விஜய் மீது அதுதான் வருத்தம்.. கமல்ஹாசன் விளையாடுகிறார்.. ஓபனாக பேசிய பிரபல நடிகை
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கியிருக்கும் விஜய் இப்போது கோவையில் இருக்கிறார். கட்சியின் பூத் கமிட்டிகளுக்கான கூட்டத்துக்காக அங்கு சென்றிருக்கும் அவர் நேற்று தன்னுடைய தொண்டர்கள் மத்தியில் உரையாடினார். அந்த உரையாடலிலும் வழக்கம்போல் ஆளும் தரப்புகளை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார் அவர். இந்நிலையில் அவர் குறித்து பிரபல நடிகை வினோதினி பேசியிருக்கும் விஷயம் ட்ரெண்டாகியிருக்கிறது.
வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் படத்தில் நடித்த விஜய் இப்போது ஜன நாயகன் திரைப்படத்தில் நடித்துவருகிறார். ஹெச்.வினோத் இயக்கிவரும் அந்தப் படம் அரசியல் ஜானரில் உருவாகிவருகிறது. பூஜா ஹெக்டே, பாபி தியோல் உள்ளிட்டோர் நடிக்க அனிருத் இசையமைத்துவருகிறார். அடுத்த வருடம் ஜனவரி ஒன்பதாம் தேதி படம் ரிலீஸாகவிருக்கிறது. இந்தப் படம்தான் விஜய்க்கு கடைசி படம் என்று கூறப்படுவது குறிப்பிடத்தக்கது. இதனால் அவரது ரசிகர்கள் கொஞ்சம் வருத்தம் அடைந்திருக்கிறார்கள்.
தளபதி டூ தலைவர் விஜய்: அதேசமயம் அவர்களுக்கு இன்னொரு பக்கம் மகிழ்ச்சி தரும் விதமாக அரசியலுக்கு வந்து தீவிரமாக களமாட ஆரம்பித்திருக்கிறார் விஜய். இதன் காரணமாக அவரை தளபதியிலிருந்து தலைவர் என்கிற இடத்துக்கு நகர்த்தி தங்களையும் ரசிகர்கள் என்ற இடத்திலிருந்து தொண்டர்கள் என்ற இடத்துக்கும் ரசிகர்கள் நகர்ந்திருக்கிறார்கள். எப்படியாவது சட்டப்பேரவை தேர்தலில் விஜய்யை வெல்ல வைத்து மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்று முனைப்பில் இருக்கிறார்கள் அவர்கள்.

தீவிர களமாடல்: அரசியல் கட்சி ஆரம்பித்த விஜய் ஆரம்பத்தில் பெரிதாக பொதுக்கூட்டங்களில் கலந்துகொள்ளாமல் இருந்தார். அவரது அந்த மாதிரியான போக்கு விமர்சனங்களையும் கிண்டலையும் சந்தித்தது. சூழல் இப்படி இருக்க கடந்த சில மாதங்களாக தொடர்ந்து விழாக்கள், கூட்டங்களில் கலந்துகொண்டு திமுகவை கடுமையாக விமர்சனம் செய்ய ஆரம்பித்திருக்கிறார். நேற்று நடந்த பூத் கமிட்டி ஏஜெண்ட்டுகளுக்கான கூட்டத்திலும் பேசிய விஜய்; தமிழ்நாடு அரசை விமர்சனம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
வினோதினி பேட்டி: இந்நிலையில் நடிகையும், மக்கள் நீதி மய்யத்தின் முன்னாள் உறுப்பினருமான நடிகை வினோதினி சமீபத்தில் அளித்த பேட்டியில் விஜய் குறித்து பேசியிருக்கிறார். அவர் அளித்த அந்தப் பேட்டியில், "மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து விலகிய பிறகு என்னுடைய நலம் விரும்பி ஒருவர் நீங்கள் அந்தக் கட்சியிலிருந்து வந்த பிறகும் தொடர்ந்து குரல் கொடுத்துக்கொண்டுதான் இருக்கிறீர்கள். ஆனால் சினிமாவை சேர்ந்தவர்கள் அனைத்துக்கும் அப்பாற்பட்டு இருக்கலாமே என்று கூறினார். ஆனால் நான் ஒரு நடிகை என்பதற்கு முன்னதாகவே ஒரு இந்திய பிரஜை. முன்பெல்லாம் ராமாயணத்தை கிண்டல் செய்து நாடகம் போட்டிருக்கிறோம். இப்போது அப்படி செய்தால் தவறு என்று சொல்கிறார்கள்.
எந்தக் கட்சியிலும் இல்லை: நான் இப்போது எந்தக் கட்சியிலும் உறுப்பினராக இல்லை. ஒரு குறிப்பிட்ட கட்சியில் இணைந்தது தவறுதான். அது நான் செய்த பிழைதான். எனக்கு அழைப்பு வந்தது சேர்ந்தேன். பணியாற்றினேன். சோஷியல் மீடியாவில் கம்பு சுத்தாமல் நேராக மக்களை சந்திக்க எனக்கு இருக்கிறதா என்றால் அது இல்லை. நானும் கமலும் நிறைய அரசியல் பேசியிருக்கிறோம். மூன்று முறை அவரை நேரில் சந்தித்து பேச வாய்ப்பும் வந்தது. அப்போது அவர் சொன்னதில் முக்கியம் என்னவென்றால், 'நாம் செயற்பாட்டாளராக இல்லாமல் அரசியல் செய்ய வேண்டும்' என்று கூறினார். ஆனால் எனக்கு இருப்பதோ செயற்பாட்டாளர் மூளைதான். அதுவும் நான் அந்தக் கட்சியிலிருந்து வெளியே வர முக்கியமான காரணமாக அமைந்துவிட்டது. கமல் ஹாசன் அரசியல் விளையாட்டை விளையாடுகிறார்.
விஜய் மீது வருத்தம்: விஜய்யை பொறுத்தவரை அனைத்தையும் மீறி கட்சி ஆரம்பித்திருக்கிறார். முதலில் அவருடைய கரியர். அதில் கிடைக்கும் சம்பாத்தியத்தை விட்டுவிட்டு வந்திருப்பதாக சொல்கிறார்கள். அதெல்லாம் இல்லை. ஒரு பிளான் செய்துதான் யாராக இருந்தாலும் அரசியலுக்கு வருவார்கள். இதற்கு முன்னர் அவர் 15 வருடங்களாக நலத்திட்டங்களை செய்திருக்கிறார். இன்று கட்சி ஆரம்பித்திருக்கிறார். அதனை தியாகமாக பார்க்காமல் மக்களுக்கு செய்யும் கடமையாக, சேவையாக பார்க்க வேண்டும். சினிமாவில் அவர் மீது எனக்கு ஒரு வருத்தம் இருக்கிறது. அதாவது அவர் மாதிரி ஒரு டான்ஸர் கிடையாது. என்ட்டெர்டெயின்மென்ட் மற்றும் காமெடி எல்லாம் அவரை மாதிரி செய்ய முடியாது. அதையெல்லாம் இப்போது அவர் விட்டிருப்பதால் அவரது படங்களை இனி பார்க்க முடியாது என்பதுதான் வருத்தம்" என்றார்.


Click it and Unblock the Notifications











