மகள் செத்தது பெருமையா? ரிதன்யா தற்கொலை.. கொந்தளித்த வினோதினி!
சென்னை: திருப்பூரை சேர்ந்த ரிதன்யா, திருமணமான 3 மாதங்களில் வரதட்சனை கொடுமை தாங்க முடியாமல் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதில், சம்பந்தப்பட்ட கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். ரிதன்யாவின் தற்கொலை குறித்து ஊடகத்தில் பேசிய ரிதன்யாவின் அண்ணாதுரை, மாற்று வாழ்க்கை அமைத்துக் கொள்வதெல்லாம் அவரவர் விருப்பம். என் மகள் ஒருத்தனுக்கு ஒருத்தி என்று சொல்லி நினைத்து இறந்துவிட்டாள். அதனால் என் பெண்ணை இழந்தால் கூட எனக்கு பெருமையாகத்தான் இருக்கிறது.
எல்லா பெண்களும் அப்படி இருக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. வாழ்வதற்கு வழி இருக்கிறது. ஆனால் இந்த தவறான முடிவை மட்டும் யாரும் எடுத்துவிடாதீர்கள் என்று பேசி இருந்தார். அவரின் பேச்சு பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கும் நிலையில் இது குறித்து நடிகை வினோதினி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
நடிகை வினோதினி: ரிதன்யா வழக்கில் என்ன நடந்திருக்கிறது என்றால், திருமணத்திற்கு 500 சவரன் நகை சொல்லி 300 சவரன் நகையை கொடுத்திருக்கிறார்கள். அதில், 200 சவரன் நகை தரவில்லை என்பதால், குடும்பத்தில் இருக்கும் மாமனார், மாமியார் மன ரீதியாக அழுத்தம் கொடுத்து இருக்கிறார்கள். அதே போல, கணவனும் உடல் ரீதியாக அவளுக்கு விருப்பம் இல்லை என்றாலும் துன்புறுத்தி இருக்கிறான். இதுபற்றி அந்தப் பெண் அம்மாவிடம் சொன்ன போதும், 15 நாளில் ஒரு குடும்பத்தை பற்றி எதுவும் தெரிந்து கொள்ள முடியாது. திருமணமானால் அப்படி, இப்படித்தான் இருக்கும் என்று பேசி அவரை சமாதானப்படுத்தி மீண்டும் அதே குடும்பத்திற்குள்ளேயே அனுப்பி வைத்து இருக்கிறார்கள்.

ஒருவனுக்கு ஒருத்தி: ரிதன்யா படித்த பெண்ணாக இருந்தாலும், வேலைக்கும் சென்றது இல்லை, வெளி உலகம் தெரியாமலே அந்தப் பெண் இருந்திருக்கிறாள். அதனால் தான் இப்படி ஒரு முடிவை எடுத்திருக்கிறார். அவருடைய அப்பாவும் என்னுடைய மகள் ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழ்ந்து இப்படி ஒரு முடிவை எடுத்து விட்டால் அது எனக்கு பெருமையாக இருக்கிறது என்று பேசி இருக்கிறார். அவரின் இந்த மனநிலை தான், ரிதன்யா இந்த முடிவுவை எடுக்க முக்கிய காரணம். மாடலாக உடை அணிவதும், நள்ளிரவு தனியாக செல்வது எல்லாம் ஒரு பெண் சுதந்திரமாக இருக்கிறார் என்று அர்த்தம் இல்லை. அவளுக்கு பிரச்சனைகள் ஏற்படும் போது, அவள் அந்த பிரச்சனைகள் எப்படி சமாளிக்கிறாள் எப்படி கையாளுகிறாள், தெளிவான முடிவை அவள் எப்படி எடுக்கிறாள் என்பதுதான் ஒரு பெண்ணின் சுதந்திரமே இருக்கிறது.
கௌரவத்திற்காக திருமணம்: ஆனால், ரிதன்யாவின் அப்பா பேச்சைக் கேட்கும்போது அவர் அப்படி எந்த ஒரு சுதந்திரத்தையும் அந்த பெண்ணிற்கு கொடுத்தது போல தெரியவில்லை. தன்னுடைய கௌரவத்தையும், சாதி பெருமையையும் நிலை நாட்டுவதற்காக, பெருகி இடத்தில் சம்பந்தம் பேசி, நகை, பணம், கார் என வரதட்சனை கொடுத்து இருக்கிறார். வரதட்சனை கொடுப்பதும் தவறு, வரதட்சனை வாங்குவதும் தவறு. அப்படி இருக்கும் போது இப்படி அவர்கள் வரதட்சணை கொடுத்தார்கள் விருப்பப்பட்டு கொடுக்கிறேன் என்று சொன்னாலும் அது வரதட்சணை தானே.
ஆதங்கம்: ரிதன்யா தற்கொலை செய்து கொண்டதால், 300 சவரன் நகை கொடுத்த விஷயம் வெளியில் வந்து உள்ளது. இல்லை என்றால், இந்த வரதட்சனை விஷயமே வெளியில் வந்து இருக்காது. இருப்பவர்கள் கொடுக்கிறார்கள், இல்லாதவர்கள் என்ன செய்வார்கள். ரிதன்யா தற்கொலைக்கு காரணமானவர்களை போலீசார் கைது செய்து விட்டார்கள். ஆனால், வரதட்சணை கொடுத்ததற்காக ரிதன்யாவின் குடும்பத்தையும் கைது செய்ய வேண்டும் என்று நடிகை வினோதினி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.


Click it and Unblock the Notifications











