முன்னாள் கணவர் வீட்டு முன்பு உண்ணாவிரதம்-வனிதா கைதாகி விடுதலை

நடிகர் விஜயக்குமார் மற்றும் அவரது 2வது மனைவி மஞ்சுளாவுக்குப் பிறந்தவர் வனிதா. இவருடைய முதல் கணவர் நடிகர் ஆகாஷ். இவர்களது மகன் விஜய் ஸ்ரீஹரி.
விஜய் ஸ்ரீஹரி தொடர்பாக முதலில் வனிதாவுக்கும், விஜயக்குமாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. பின்னர் இந்த மோதல் வனிதாவுக்கும், ஆகாஷுக்கும் இடையிலான தகராறாக மாறியது.
தனது மகனை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரி வருகிறார் வனிதா. ஆனால் மகன் வந்தால் தாராளமாக அழைத்துப் போகட்டும் என்கிறார் ஆகாஷ். ஆனால் விஜய் ஸ்ரீஹரியோ தனது தாயுடன் போக மறுத்து வருகிறான்.
இந்த நிலையில், வாரந்தோறும் வெள்ளிக்கிழமை மாலை முதல் திங்கள்கிழமை காலை வரை வனிதாவோடு ஸ்ரீஹரி இருக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இருப்பினும் கோர்ட் உத்தரவிட்டும் மகனை தன்னிடம் ஒப்படைக்கவில்லை என்று கூறி வருகிறார் வனிதா.
இதுதொடர்பாக சற்று இடைவெளி விட்டிருந்த வனிதா தற்போது பிரச்சினையை மீண்டும் கையில் எடுத்துள்ளார்.
விஜய் ஸ்ரீஹரியிடம் போலீஸ் தரப்பில் பல மணி நேரம் கவுன்சிலிங் நடத்தியும், அவன் தனது தந்தையுடன்தான் இருப்பேன் என்று கூறி விட்டான்.
இந்த நிலையில் நேற்று ஆகாஷ் வீட்டுக்குச் சென்ற வனிதா அவரது வீட்டு முன்பு தனது 2வது கணவருக்குப் பிறந்த மகளுடன் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்தார்.
வனிதாவின் 2வது கணவர் இந்தப் போராட்டத்தில் பங்கேற்கவில்லை. மாறாக சற்று தொலைவில் நின்று கொண்டார்.
வனிதாவின் இந்தப் போராட்டத்தால் நடிகர் ஆகாஷ் வீட்டைப் பூட்டி விட்டு வெளியே கிளம்பிப் போய் விட்டார்.
இந்த நிலையில் போலீஸார் அங்கு விரைந்து வந்தனர். அனுமதியில்லாமல் போராட்டம் நடத்தியதாக கூறி வனிதாவை கைது செய்து காவல் நிலையத்திற்குக் கூட்டிச் சென்றனர். பின்னர் அவரை அங்கு வைத்து கடுமையாக எச்சரித்தனர். இதுபோல இனிமேல் அனுமதி இல்லாமல் போராட்டம் நடத்தி பரபரப்பை ஏற்படுத்தினால் அடுத்து கைது செய்து சிறையில் தள்ளி விடுவோம் என்று கடுமையாக எச்சரித்து அவரை மாலையில் விடுவித்து அனுப்பி வைத்தனர்.
ஆனால் தான் சட்ட ரீதியாக தொடர்ந்து போராடப் போவதாக வனிதா கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











