Vanitha : பீட்டர் பால் மரணம்.. வருத்தம் தெரிவித்த வனிதா விஜயகுமார்!
சென்னை : நடிகை வனிதா விஜயகுமாரின் 3வது கணவர் பீட்டர் பால் உடல்நலக்குறைவால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2020ம் ஆண்டில் பீட்டர் பாலை கொரோனா காலத்தில் வனிதா விஜயகுமார், வீட்டிலேயே எளிமையாக திருமணம் செய்துக் கொண்டார்.
பீட்டர் பால் அதிகமான குடிப்பழக்கத்தில் உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்ததாக தற்போது தகவல்கள் தெரிவிக்கின்றன.

பீட்டர் பால் மரணத்திற்கு வனிதா அஞ்சலி : விஜயகுமார் மற்றும் மஞ்சுளா தம்பதியின் மகளான வனிதா விஜயகுமார், தன்னுடைய குடும்பத்தினருடன் ஏற்பட்ட பிணக்கு காரணமாக குடும்பத்தை விட்டு பிரிந்து தனித்து வாழ்ந்து வருகிறார். இவர் கடந்த 2000ம் ஆண்டில் ஆகாஷ் என்பவரை திருமணம் செய்து 2007ம் ஆண்டில் விவாகரத்து பெற்றார். தொடர்ந்து பிக்பாஸ் பிரபலம் ராபர்ட் மாஸ்டரை காதலித்து அவரையும் பிரேக் அப் செய்தார். தொடர்ந்து தன்னுடைய மகள்களுடன் தனித்து வாழ்ந்து வந்தார்.
இந்நிலையில் அவரது யூடியூப் சேனலுக்கு உதவி செய்த பீட்டர் பாலை காதலித்து கடந்த 2000ம் ஆண்டில் கொரோனா காலத்தில் தன்னுடைய வீட்டிலேயே திருமணம் செய்துக் கொண்டார். நண்பர்கள் சூழ எளிமையாக இவர்களது திருமணம் நடைபெற்றது. இந்தத் திருமணம் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து பீட்டர் பாலின் மனைவி எலிசபெத் இந்த திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தார். தன்னை பீட்டர் பால் முறையாக விவாகரத்து செய்யவில்லை என்று அவர் புகார் தெரிவித்தார்.
இந்த சம்பவம் அப்போது அதிகப்படியான சர்ச்சைகளை ஏற்படுத்தியது. பீட்டர் பாலும் வனிதாவும் சில காலங்கள் சேர்ந்து வாழ்ந்த நிலையில், அவர்களுக்குள் சில மாதங்களிலேயே மனக்கசப்பு ஏற்பட்டது. பீட்டர் பால் அதிகப்படியான குடிப்பழக்கம் மற்றும் அதிகப்படியான பொய் பேசியதாக கூறிய வனிதா விஜயகுமார், அவரை பிரிந்தார். இந்நிலையில் அதிகப்படியான குடிப்பழக்கத்தால் உடல்நலக்குறைவு காரணமாக பீட்டர் பால், தற்போது உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் பீட்டர் பால் மரணத்திற்கு வனிதா விஜயகுமார், தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் நீயே உனக்கு உதவினால்தான் கடவுளும் உனக்கு உதவுவார் என்று தனது அம்மா அடிக்கடி தன்னிடம் சொல்வார் என்று தெரிவித்துள்ளார். முக்கியமான முடிவெடுக்கும் நேரத்தில் எல்லாரும் அவரவர் பாதையை தேர்ந்தெடுப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

நீங்கள் சந்தித்த துயரங்களுடன் போராடி தற்போது அமைதியை அடைந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். இந்த உலகத்தை விட்டு சென்றதற்காக வருத்தப்படும் அதே நேரத்தில் அமைதியான இடத்தில் இருப்பீர்கள் என்று எனக்குத் தெரியும். எங்கே இருந்தாலும் மகிழ்ச்சியாக இருங்கள் என்று வனிதா விஜயகுமார் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். பீட்டர் பால் மரணத்திற்கு நேரில் சென்று வனிதா அஞ்சலி செலுத்துவாரா என்ற கேள்வி எழுந்த நிலையில், அறிக்கை மூலம் அவர் தனது இரங்கலை வெளிப்படுத்தியுள்ளார்.


Click it and Unblock the Notifications











