காங்கிரஸில் இருந்து விலகியவர்.. உத்தவ் தாக்கரே முன்னிலையில் சிவசேனாவில் இணைந்தார் பிரபல நடிகை!
மும்பை: இந்தி நடிகை ஊர்மிளா மடோன்கர், சிவசேனா கட்சியில் இன்று இணைந்தார்.
தமிழ், மலையாளம், மராத்தி உட்பட பல்வேறு மொழிப் படங்களில் நடித்துள்ளார், இந்தி நடிகை ஊர்மிளா மடோன்கர்..
தமிழில், கமல்ஹாசனின் இந்தியன், சாணக்கியன் படங்களில் நடித்திருக்கிறார்.

தேர்தலில் போட்டி
இந்தியில் ரங்கீலா, சத்யா, ஏக் ஹசீனா தீ, பூட் உட்பட பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ள ஊர்மிளா, கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். சேர்ந்த சில நாட்களிலேயே அவருக்கு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தது.

எதிர் செயல்பாடு
இதையடுத்து மும்பை வடக்கு நாடாளுமன்றத் தொகுதியில் அந்தக் கட்சியின் சார்பில் போட்டியிட்டார். பாஜக வேட்பாளரிடம் அதிக ஓட்டு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். கட்சிக்குள் தனக்கு எதிராக சிலர் செயல்பட்டதாகவும் அதனாலேயே தான் தோற்றதாகவும் அப்போது அவர் புகார் கூறியிருந்தார்.

சிவ சேனா கட்சி
பின்னர், அந்தக் கட்சியில் இருந்து திடீரென விலகினார். இந்நிலையில் அவர் சிவசேனா கட்சியில் சேர இருக்கிறார் என்று கூறப்பட்டது. அவருக்கு அந்தக் கட்சி, சட்டமேலவை உறுப்பினர் வாய்ப்பை வழங்கியுள்ளது. ஆளுநர் ஒதுக்கீட்டில் ஊர்மிளா உள்ளிட்ட 12 பேரை சட்ட மேலவை உறுப்பினர்களாக்கி உள்ளது.

உத்தவ் தாக்கரே
இந்நிலையில் நடிகை ஊர்மிளா, இன்று அந்த கட்சியில் இணைந்தார். சிவசேனா கட்சியின் தலைவரும் மகாராஷ்ட்ரா மாநில முதலமைச்சருமான உத்தவ் தாக்கரே முன்னிலையில் அவர் சிவசேனா கட்சியில் இணைந்தார். உத்தவ் தாக்கரே மனைவி ராஷ்மி தாக்கரே மற்றும் கட்சி தலைவர்கள் அவருடன் இருந்தனர்.


Click it and Unblock the Notifications











