அட்ஜஸ்ட்மெண்ட்டுக்கு அழைக்கும் விஷயம்.. ரஜினியின் மனைவி, மகளிடம் சென்று கேளுங்கள் - விசித்ரா காட்டம்
சென்னை: மலையாள திரையுலகுக்கு பெரும் தலைவலியாக வந்திருக்கிறது ஹேமா கமிட்டி அறிக்கை. ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா தலைமையிலான கமிட்டி பெண் கலைஞர்களிடம் நடத்திய விசாரணையில், தங்களுக்கு பாலியல் தொல்லை ஏற்பட்டிருப்பதாக பலர் கூறியிருக்கிறார். இதனையடுத்து அந்தத் துறையில் இருக்கும் முக்கியமான இயக்குநர்கள், நடிகர்களின் தலைகள் உருள ஆரம்பித்திருக்கின்றன. சூழல் இப்படி இருக்க தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்த விசித்ரா காட்டமாக பேசியிருக்கிறார்.
கேரள திரையுலகை புரட்டி போடும் புயலாக வந்திருக்கிறது ஹேமா கமிட்டி அறிக்கை. அந்தக் கமிட்டியிடம் பேசிய பெண் கலைஞர்கள் தங்களுக்கு பாலியல் தொல்லை நடந்திருப்பதாக கூறியிருக்கிறார்கள். இதனையடுத்து AMMA அமைப்பு கூண்டோடு கலைக்கப்பட்டிருக்கிறது. கேரளாவில் அப்படி கமிட்டி அமைக்கப்பட்டதை அடுத்து தமிழிலும் அமைக்க வேண்டும் என்று குரல்கள் வலுக்க தொடங்கியிருக்கின்றன. இந்தச் சம்பவம் குறித்து தமிழ் சினிமா நடிகர்கள், நடிகைகளிடமும் கருத்துக்கள் கேட்கப்பட்டுவருகின்றன.

விசித்ரா பேட்டி: அந்தவகையில் ரஜினிகாந்த்திடம் இதுகுறித்து கேட்கப்பட்டபோது, அதுபற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று நழுவிவிட்டார். அது பலரிடம் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில் தமிழ், மலையாளம் மொழிகளில் நடித்த நடிகை விசித்ரா இதுகுறித்து தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "எந்த ஒரு முன்னணி நடிகரும் ஹேமா கமிட்டி பற்றி பேசுவதற்கு முன்வரவில்லை. அப்படி பார்க்கும்போது மீடியாக்கள் தவறான ஆட்களிடம் சென்று இதுகுறித்து கேட்கிறார்கள் என்றே கேட்கிறேன்.
ரஜினி மனைவி, மகள்களிடம் கேளுங்கள்: முன்னணி நடிகர்களின் மனைவிகளிடம் சென்று இதுபற்றி கேட்க வேண்டும். அவர்கள் முதலில் இதற்கு குரல் கொடுக்கிறார்களா; ஹேமா கமிட்டி பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று கேளுங்கள். ரஜினியிடம் சென்று கேட்கிறார்கள். ஆனால் அவரது மனைவி லதா, மகள்கள் ஐஸ்வர்யா, சௌந்தர்யா ஆகியோரிடம் சென்று கேட்க வேண்டும். ரஜினிகாந்த் இப்போது தனது படம் நல்லபடியாக ரிலீஸ் ஆக வேண்டுமே என்ற டென்ஷனில் இருக்கிறார்.
எங்களுக்கு தெரியும்: மலையாளத்தில் இந்த விஷயம் முதன்முறையாக ஆரம்பித்தது. ஆனால் நாங்கள் அதற்காக முன்வந்து குரல் கொடுக்கிறோம். பேட்டிகள் தருகிறோம். யார் சொல்லியும் நடிகைகளான நாங்கள் இதை செய்யவில்லை. ஒரு பெண்ணாக இன்னொரு பெண் படக்கூடிய வலியும், கஷ்டமும் எங்களுக்கு நன்றாகவே தெரியும். அதனால்தான் நாங்களாக முன்வந்து இதைப் பற்றி பேசுகிறோம். வெளியே பேச முன்வராதவர்களுக்கு மனசாட்சி இல்லை என்றால் நாம் என்ன செய்யு முடியும்.
சொல்லிக்கொண்டிருக்க முடியாது: இதுபற்றி பேசுங்கள் என்று ஒவ்வொருவரிடமும் சொல்லிக்கொண்டிருக்க முடியாது. முதலில் நடிகர்கள்தான் நடிகைகளுக்கு ஆதரவாக நிற்க வேண்டும். எத்தனை நடிகைகள் இதுபற்றி ஓபனாக தைரியமாக பேசியிருக்கிறார்கள். ஏன் பலரும் புகார்களாக கொடுக்கவில்லை. சம்பவம் நடந்தபோதே சொல்லியிருக்கலாமே என்று கேட்கிறார்கள். ஆனால் எனக்கு நடந்த சம்பவத்தின்போது நடிகர் சங்கம், காவல் நிலையத்துக்கு எடுத்து சென்றேன். ஆனால் எதுவுமே நடக்கவில்லையே.
தப்பித்துக்கொள்கிறார்கள்: நடிகர்கள் பிரபலமானவுடன் அவர்களுக்கு அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் நல்ல பழக்கமாகிவிடுகிறார்கள். அதனை பயன்படுத்தி இப்படிப்பட்ட பிரச்னைகளிலிருந்து அவர்கள் தப்பித்துக்கொள்கிறார்கள்" என்றார். முன்னதாக பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசனில் கலந்துகொண்டபோது, தனக்கு ஒரு தெலுங்கு படத்தில் பெரிய ஹீரோ பாலியல் தொல்லை கொடுக்கப்பார்த்தார் என்று விசித்ரா கூறியிருந்ததும்; அந்த ஹீரோ பாலகிருஷ்ணா என்று பலர் பேசியதும் நினைவுகூரத்தக்கது.


Click it and Unblock the Notifications











