2 மாசத்துல ஷூட்டிங் வாங்கன்னு சொன்னாரு.. அதுக்குள்ள இப்படியா? விக்ரம் சுகுமாரன் மறைவு.. விஜி வேதனை!
சென்னை: மதயானைக்கூட்டம், இராவணக்கோட்டம் போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் விக்ரம் சுகுமாரன் மாரடைப்பு காரணமாக நேற்று இரவு உயிரிழந்தார். அவரது அகால மரணம் பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இந்த செய்தி கேட்டு வேதனை அடைந்த நடிகை விஜி சந்திரசேகர், அவரது மரணத்தை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை, இரண்டு மாதத்தில் ஷூட்டிங்கிற்கு வாங்கனு சொன்னாரு அதற்குள் இப்படி ஆகிவிட்டது என கண் கலங்கி பேசி உள்ளார்.
ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த விக்ரம் சுகுமாரன், பாலு மஹேந்திராவிடம் உதவி இயக்குநராக பணியாற்றினார். இதையடுத்து, 2013 ஆம் ஆண்டு வெளியான மதயானைக்கூட்டம் படத்தை இயக்கி இயக்குநராக மாறினார். இந்த படத்தில் கதிர், ஓவியா, விஜி சந்திரசேகர் என பலர் நடித்திருந்தனர். இதையடுத்து, கடந்த 2023ம் ஆண்டு சாந்தனுவை வைத்து ராணுவக்கோட்டம் என்ற படத்தை இயக்கினார். இந்த இரண்டு படங்களும் நல்ல விமர்சனத்தை பெற்றன. இவர் இயக்குநராக மட்டுமில்லாமல் பொல்லாதவன் மற்றும் கொடி வீரன் போன்ற படங்களில் நடித்தும் உள்ளார்
திடீர் மரணம்: நேற்று முன் தினம் மதுரைக்கு சென்ற விக்ரம் சுகுமாரன், அங்கு தயாரிப்பாளர் ஒருவரிடம் தனது அடுத்த படத்துக்கான கதையை சொல்லிவிட்டு, பேருந்தில் ஊர் திரும்பும் போது அவருக்கு லேசான நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து, அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.ஆனால், இவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவரது உடல் மதுரையில் இருந்து சென்னை அடுத்த ரெட்ஹில்சில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அவரது மறைவுக்கு திரைபிரபலங்கள், ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அன்பு சகோதரரே: விக்ரம் சுகுமாரன் இயக்கிய ராணுவக் கோட்டம் படத்தில் ஹீரோவாக நடித்த நடிகர் சாந்தனு தனது எக்ஸ் தளப்பக்கத்தில் உருக்கமாக தனது இரங்கலை தெரிவித்துள்ளார். "அன்புள்ள சகோதரரே, என்னைப் பிரியப்படுத்துங்கள். உங்களிடமிருந்து நான் நிறைய கற்றுக்கொண்டேன், ஒவ்வொரு தருணத்தையும் எப்போதும் போற்றுவேன். மிக விரைவில் போய்விட்டீர்களே.. உங்களை நான் மிகவும் மிஸ் பண்ணுவோம்" என வருத்தத்துடன் பதிவிட்டுள்ளார்.
நம்பவே முடியல: அதே போல, மதயானை கூட்டம் படத்தில் நடித்த நடிகை விஜி சந்திரசேகர் உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இயக்குநர் விக்ரம் சுகுமாரன் இறந்தது பெரும் அதிர்ச்சியாக இருக்கிறது. அவர் இயக்கிய மதயானைகூட்டத்தில் திரைப்படத்தில் நான் நடித்து இருக்கிறேன். எனக்கு மிகப்பெரிய பெயரை அந்த திரைப்படம் வாங்கி கொடுத்தது. மிகவும் திறமையான இயக்குநர் அவர், இரண்டு மாதத்திற்கு முன் எனக்கு ஃபோன் செய்து, நல்ல கதை ரெடியாகிவிட்டது, இன்னும் இரண்டு மாதத்தில் நிச்சயம் படம் பண்ணுவோம் என்று சொன்னார். எனக்கு ஒன்றுமே புரியவில்லை, எல்லாருக்கும் ஏன் இப்படி நடக்கிறது என்று தெரியவில்லை. இன்று இருப்பவர்கள், நாளை இல்லை எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறது. அவரின் குடும்பத்திற்கும், திரைப்பட நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன். அவர் இறந்த செய்தியை என்னால் நம்பவே முடியவில்லை, இதன் மூலம் ஒரு விஷயத்தை நான் சொல்லிக் கொள்கிறேன்.
மன அழுத்தத்தோடு, இரவும் பகலாக வேலை செய்பவர்களுக்குத்தான், இப்படி அகால மரணங்கள் நடக்கிறது. அனைவருமே அவர்களின் உடல் ஆரோக்கியத்தை பார்த்துக்கொள்ளுங்கள். வாழ்க்கையை நினைக்கும் போதே மிகவும் பயமாக இருக்கிறது. மன அழுத்தத்திற்கான காரணம் என்ன என்று உங்களுக்கு நன்றாக தெரியும், அந்த அழுத்தத்தை தவித்து விட்டு, உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுங்கள் என்று வேதனையுடன் பேசி இருந்தார்.


Click it and Unblock the Notifications











