கவுண்டமணிக்கிட்ட உஷாரா இருக்கணும்.. Casting Couch பிரச்சனை.. நடிகை ஒய். விஜயா பளிச் பேட்டி!
சென்னை: ஆச்சி மனோரமாவை போலவே ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்த நடிகை ஒய். விஜயா சமீபத்தில் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் சினிமாவில் நடைபெறும் பல விஷயங்களை தன்னுடைய அனுபவத்திலிருந்து பகிர்ந்துள்ளார்.
1974-ஆம் ஆண்டு சிவாஜி நடித்த வாணி ராணி படத்தின் மூலம் சினிமா உலகில் அறிமுகமானவர் நடிகை ஒய். விஜயா.

நடிகர் திலகம் சிவாஜி, மக்கள் திலகம் எம்ஜிஆர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலகநாயகன் கமல்ஹாசன், ரம்யா கிருஷ்ணன், வடிவேலு உள்ளிட்ட பல நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.
1000 படங்கள்: தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் ஒட்டுமொத்தமாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களில் ஹீரோயினாகவும், குணச்சித்திர நடிகையாகவும் வில்லியாகவும் நடித்துள்ளார்.
கவுண்டமணியுடன் பல படங்களில் காமெடி வேடங்களிலும் இவர் கலக்கியுள்ளார். இந்நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டியில், வரவு எட்டணா செலவு பத்தணா, ராஜாதி ராஜா, ராஜகாளி அம்மன், ஆடி வெள்ளி உள்ளிட்ட படங்களில் நடித்த அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.
கவுண்டமணியுடன் ஜாக்கிரதையா இருக்கணும்: காமெடி லெஜன்ட் கவுண்டமணியுடன் நடிக்கும் போது உஷாராக இருக்க வேண்டும் என்றும் இல்லையென்றால் நம்மை கலாய்த்து எடுத்து விடுவார் என்றும் அப்போதெல்லாம் சூட்டிங் ஸ்பாட்டில் கேரவன் எல்லாம் கிடையாது, அனைவரும் ஒரே அறையில் தங்குவோம், சாப்பாடு வந்தால் ஒன்றாக மரத்தடியில் அமர்ந்து கொண்டு உணவு உண்போம், கோ டைரக்டர் சீன் சொன்னால் ஒன்றாக அமர்ந்து கொண்டு கேட்போம், எப்படியாவது சினிமாவில் முன்னுக்கு வர வேண்டும் என்பதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு நடிப்பின் மீதுள்ள ஆர்வத்தை மட்டுமே வெளிப்படுத்தி வந்தோம் எனக் கூறியுள்ளார்.
அட்ஜெஸ்ட்மென்ட் பப்ளிசிட்டி: ஆனால், சமீப காலமாக பெண்கள் காஸ்டிங் கோச் உள்ளிட்ட விவகாரங்களை கிளப்புவது பப்ளிசிட்டிகாகவே எனத் தோன்றுகிறது என்றும் நாங்கள் நடித்த காலத்தில் அதெல்லாம் கிடையவே கிடையாது என தனது அனுபவத்தை கூறியுள்ளார்.
ராஜ காளியம்மன் படத்தில் இவரது கால் விரல்களை வடிவேலு நீட்டி விடுவார். மேலும், எலுமிச்சை பழங்கள் நிறைய வந்து விழுந்து சிஜியில் இவரை கொன்றே தீர்த்து விடும். அதுபோன்ற காட்சிகள் எல்லாம் அப்போது எப்படி படமாக்கினர் என்றெல்லாம் விசாரிக்க மாட்டோம். நடிக்க சொல்வதை, அம்மா - அப்பா சொல்வது போல கேட்டு நடிப்போம். ஆனால், இப்போது வருபவர்கள் எல்லாம் கேள்வி மட்டுமே கேட்கின்றனர் என்றும் நடிப்பை மதிப்பதில்லை என்றும் பேசியுள்ளார்.


Click it and Unblock the Notifications











