Varalaxmi: என்ஐஏ விசாரணைக்கு ஆஜராக சம்மன்.. பொய்யான தகவல் என வரலட்சுமி சரத்குமார் அறிக்கை!
சென்னை: நடிகை வரலட்சுமி சரத்குமார், தொடர்ந்து தென்னிந்திய அளவில் சிறப்பான படங்களில் நடித்து வருகிறார்.
விஜய், விஷால் உள்ளிட்ட தமிழின் முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ள வரலட்சுமி, சரத்குமாருக்கும் அவரது மூத்த மனைவிக்கும் பிறந்தவர்.

என்ஐஏ சம்மன் அளித்ததாக வெளியான தகவல் பொய்யானது என வரலட்சுமி அறிக்கை: நடிகர் சரத்குமாருக்கும் அவரது முதல் மனைவிக்கும் பிறந்தவர் வரலட்சுமி. சிம்புவுடன் போடா போடி படத்தின்மூலம் தன்னுடைய சினிமா கேரியரை துவங்கியவர் இவர். இந்தப் படத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கியிருந்தார். முதல் படம் கொடுத்த வரவேற்பை தொடர்ந்து, விஜய், விஷால் என முன்னணி தமிழ் நடிகர்களுடன் நடித்து வருகிறார் வரலட்சுமி சரத்குமார். முன்னதாக ஷங்கர் உள்ளிட்டவர்களின் படங்களில் நடிக்க சான்ஸ் கிடைத்தும் தான் நடிக்கவில்லை என்று பேட்டியொன்றில் தெரிவித்திருந்தார்.
தன்னுடைய அப்பா சரத்குமார், தான் நடிக்க முதலில் பர்மிஷன் கொடுக்கவில்லை என்றும், அவரை சமாதானப்படுத்தி தான் நடிக்க வந்ததாகவும் அவர் கூறியிருந்தார். தன்னுடைய மிரட்டலான படங்களின்மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ள வரலட்சுமி, தொடர்ந்து தென்னிந்திய அளவில் படங்களில் நடித்து வருகிறார். அடுத்தடுத்த வெற்றிக் கூட்டணியில் இவரை பார்க்க முடிகிறது. தற்போது தன்னுடைய உடல் எடையை கணிசமாக குறைத்து ஸ்லிம்மாகியுள்ளார் வரலட்சுமி. இவரது திருமணம் குறித்த கேள்விகள் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் என்ஐஏ வரலட்சுமி சரத்குமாருக்கு நேரில் ஆஜராக சம்மன் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியானது. கேரள மாநிலம் விழிஞ்சம் கடற்கரையில் 300 கிலோ போதைப் பொருட்கள் மற்றும் ஆயுதங்கள் கடத்தப்பட்ட வழக்கில் ஆதிலிங்கம் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் நடிகை வரலட்சுமியின் முன்னாள் உதவியாளர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் போதைக் கடத்தலில் கிடைத்த பணத்தை அவர் சினிமாவில் முதலீடு செய்ததும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் இந்தத் தகவலை நடிகை வரலட்சுமி மறுத்துள்ளார். சமூகவலைதளத்தில் அவர் இதுகுறித்து அறிக்கையும் வெளியிட்டுள்ளார். இந்தத் தகவலில் எந்த உண்மையும் இல்லை என்றும் தனக்கு எந்தவித சம்மனும் என்ஐஏ மூலம் அளிக்கப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். ஆதிலிங்கம் தன்னுடைய மேனேஜராக மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஃப்ரீலான்சராக பணியாற்றியதாகவும் அதன்பின்பு அவருடன் எத்தகைய தொடர்பும் இல்லை என்றும் வரலட்சுமி சரத்குமார் தெளிவுப்படுத்தியுள்ளார்.
இந்த தகவல் குறித்து கேள்விப்பட்டதும் தான் மிகுந்த அதிர்ச்சி அடைந்ததாகவும், இந்த விஷயத்தில் அரசுக்கு எந்தவகையிலும் உதவி செய்ய தான் காத்திருப்பதாகவும் அவர் மேலும் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். தற்காலங்களில் பிரபலங்கள் எந்தவிதமான உண்மையும் இல்லாத சம்பவங்களில் தொடர்பு படுத்தப்படுவது வாடிக்கையாகியுள்ளதாகவும் அவர் வருத்தம் தெரிவித்துள்ளார். உண்மை தன்மையை அறிந்து இத்தகைய செய்திகளை வெளியிடுவதே சிறப்பாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











