும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











