பரவுது கொரோனா வைரஸ்... திருமணக் கொண்டாட்டத்தைத் தள்ளி வைத்தார் ஹீரோயின்!
சென்னை: கொரோனா வைரஸ் பரவுவதை அடுத்து திருமணக் கொண்டாட்டத்தைத் தள்ளி வைத்திருக்கிறார் பிரபல நடிகை.
தமிழில், வவ்வால் பசங்க என்ற படத்தில் ஹீரோயினாக நடித்தவர், உத்தரா உன்னி. பரத நாட்டிய கலைஞரான இவர் மலையாள படங்களிலும் நடித்து வருகிறார்.
சென்னை உட்பட பல்வேறு பகுதிகளில் நாட்டிய நிகழ்ச்சிகளை நடத்தி உள்ளார். வெளிநாடுகளிலும் ஏராளமான நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார்.

ஊர்மிளா உன்னி மகள்
இவர் பிரபல மலையாள நடிகை ஊர்மிளா உன்னியின் மகள். ஊர்மிளா, தமிழில் ஜீவா நடித்த யான், சோனியா அகர்வால் நடித்த ஒரு நடிகையின் வாக்குமூலம், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா, ஸ்ருதிஹாசன் நடித்த 7 ஆம் அறிவு உட்பட சில படங்களில் நடித்துள்ளார். மலையாளத்திலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

டெம்பிள் ஸ்டெப்ஸ்
உத்தரா உன்னி, நடிப்பு, நடனத்துடன் கொச்சியில் டெம்பிள் ஸ்டெப்ஸ் என்ற நடனப்பள்ளியை நடத்தி வருகிறார். டிவி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார். பிரபல மலையாள நடிகர் பிஜூமேனன், நடிகை சம்யுக்த வர்மா ஆகியோர் இவர் உறவினர்கள். உத்தராவுக்கும் நிதேஷ் நாயருக்கும் கடந்த சில நாட்களுக்கு முன் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.

திருமண கொண்டாட்டம்
இதில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். இவர்களின் திருமணம் அடுத்த மாதம் கொச்சியில் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் தனது திருமண கொண்டாட்டத்தைத் தள்ளி வைத்துள்ளதாக உத்தரா தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருவதால் தள்ளி வைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தாலிகட்டு
'எங்கள் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக நீங்கள் ஏற்கனவே டிக்கெட் புக் செய்து வைத்திருப்பீங்கள். இருந்தாலும் இதை சொல்வதற்கு வருந்துகிறோம். குறிப்பிட்ட நாளில் எங்களின் தாலிகட்டு நிகழ்ச்சி கோயிலில் வைத்து நடைபெறும். அதுகுறித்த அறிவிப்பை தெரிவிக்கிறோம். அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்' என்று தெரிவித்துள்ளார். இருந்தாலும் அவர் தனது திருமண நாளை தெரிவிக்கவில்லை.


Click it and Unblock the Notifications











